QuickDraw with Google

தொடுதிரை வசதி கொண்ட ஒரு மடிக்கணினியை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறேன். ஒருமுறை சில வரைபடங்களை வரைய வேண்டியிருந்தது. “நம்மிடம்தான் தொடுதிரை வசதி இருக்கிறதே? அதனால் எளிதாக வரைந்துவிடலாமே” என்று பார்த்தால், கையிருப்பில் இருந்த மென்பொருட்கள் எவையும் தொடுதிரையில் விரல்களால் ஓட்டி வரைவதற்கு ஒத்துவரவில்லை, அல்லது எனக்கு சரியாக உபயோகிக்கத் தெரியவில்லை.

இணையத்தில் அவ்வாறான மென்பொருட்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்த்தபோது “https://quickdraw.withgoogle.com/” என்ற இணையதளத்தை சென்றடைந்தேன். செயற்கை நுண்ணறிவு சார்ந்து கூகிள் செய்துவரும் பல்வேறு சோதனை முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஏதேனும் ஒரு பொருளை குறிப்பிடுகிறார்கள். அதை நம்மால் இயன்றவரையில் இருபது நொடிகளுக்குள் அவர்கள் காட்டும் வெண்திரையில் வரையவேண்டும். நாம் வரைவதை உடனுக்குடன் கூகிளுக்கு அனுப்பி அதன் கணினி நாம் வரைந்ததை எவ்விதம் புரிந்துகொண்டிருக்கிறது என்பதை நமக்கு திரும்ப சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் பொருளை ஒட்டி ஒன்றை வரைந்துவிட்டால் பெரும்பாலும் அதை சரியான விடையாக ஏற்றுக்கொள்கிறார்கள். அடுத்த‌டுத்தாக‌ ஆறு பொருட்களை இவ்வாறு வரையவேண்டும்.

உதாரணமாக, ஒரு கரடியை வரைய சொன்னார்கள். நான் கரடியின் முகம் மற்றும் உடலை குண்டாக வரைய முற்பட, கூகிள் பின்னூடாக அதை முதலில் ஒரு வட்டம் என்றும் பின்னர் கண் வாய் ஆகியவற்றை வரையும்போது அதை ஒரு ரொட்டி என்றும் அடுத்து உடலை வரைய ஆரம்பிக்கும்போது அதை முகம் என்றும் இறுதியாக கரடி என்றும் கண்டுகொண்டது. விளையாட ஆரம்பித்தபோது, இருபது நொடிகளுக்குள் வரைய வேண்டும் என்பது ஒரு சவாலாக இருந்தது, ஆனால் பழகப்பழக அவர்கள் சொல்வதை பெரும்பாலும் ஐந்து முதல் பத்து நொடிகளுக்குள் வரைந்துவிட முடிகிறது.

அதே சமயம் எல்லாவற்றையும் வரைந்துவிடுகிறேன் என்றும் சொல்லிவிட முடியாது. எவ்வளவு முயன்றும் சொதப்பலில் சென்று முடியும் பொருட்களும் உண்டு. ஒரு வாத்தை வரைந்து அது வாத்துதான் என்று கூகிளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு நான் பட்ட பாடு! ஒருமுறை படகு ஒன்றை வரையப்போய், இல்லை அது பாத் டப் தான் என்று பிடிவாதம் பிடித்தது. ஆனால் இவ்வாறு நாம் சொதப்பும் பொருட்களை ஒழுங்காக வரைந்து கூகிளுக்கு புரியவைத்த மற்றவர்களின் முயற்சிகளையும் கூகிள் பின்னர் காட்டுகிறது. உதாரணமாக, யோகா என்று சொன்னதற்கு, நான் ஒரு மனிதன் சம்மணமிட்டு அமர்ந்து தியானம் செய்வதைப் போல் வரைந்து கூகிளைக் குழப்ப, மற்றவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் போல் வரைந்து வெற்றி பெற்றிருந்தனர்.

மேலும் நாம் வரைந்தவற்றை ஏன் கூகிள் பலவிதமாக நினைத்தது என்பதையும் (கரடியை, வட்டம், ரொட்டி முகம் என்று கண்டுபிடித்து வந்ததைப் போல) கூகிள் பின்னர் காட்டுகிறது. உண்மையில் இது விளையாட்டு போல தோன்றினாலும், நாம் கூகிளுக்கு வரைந்ததை புரிந்துகொள்ள கற்றுக்கொடுக்கிறோம் என்பதுதான் உண்மை. நாம் வரைவதையெல்லாம் பரிசீலித்து அது தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டு வருகிறது.

நாம் வரைந்து கொண்டிருக்கும்போதே, அது தன்னுடைய சிந்தனைப் போக்கை கீழேயே வார்த்தைகளாகவும், ஒலித் துணுக்குகளாகவும் ஆங்கிலத்தில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறது. கேட்பதற்கும் பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாகவும் சில சமயம் பகீர் என்றும் இருக்கிறது. “நான் ஒரு வட்டத்தைப் பார்க்கிறேன், ஒரு ரொட்டியை, ஒரு முகத்தை… ஓ இப்போது அதை ஒரு கரடி என்று கண்டுகொண்டேன்” என்றெல்லாம் சொல்கிறது. சில சமயம் “நான் திணறிவிட்டேன்.. மன்னிக்கவும் என்னால் யூகிக்க முடியவில்லை” என்று நின்றும் விடுகிறது.

இரவு நேரத்தில் தூக்கக்கலக்கத்தில் காரை ஓட்டிச் செல்லும் அனுபவமற்ற ஓட்டுநரைப் போன்று கூகிள் அந்நேரங்களில் தோற்றமளிக்கிறது. தானியங்கி ஓட்டுநராக இந்த இணையதளம் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசிக்கிறேன். “நான் ஒரு புள்ளியைக் காண்கிறேன். இரு புள்ளிகளை, அவை இரு கண்கள், ஒரு மல்லாந்த 8, இரு ஒளிவட்டங்கள். அவை வேகமாக வளர்கின்றன, அவை இரு இருசக்கர வாகனங்கள், ஓ இப்போது அதை நான் ஒரு லாரி என்று கண்டுகொண்டேன்…. டமால் என்று ஒலியை என்னால் கேட்க முடிகிறது”

நாம் வரைந்தவற்றை அழித்து மீண்டும் வரையவும் முடியும், ஆனால் எதுவாக இருந்தாலும் இருபது நொடிகளுக்குள் மட்டுமே. நாம் வரைந்தவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உண்டு. தொடுதிரைக் கணினியில் மட்டுமன்றி கைபேசியிலும் இந்த இணையதளம் நன்கு வேலை செய்கிறது. இணைய இணைப்பு அவசியம். இதை நான் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அவர்களும் எளிதாக இதற்கு வசப்பட்டுவிட்டார்கள். பின்னர் என் குடும்பத்தினரும். இதில் எனக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நான் நன்றாக வரைகிறேன் என்று நண்பர்களும், குடும்பத்தினரும்கூட சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ என் மூத்த மகளுக்கு மட்டும் கூகிள் சிறப்பு சலுகை கொடுக்கிறதோ என்று ஒரு சந்தேகம். நானெல்லாம் ஒரு வட்டம் வரைந்து அதை கூகிளை நம்பவைக்க திணறும்போது, என் மகள் உத்தேசமாக ஒரு கோட்டை இழுத்தாலே “ஓ! அது ஒரு அரண்மனை என்று கண்டுகொண்டேன்” என கூகிள் சொல்கிறது.

குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ள பொழுதுபோக்காக இருக்கிறது. பொருட்களை வரைந்து பழகிக் கொள்வது ஒன்று. கூகிள் அதன் சிந்தனைப் போக்கை சொல்லிச் செல்லும் வகையில் பல புதிய சொற்களும் குழந்தைகளுக்கு (சரி சரி எனக்கும்தான்) அறிமுகமாகின்றன. விதவிதமான பொருட்களை மிகக்குறுகிய நேரத்திற்குள் வரைவது சவாலாகவே இருக்கிறது. முக்கியமாக, ஒரு பொருளை நாம் சரியாக புரிந்துகொள்வதற்கு என்னென்ன விஷயங்களை நோக்குகிறோம் என்பதை தெரிந்து வைத்திருப்பதுதான் இதன் தந்திரமே.

ஒரு குதிரையை அதன் வாலை வைத்தே நாம் அறிந்துகொள்கிறோம். இல்லையென்றால் அது ஒரு கழுதையாக, ஒரு பசுவாக, ஒரு ஆடாகக்கூட தெரிய வாய்ப்பிருக்கிறது. புலியை அதன் உடலிலுள்ள கோடுகளை, பூனையை அதன் மீசை மற்றும் அதன் வாலை வைத்து. பொதுவாகவே ஒரு மிருகத்தின் வாலையும் வாய் அமைப்பையும் வைத்தே அது என்ன மிருகம் என்று நாம் புரிந்துகொள்கிறோம் என்று நினைக்கிறேன். மேலே சொல்லப்பட்ட மிருகங்கள் மட்டுமின்றி நாய் கழுதை, குரங்கு என்று பலவற்றிற்கும் இது பொருந்துகிறது. ஆனால் இது பொதுவிதி என்றும் சொல்லிவிட முடியாது.  ஒரு ஒட்டகச் சிவிங்கியை அதன் கழுத்து உடலுடன் சேருமிடத்தில் உள்ள கோணத்தை வைத்துதான் புரிந்து கொள்கிறோம், இல்லையென்றால் அது டைனோசராகிவிட அதிக வாய்ப்பிருக்கிறது.  ஒரு மருத்துவமனையை வரையச்சொன்னபோது என்னென்னவோ முக்கி, கடைசியில் நான் வரைந்த கட்டிடத்தின் மீது ஹாஸ்பிட்டல் என்று ஆங்கிலத்திலேயே எழுதியபின்னர்தான் விட்டது. ஆனால் இந்த தந்திரம் அடுத்தடுத்த முயற்சிகளில் செல்லுபடியாகவில்லை.

ஒரு பொருளை நாம் என்னென்ன கோணத்தில் பார்த்திருந்திருக்கிறோம் என்பதும் அதை வரைவதிலும் புரிந்துகொள்வதிலும் முக்கிய பங்களிக்கிறது. உதாரணமாக ஒரு கரடியை நான் முதலில் பக்கவாட்டில் நிற்கும் கோணத்தில் வரைய முற்பட்டு தோல்வியடைந்தேன். பின்னர் வெற்றியடைந்த முயற்சிகளை பார்த்தபோது, டெட்டி பியர் வகையிலான முகத்தை நேருக்கு நேராக பார்க்கும் கோணம் வரையவும் புரிந்துகொள்ளவும் எளிதாக இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். ஆனால் திமிங்கலம் பக்கவாட்டில் மட்டுமே வேலைக்கு ஆகும். அதே சமயம் ஒரு சுறாவை அதன் உடலுக்கு கீழே இருந்து அதை மேலே நோக்கும் கோணமே உதவும். டால்ஃபின் தான் இன்னமும் எனக்கு வசப்படவில்லை.

இதைப்போன்று வேறுபல முயற்சிகளையும் கூகிள் செய்துவருகிறது. அவற்றையும் பயன்படுத்திப் பார்க்கவேண்டும்.

இணையதள முகவரி : https://quickdraw.withgoogle.com/
மற்ற முயற்சிகளை அறிய withgoogle என்று கூகிளில் தேடவும். withgoogle..com/ கூகிளுக்குத்தான் கொண்டு செல்கிறது.

ஹரிணி வாசித்த கதை குறித்த ஓர் உரையாடல்

சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களில் ஒரு கொத்தை என் ஏழு வயது மகள் (ஹரிணி) வாசிப்பதற்காக வாங்கினேன். அதிலொரு புத்தகத்தை (தமிழ்) அவளை விட்டு தானாக வாசிக்க சொன்னேன். எழுத்துக்கூட்டி படித்தாளென்றாலும் புரியவில்லை என்று சிறிது நேரத்தில் மூடிவைத்து விட்டாள். பின்னர் நான் அவளுக்கு அதை வாசித்து வாசித்து கதை சொல்ல முற்பட்டேன். அதுவும் சரியாக வரவில்லை. பின்னர், நான் அந்த புத்தகத்தை முதலில் முழுக்க படித்து கதையை மனதில் இருத்திக் கொண்டேன். அதை வாய்மொழியாக அவளுக்கு கதையாக சொன்னேன். பின்னர் அவளை அக்கதையை தானாக படிக்க சொன்னபோது நல்ல பலன் கிடைத்தது. வாசிக்க சிரமப்பட்டாளே தவிர கதையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. 

பின்னர் அதில் அவளுக்கு புரிந்தவற்றை ஒரு நோட்டில் எழுத சொன்னேன். தொடர் வற்புறுத்தலின் பேரில் இன்று காலை மூன்று நான்கு வரிகள் மட்டும் எழுதினாள். படித்துப் பார்த்தபோதுதான் அவள் அதை மனப்பாடம் செய்து எழுத முயன்றிருக்கிறாள் என்று தெரிய வந்தது. பள்ளிக்கல்வியின் தாக்கம்!  சரி, எழுதவேண்டாம், அக்கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய் என்பதை கைபேசியில் உன் குரலில் பதிவு செய் என்றேன். அதிலும் கிட்டத்தட்ட அதையே செய்தாள். அதாவது அக்கதையில் உள்ள வரிகளை அதே போன்று சொல்ல முற்பட்டிருந்தாள். சில வரிகளுக்கு மேல் ஞாபகமில்லாததால் அவளால் மேற்கொண்டு சொல்லமுடியவில்லை. சற்று எரிச்சலும் சலிப்பும் கொண்ட நான் இப்போதைக்கு பேசாமல் விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு ஏறத்தாழ வந்துவிட்டேன். 

பின்னர் பொறுமையாக அவளை அழைத்து, அவளுடன் அக்கதை குறித்து ஒரு உரையாடலை ஆரம்பித்து அதை கைபேசியில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். பின்னர் கேட்டபோது கொஞ்சம் செயற்கையாக இருப்பதாக தோன்றியது. எனக்கும் இதுதான் முதல் அனுபவம் என்பதால் அவ்வளவு இயல்பாக பேசமுடியவில்லை. அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் மேம்படுத்த முயற்சி செய்கிறேன். ஆனால் இம்மாதிரி உரையாடல் வடிவில் பேசும்போது அவளும் சற்று இலகுவாகி பேசினாள். பதிவு செய்யப்படுவது குறித்த கவனம் இருந்தாலும் பெரும்பாலும் சாதாரணமாக பேசினாள் என்றுதான் சொல்லவேண்டும். அவள் எழுதுவதற்கான பயிற்சியை இன்னமும் நன்றாக பெற்றபின் இவற்றை எழுத்தில் பதிவு செய்யலாம் என்று யோசிக்கிறேன். 

கதையை நன்றாக உள்வாங்கியிருக்கிறாள் என்பது தெரிகிறது. பதில் சொல்லும்போது அக்கதையில் உள்ள வாக்கியங்களையும், வார்த்தைகளையுமே பயன்படுத்துகிறாள். அது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். இதன்மூலம் புது வார்த்தைகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் அவளால் முடிகிறது. இம்மாதிரி செய்வது எந்த தேர்வுக்காகவும் இல்லை, இதற்கு மதிப்பெண்களும் இல்லை, எதுவும் பிழையாக சொன்னால் நான் கோபித்துக்கொள்ளவும் மாட்டேன் என்றெல்லாம் பலமுறை முன்னரே நான் உறுதியளித்தாலும், எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லிவிடவேண்டும் என்ற ஒரு சிறு படபடப்பு அவளிடம் இருந்தது என்றுதான் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவளால் இதிலிருந்து விடுபடமுடியும் என்று நினைக்கிறேன்.

பதிவு செய்த ஒலிக்கோப்பை சவுண்ட் க்ளவுடில் ஏற்றியுள்ளேன். ஆர்வமிருந்தால் கேட்டுப் பாருங்கள். நடுநடுவில் என் குரலும் வரும். சகித்துக் கொள்ளுங்கள்.

#SoundCloud

வாட்ஸாப்பிலிருந்து ஃபேஸ்புக்கிற்கு…

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கிலிருந்து விலகுவதாக முடிவு செய்தேன். எனது நேரத்தை அது மிகவும் கொல்வதாக எண்ணியதால் அந்த முடிவு. மேலும் ஃபேஸ்புக்கிற்கென எழுத ஆரம்பித்து ஒற்றைவரிகளாக சிந்திப்பதற்கு மட்டுமே மனம் பழகிவிட்டதாக ஓர் எண்ணம். நாம் சிந்திப்பவற்றைத் தொகுத்து கட்டுரைகளாக எழுத முடிந்தால் சரி, இல்லையென்றால் அவையெல்லாம் அப்படியே அவையெல்லாம் போய்த் தொலையட்டும் என்று முடிவு செய்தேன். ஏற்கனவே ஃபேஸ்புக்கை விட்டு பலமுறை விலகிச் செல்ல முயன்று தோற்றிருந்ததனால் இம்முறை சிறியதாக ஒரு குறிப்பை மட்டும் ஃபேஸ்புக்கில் நிலைத் தகவலாக இட்டுவிட்டு அமைதியாக வெளியேறினேன். சிலகாலம் எவரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. மனம் அடிக்கடி ஃபேஸ்புக்கைப் பார்க்க ஆசைப்பட்டாலும் இம்முறை முழுமனதுடன் அடக்கி வைக்கமுடிந்தது. அதன்பிறகு சில ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு சிறிய அளவு வெற்றியும் ஈட்டினேன். எனினும் எனது ஓய்வு நேரத்தை முழுவதும் பயன்படுத்தினேனா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். இதற்கிடையில் மெதுவாக வாட்ஸாப் பக்கம் என் கவனம் திரும்பியது. என் உறவினர் குழு ஒன்றிலும், நண்பர்கள் குழு ஒன்றிலுமாக ஏற்கனவே இருந்தாலும் அவற்றில் வரும் செய்திகளை அவ்வளவாக பார்ப்பதில்லை. ஏதாவது அரட்டை அடிக்க மட்டும் அவ்வப்போது செல்வதுண்டு.

ஆனால் இம்முறை ஃபேஸ்புக்கை விட்டதனால் கிடைத்த நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாட்ஸாப்பில் செலவிட ஆரம்பித்தேன். நான் ஆரம்பித்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் சிறிது சிறிதாக நின்றுவிட்டன. இப்போது எதையுமே செய்வதில்லை. புதிய செய்திகள் வந்துள்ளன என்று வாட்ஸாப் அறிவிக்கும்போதெல்லாம் கை தானாக சென்று அதை எடுத்துப் பார்க்கிறது. இதன் நடுவில் என் தலைமுறை உறவினர்களெல்லாம் சேர்ந்து ஒரு குழு ஆரம்பித்தோம். அவர்களில் பலருடனும் என்னால் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதிலும் குப்பைகளாக செய்திகள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்திலேயே அவற்றைத் தடுக்க முயற்சி செய்தோம். ஆனால் “எந்த செய்தியுமே யாரும் அனுப்ப மாட்டேன் என்கிறார்கள். அதற்கு இம்மாதிரி ஏதேனும் செய்திகள் வருவது நல்லதுதான் இல்லையா?” என்று மற்றவர்களால் பதிலளிக்கப்பட்டது. சரி நாமும் ஒரேயடியாக தீவிர முகத்தோடு இருக்கவேண்டாம் என்று அதை அப்படியே விட்டுவிட்டேன்.

சிறிது காலத்திலேயே என்னால் தாங்கமுடியாத அளவுக்கு மொக்கை செய்திகள் அந்தக் குழுவில் வர ஆரம்பித்தன. வரும் எந்த செய்தியையுமே “என்று சொல்லி சிரித்தார் மஹா பெரியவர் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரர்)” என்று முடிப்பார்களோ என்ற பீதியுடனேயே படிக்க வேண்டியிருந்தது. அதில் வரும் ஒரு பத்து செய்திகளைப் படித்தாலே பின்வரும் முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும்.

1. ஹிந்துக்கள் ரொம்ப சாது. மற்ற மதத்தினர் அவர்களை அழிப்பதற்காகவே திரிகிறார்கள்.
2. ஹிந்துக்கள் கலவரம் செய்தால்கூட அவை எல்லாம் சரிதான்.
3. ஹிந்துக்களில் பல முனிவர்கள் இன்னமும் உண்டு. அவர்கள் சபித்தால் கட்டாயம் பலிக்கும்.
4. மஹா பெரியவரால் முடியாததில்லை. ஒருவருக்கு ஏன் தலை அரிக்கிறது என்பதைக்கூட சொல்லத் தெரிந்தவர். இதை இப்போது எழுதும்போது எனக்கு தலை அரிக்கிறது. “பார் பெரியவரின் அதிசயத்தை” என்று இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தே உங்களுக்கு வாட்ஸாப்பில் வரும் பாருங்களேன்!

இப்படியாக, கடும் மனச்சோர்வுக்கு உள்ளாக்கும் பதிவுகளாகப் படித்து படித்து சலித்துவிட்டேன். முழுக்க படிப்பதுகூட இல்லை. பார்த்துவிட்டு தாண்டிச் செல்வதே இவ்வளவு சோர்வளிக்கிறது. மேலும் ஒரே செய்தி பல குழுக்களில் வருவதும் கொடுமை. சரி இவர்கள் நம் உறவினர்கள்தானே, இவையெல்லாம் கட்டுக்கதைகள்தான் என்று குறைந்த பட்ச அளவில் நிருபித்தாலே ஏற்றுக்கொள்வார்களே என்று குறைத்து மதிப்பிட்டு அவ்வாறான இருபதிவுகளை எடுத்து அவை குறித்த என் கருத்துக்களை எழுதினேன். விவாதம் விதண்டாவாதமாகி குதர்க்கவாதமாகி நின்றதுதான் மிச்சம். என்னுடையது உட்பட மனித மனதிற்குள் இருக்கும் அழுக்கு அளவின் பிரம்மாண்டம் என்னை அச்சுறுத்தியது! எவ்வளவு கீழ்த்தரமான வசைகள்! வம்புப் பேச்சுக்கள்! விவாதம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள்ளேயே என் தரமும் கீழறங்கிச் சென்றது. எனக்கு எதிர்த் தரப்பில் இருந்தவர்களின் தரம் அதைவிட பலமடங்கு கீழிறங்கிச் சென்றதை நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டாலும், நான் ஏன் அவ்வளவு தரம் தாழ்ந்து சென்றேன் என்று இன்னமும் ஆச்சரியப்படுகிறேன்.

ஒருவழியாக வேறு சில உறவினர்கள் தனி உரையாடலிலும் குழுவிலும் இந்த அபத்தத்தைச் சுட்டிக் காட்டிய பின்னர் நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் “அதற்கு இப்படி பதிலளித்திருக்கவேண்டும். இப்படி சொன்னபோது அதை இப்படி எதிர்கொண்டிருக்க வேண்டும்” என்றெல்லாம் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலிருந்து வெளிவர சில முழு நாட்கள் தேவைப்பட்டன! இதில் செலவான நேரத்தில் நான் ஈடுபட்டிருந்த ஆக்கப்பூர்வமான முயற்சிகளைத் தொடர்ந்திருந்திருக்கலாம். என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டிருக்கலாம். அல்லது வேலை தொடர்பான் விஷயங்களில் என் கவனத்தை செலுத்தியிருக்கலாம். எதையும் நான் செய்யவில்லை. ஏதோ இந்த மட்டுக்கு இதோடு நிறுத்திக் கொண்டோமே என்று திருப்தி படுத்திக் கொள்ளத்தான் முடிந்தது.

மேலும் ஒன்றை கவனித்தேன். ஜெயமோகனின் எழுத்துக்களில் படித்தவைதான் என்றாலும் நேரடியாக அவற்றை அனுபவிப்பதற்கு இப்போதுதான் முடிந்தது. ஒருவருக்கு புரியாதாகவோ பிடிக்காததாகவோ உள்ள விஷயங்களை எவரும் கவனித்துப் படிக்கவேயில்லை. என்னதான் விளக்கங்கள் எழுதினாலும் அதிலுள்ள ஒற்றை வரியையோ வார்த்தையையோ மட்டும் பிடித்துக்கொண்டு கலாய்ப்பாகவோ வசையாகவோ மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை வேறொரு குழுவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துப் பாணியைப் பின்பற்றி ஒரு நீண்ட பதிவை இட்டேன். இத்தனைக்கும் அது பொதுவான பதிவுகூட இல்லை. சில நண்பர்களை அவர்கள் எழுதும் முறைகளைக் கிண்டலடித்து அவர்களின் பெயெரைக் குறிப்பிட்டே எழுதப்பட்டது. “என்ன சொல்ல வர்றே? ரெண்டு வரில சொல்லு” அல்லது “இதைத்தானே சொல்லவர்றே” என்று இருவரி பதில்தான் வந்தது. இத்தனைக்கும் தமிழில்தான் அதை எழுதியிருந்தேன். அங்குள்ள அனைவருமே தமிழ் வழி படித்தவர்கள்தான். “இது எப்படியிருக்குன்னா, வால்மிகிகிட்டையோ கம்பர் கிட்டயோ போயி, அடுத்தவன் மனைவி மேல ஆசைப்படக்கூடாதுன்னுதானே சொல்லவர்றீங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு” என்று மட்டும் பதிலளித்துவிட்டு நிறுத்திக் கொண்டேன்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, முகநூலை ஒரு கலங்கிய ஏரி என்று கொண்டால் வாட்ஸாப்பை கலங்கிய குட்டை என்றே கொள்ளவேண்டும். ஏரியிலாவது தெளிந்த நீர் எங்காவது இருக்க வாய்ப்புண்டு, ஆனால் குட்டையில் என்று சகதியே மிஞ்சும் என்று தோன்றுகிறது. முகநூலை கைவிட்ட வகையில் நான் மதிக்கும் நிறைய மனிதர்களின் செய்திகளைத் தவற விட்டதுதான் மிச்சம்.

முக்கியமானதாக நான் கருதும் ஒன்று. பொதுவாக தமிழில் எழுதும்போது ஜெயமோகன் அவர்களிடம் கடன்வாங்கியோ அல்லது நானே யோசித்தோ, தமிழ் வார்த்தைகளை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி எழுதும் முறையை சிரமப்பட்டு கற்றிருந்தேன். இம்மாதிரி வாட்ஸாப்பில் எழுதுவதற்காக, ஆங்கிலம் கலந்தும் தமிழை பேச்சுவழக்கிலும் எழுதப்போய் அந்த எழுத்து நடையை சற்று இழக்க நேரிட்டது. இது எனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பாகப் பட்டது. கடந்த 7 வருடங்களாக சிரமப்பட்டு அடைந்ததை இவ்வளவு எளிதாகத் தவறவிடுகிறோமே என்ற குன்றிப்போனேன்.

சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் “ஏன் ஃபேஸ்புக் பக்கம் இப்போது வருவதேயில்லை?” என்று என்னுடைய ஃபேஸ்புக் விசிறிகள் (!?) மூன்று நான்கு பேர் கேட்டார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் இரண்டு மாதம் கழித்தும் இவ்வளவு ஞாபகம் வைத்துக் கேட்கிறார்கள் என்றால் நான் ஏன் ஃபேஸ்புக்கிற்கே திரும்பக் கூடாது என்று எண்ண ஆரம்பித்தேன். ஆகவே, இதற்கு மேலும் இம்மாதிரி குழுக்களில் அசட்டுத்தனமாக எழுதிக் கொண்டிருப்பதற்குப் பதில் கீழ்க்கண்டவாறு செய்யலாம் என்றிருக்கிறேன்.

1. முடிந்தவரை கட்டுரைகளாக என்னுடைய இணையதளத்திலேயே எழுதுவது. அவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது.
2. கட்டுரைகளளவிற்கு வளராதவற்றை ஃபேஸ்புக்கில் எழுதுவது. சில சமயம் சில சிந்தனைத் தெறிப்புகள் தோன்றும். அவை உடனடியாக கட்டுரை அளவிற்கு வளராது என்பதால் அவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
3. மேலும் விசித்திரமானவற்றைப் பார்க்கும்போது அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் முகநூலைப் பயன்படுத்திக் கொள்வது.
4. இவை தவிர, முகநூலில் நான் நேசிக்கும், மதிக்கும் மனிதர்களின் இடுகைகளை மட்டும் வாசிப்பது
5. ஆனால் எங்குமே ஒரு வரிக்கு மேல் எழுதும்போது தூய தமிழிலோ அல்லது தூய ஆங்கிலத்திலோ மட்டுமே எழுதுவது.
6. உருப்படியான விவாதங்களன்றி வேறு எதிலும் பங்கேற்கக்கூடாது.
7. வாட்ஸாப்பில் இப்போது இருக்கும் குழுக்களில் தொடரலாம். ஆனால் எதுவானாலும் விதி 5ன் படி மட்டுமே மறுமொழிகள் இருக்கவேண்டும்.
8. நானும் எனது இரு முக்கிய நண்பர்களுமாக சேர்ந்து ஒரு கூகிள் சாட் குழுவை சிலகாலமாக வைத்திருக்கிறோம். அரட்டைகள் என்றால் இனிமேல் அதில் மட்டுமே!

ஆக, முகநூலே!! இதோ மீண்டும் வருகிறேன்!!!

அன்பை போதித்தவர்

நேற்று முகநூலில் எனது அம்மாவின் அப்பாவைப் பற்றி பின்வரும் ஒரு குறிப்பை எழுதியிருந்தேன்.

https://www.facebook.com/gperiasamy/posts/10155794757367755

அவரைக் குறித்துத் தனியாகவே ஒரு பதிவு எழுதவேண்டும் என்றிருந்தேன். இக்காலைவேளை அதை மீண்டும் நினைவுபடுத்திவிட்டது. பொதுவாகவே அதிகாலை வேளைகள் எனக்கு மன எழுச்சியையும் நெகிழ்வையும் (இப்போதெல்லாம் அடிக்கடி நெகிழ்கிறேன், காலைவேளைகளில் அது இன்னமும் அதிகமாகிறது) தருகிறது. இம்மாதிரித் தருணங்களை விடாமல் எதையாவது எழுதிவிட வேண்டும் என்பதால் இப்பதிவு.

மேலோட்டமாகப் பார்க்கும்போது மிகச் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவராகவே தோற்றமளிப்பார். ஆனால் அவரது மறைவிற்குப் பின்னர் அவரைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படும் சில தகவல்கள் அவரைப் பற்றிய ஒரு ஆச்சரியமான பிம்பத்தை உருவாக்குகின்றன.

நான் குழந்தையாக இருந்த சமயங்களில் என் தாத்தா எங்களுடன் சிலகாலம் (என் அம்மாவிற்கு உதவும் பொருட்டு) தங்கியிருந்தார். எனக்கு முதன்முதலாக என் வாழ்க்கையில் நினைவிலிருக்கும் சில நிகழ்ச்சிகளிலேயே இவரும் இருக்கிறார். அப்போதெல்லாம் எனது அம்மா தான் ஆசிரியராக வேலை பார்த்த பள்ளிக்கு என்னையும் அழைத்துச் செல்வார். மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்த சமயத்தில், நான் உணவுண்டுவிட்டு வீட்டிலேயே உறங்கிவிட்டேன் – வழக்கம் போல. என் அம்மாவும் என் உறக்கத்தைக் கலைக்க விரும்பாமல், என் தாத்தா வசம் விட்டுவிட்டு பள்ளிக்குச் செல்ல, தூக்கம் முடிந்து எழுந்த நான், அம்மாவிடம் தான் இருப்பேன் என்று அடம்பிடிக்க என் தாத்தா என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றது எனக்கு நினைவிலிருக்கிறது. அப்போதெல்லாம் என்னை அவர் அழைக்க பல்வேறு பெயர்களைப் பயன்படுத்துவார். “எனக்கு எட்டு பெயர்கள்” என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். கணேச்சு, படவா, எலேய் போன்றவை அவற்றில் சில.

ஒருமுறை அவர் கடைக்கு செல்லக் கிளம்பினார். நானும் வருவேன் என்று அடம்பிடிக்க, என்னை சமாதானப்படுத்தியதாக நினைத்துக்கொண்டு, நான் வீட்டிலேயே இருக்கப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினார். நான் “அவர் அப்படித்தான் சொல்வார், நாம் பின்னால் செல்வோம்” என்று அவர் பின்னாலேயே சென்றேன். அவர் அதை அறியவில்லை. மண் சாலையிலிருந்து பேருந்து செல்லும் பிரதான சாலையில் இணைந்தபோது பின்னால் வந்த பேருந்தை சுட்டிக்காட்டி “தாத்தா! பஸ் வருது. பார்த்துப் போ” என்று சொல்ல, அதிர்ந்து விட்டார். கிட்டத்தட்ட கால் கிலோமீட்டர் அவர் அறியாமல் பின்னால் சென்றுகொண்டிருந்திருக்கிறேன். பின்னர் என் அம்மாவிற்கு நல்ல திட்டு விழுந்தது தனிக்கதை. நான் ஓரளவு வளர்ந்தபின் சென்னைக்கு சென்று என் மாமாக்களுடன் வாழ்ந்துவந்தார். எப்போது ஊருக்கு வந்தாலும் மிகப் பிரியமாக இருப்பார்.

ஆனால் இந்தச் செல்லமெல்லாம் சிறுவயதில்தான். என்னுடைய பத்தாம் வயதிலிருந்து பதினைந்தாம் வயதுவரை பெரும்பாலும் அவரிடம் திட்டு வாங்கித்தான் எனது பொழுது கழிந்திருக்கிறது. குறிப்பாக நான் ஏழாம் வகுப்பு படிக்கும் சமயத்தில், என் ஆங்கில அறிவு தரைமட்டத்தில் இருக்கிறது என்பதை அறிந்து அதிர்ந்துவிட்டார். தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகியவற்றை நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு முன்னாள் ஆசிரியரின் பேரன் அவ்வாறு இருந்ததை அவரால் தாங்கமுடியவில்லை போல. உட்காரவைத்து ஆங்கில வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார் – கோடை விடுமுறை தினங்களில். பிள்ளைகளின் வளர்ச்சி என்பது அவர்கள்மீது போடப்படும் அழுத்தங்களுக்கு ஏற்ப எதிர்திசையில் செல்லும் என்பதால், என்னிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. வெறுத்துப் போய் விட்டுவிட்டார். பேனா எதற்கு உதவும் என்ற எளிய கேள்விக்குக் கூட என்னால் ஆங்கிலத்தில் பதில் சொல்ல இயலவில்லை. “அத வச்சு என்ன உழுவியா? எழுதத்தானே செய்வ?” என்று திட்டியது நினைவில் இருக்கிறது. பின்னர் எட்டாம் வகுப்பில் ஓரளவு ஆங்கில அறிவு வந்தாலும், அவர் எதிர்பார்த்த அளவிற்கு நான் முன்னேறவில்லை என்பதால் அதுகுறித்த ஒரு பயத்துடனே அவரிடம் பேசிவந்தேன். நான் பதின்ம வயதுக்கு வந்திருந்த நேரம் ஆதலால், அந்த பயம் கோபமாகவும் அலட்சியமாகவும் மாறியது. அவரிடம் பெரிய அளவில் பேசிக்கொள்வதில்லை. என் இரு மாமாக்களிடமும் அவ்வாறே. அவர்கள் மூவரையும் பற்றி மிகவும் கேவலமாக என் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் அவ்வாறே ஏதேனும் ஒரு உறவினர் அப்போது இருந்திருந்தனர். ஆனால் எனது தாத்தா, எப்போது ஊருக்கு வந்தாலும் என்னிடம் ஆர்வமாகப் பேசுவார். நான் மரியாதைக்கு சில வார்த்தைகள் பேசிவிட்டு விலகிவிடுவேன். பெரும்பாலும் அவருடன் பேச வேண்டிய தேவையின்றி பார்த்துக்கொள்வேன்.

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள கொத்தமங்கலம் என்ற சிற்றூரில் அவரது நடுவயதுக்காலம் கழிந்தது. அங்கு அவர் பிரபலமான ஆசிரியராக இருந்திருக்கிறார். நாற்பது வயதுக்குப் பின்னரே அவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்திருக்கிறது. “பதினாறு வருஷம் வேலை பார்த்து இருபது வருஷத்துக்கு மேல பென்ஷன் வாங்குறேன்” என்று சிரித்துக் கொண்டே சொல்வார். அவ்வூரில் அவருக்கு மிகவும் மதிப்பு உண்டு. பெரும்பாலும் அனைவருக்கும் அவரைத் தெரிந்திருக்கும். இப்போது கூட “சர்மா வாத்தியார் பேரன்” என்று சொல்லிக்கொண்டு யாரிடமாவது என்னால் உதவி பெற்றுவிட முடியும் என்றே நம்புகிறேன். ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் தொடர்பாக கருவூல அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்திடும் வேலைக்காக புதுக்கோட்டைக்கு வருவார். அங்கிருந்து அருகில் உள்ள திருமயம் என்னும் சிற்றூருக்கு சென்று அங்குள்ள சார்கருவூலத்தில் கையெழுத்திட்டுவிட்டு வருவார். அப்போதெல்லாம் என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார். இந்நிலையில் கொத்தமங்கலத்திற்கு என் அப்பாவின் சகோதரி குடும்பம் வந்து சேர்ந்தது. அவர்களுடன் என் தாத்தாவிற்கு நல்ல பழக்கம். அவர்களைப் பார்க்கச் செல்லும் சாக்கில் கொத்தமங்கலத்தில் உள்ள தனது நண்பர்களைச் சந்திக்கக் கிளம்பிவிடுவார் – என்னையும் கூட்டிக்கொண்டு. என் அத்தைக்கு என்மீது பிரியம் அதிகம் என்பதாலும், அவர் வடை முதலிய உணவுகளை தயார் செய்துவைத்திருப்பார் என்பதாலும், என் தாத்தாவுடன் அவ்வூருக்குச் செல்ல நானும் விரும்புவேன். என் அத்தையின் வீடு பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். ஒருமுறை பேருந்திலிருந்து இறங்கி ஒவ்வொரு கடைக்கும் சென்று அங்குள்ளோரிடம் (கடைக்காரரிடமும், உட்கார்ந்திருப்பவர்களிடமும்) பேசிவிட்டு அத்தை வீட்டுக்குச் செல்ல வெகுநேரம் ஆனது. யாரோ இருவர் லாட்டரி எண்களைச் சொல்லி சரிபார்த்துக்கொண்டிருக்கும்போது, இவர் குறுக்கால் சென்று வேறு எண்களை மாற்றி மாற்றிச் சொல்லி குழப்பிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துவிட்டு பின்னர் அடையாளம் தெரிந்தபின் “அட சர்மா சார் எப்படியிருக்கீங்க” என்று ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவருடைய பேரன் என்பதால் எனக்கும் பிரியமான வரவேற்பு கிடைக்கும். ஆனால் நான் உள்ளூர அவர்மீது மிகவும் கடுப்பில் இருப்பேன். அவர் புகையிலை போடும் பழக்கம் கொண்டவர். பின்னர் சிலகாலம் பான் பராக்கை பழகிக்கொண்டார். என்னைத்தான் சென்று வாங்கி வரச் சொல்வார். ஒருமுறை நான் இல்லாதபோது என் அக்காவை சென்று வாங்கி வரச் சொல்ல, நான் இதுதான் சமயம் என்று “நான் போய் வாங்கினாக்கூட பரவா இல்லம்மா.. அவ போய் வாங்கினா பாக்குறவங்க என்ன நெனப்பாங்க” என்றெல்லாம் செண்டிமெண்ட்டைக் கூட்டி போட்டுக்கொடுத்துவிட்டேன். என் அம்மாவும் தாத்தாவைக் கடிந்துகொண்டு விட்டார். தலைகுனிந்து என் அம்மாவின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்த என் தாத்தாவின் முகம் நினைவுக்கு வருகிறது. உள்ளுக்குள் இளிப்போடு பார்த்துக்கொண்டிருந்த என் முகமும். அற்பத்தனங்களை மட்டும் மறந்துவிடும் வரம் ஒன்று கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இன்றைக்கு இருந்திருந்தால் அவருக்கு 103 வயதாகி இருக்கும். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைக்கு முந்தையவர். ஆனால் தன் பிள்ளைகளுக்கு தன்னை விமர்சிக்கும் சுதந்திரத்தைத் தந்திருந்தவர் என்றே எனக்குத் தோன்றுகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவரை என் அம்மா, பெரியம்மா மாமாக்கள் என எல்லோருமே அவரின் பிழைகளைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அவரும் ஏற்றோ மறுத்தோ விவாதித்தும் இருக்கிறார். அவர் வயதையொத்த என் தந்தை வழித் தாத்தாவை ஒப்பிடும்போது இவர் தன் பிள்ளைகளுக்கு நிறையவே சுதந்திரமளித்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை என்னை நிறைய திட்டியிருக்கிறார். மிகவும் அவமானமாக உணர்ந்திருக்கிறேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வந்தபோது எனக்கு ஒரு சவால் விடுத்தார். ஐநூறுக்கு நானூறு மதிப்பெண்கள் எடுத்தால் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், அதற்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் நூறு ரூபாய் கொடுப்பதாகவும் சொன்னார். அதற்கு முந்தைய வருடம் என் பெரியம்மாவின் பெண் ஐநூறுக்கு 437 எடுத்து ஒரு நல்ல தொகையை அவரிடம் பெற்றிருந்தாள். நானோ “அவள் அளவுக்கு உன்னால் மதிப்பெண்களைப் பெறமுடிகிறதா என்று பார்ப்போம்” என்ற ரீதியில் சவால் விடுகிறார் என்று அசட்டுத்தனமாகப் புரிந்துகொண்டு எரிச்சலானேன். மதிப்பெண்கள் வெளியானது. 422 எடுத்திருந்தேன்.. என் பெரியம்மா பெண்ணைவிட குறைவு என்றாலும் எனக்குத் திருப்தியாக இருந்தது. அவரும் ஒத்துக்கொண்டதைப் போல் 1000 + 2200 = 3200 ரூபாயை கொடுத்தார். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது எனது முதல் மாமாவின் பையனின் திருமணம் நடந்தது. அக்குறிப்பிட்ட திருமண நிகழ்ச்சியில் ஒருமுறை மண்டப வாசலிலிருந்து உள்ளே செல்ல அவரால் முடியவில்லை. இருளில் கண் சரியாகத் தெரியவில்லை. என்னை தன் கையைப் பிடித்து அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். நானும் உதவிசெய்தேன். “என்னமோ என் மாமா பையன் என்னைவிட அறிவாளி அப்படி இப்படி என்று சொல்வாரே? இதற்கு நான் தானே வரவேண்டியிருக்கிறது? எங்கே போனான் அந்தப் பையன்?” என்றெல்லாம் மனதிற்குள் பொருமிக்கொண்டேன். “ஓவரா பேசிக்கிட்டிருந்தாரு.. இப்போ என் கைய புடிச்சிக்கிட்டு நடக்குற மாதிரி தெய்வமே கொண்டுவந்து விட்டுடிச்சு பாரு” என்று அற்பத்தனமாக எண்ணவும் செய்தேன். ஆனால் அவரோ அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடமும் என்னை “என்னுடைய பேரன். டென்த்தில் நானூத்திருபத்திரெண்டு மார்க் வாங்கிருக்கான்” என்று மிகவும் பெருமையுடன் சொல்லி அறிமுகப்படுத்தினார். அவர்களில் பெரும்பாலானோரை எனக்குத் தெரிந்திருக்கக்கூட இல்லை. ஏன் இப்படி எல்லோரிடமும் சென்று சொல்கிறார் என்று குழப்பத்துடனும் எரிச்சலுடனும் இருந்தேன். அது என் மீதான அவருடைய அன்பு என்பதுகூட எனக்குத் தோன்றவில்லை. “நல்ல மார்க் எடுத்தா தானா எல்லாரும் மதிக்கிறாங்க பாரு” என்று (வழக்கம்போல) அசட்டுத்தனமாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

அந்நேரத்தில் அவர் எண்பது வயதை எட்டியிருந்தார். அதனால் வந்திருந்த நெகிழ்ச்சியா என்று தெரியவில்லை. ஆனால் அதன்பின்னர் என்னை எப்போதும் கடிந்துகூட பேசியதில்லை. படிப்பு மட்டும்தான் அவர் என்னிடம் கண்ட குறை போல. அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் வருடம் ஒருமுறை மட்டும்தான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால் எப்போதும் மிகப் பிரியமாக என்னிடம் நடந்துகொண்டார். அவ்வப்போது ஏதாவது கேள்வி கேட்பார். அவர் திட்டுவாரோ என்று எண்ணித் தயங்கி நான் சொல்லும் பதில்களுக்கு சிரித்துவிட்டு விட்டுவிடுவார். பின்னர் எனது இருபதாம் வயதில், சென்னையில் வேலை தேடும் பொருட்டு, சில நாட்கள் என் இரண்டாவது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். என் அறிவுத் திறமையைப் பார்த்து என் மாமா வியந்திருந்த நேரம். 🙂 ஆனால் இம்முறை அவர் என்னைக் கடிந்துகொள்ளும்போதெல்லாம் ஒரு சங்கடச் சிரிப்புடன் தாத்தா எனக்கு மறைமுகமாக ஆதரவளிப்பார். ஒருமுறை எரிச்சலான என் மாமா “ஓ! உங்க பேரன் மேல உங்களுக்கு அவ்வளோ பிரியமா? ரொம்ப சரி” என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாகப் போனது. அதுவரைக்கும்கூட என் தாத்தாவைப் பற்றி ஒரு எதிர்மறையான பிம்பத்துடனேதான் இருந்தேன். பிறகுதான் அவரிடம் இருந்த அவ்வித்தியாசத்தை உணரமுடிந்தது. அடுத்த இருவருடங்களிலேயே முதுமை எய்தி மறைந்தார். அப்போது அவருக்கு 88 வயது. மறைவதற்கு கடைசி சில நாட்கள் வரைக்கும் தன் துணிகளைத் தன்னாலேயே அவரால் துவைத்துக் கொள்ள முடிந்தது. மெதுவாக ஆனால் தனது எல்லா வேலைகளையும் தானே பார்த்துக்கொண்டுவிடுவார். அவர் மறைவிற்கு என்னால் செல்ல முடியவில்லை. அதன்பின்னர் பலவருடங்கள் கழித்து வந்த ஒரு பேச்சில் எனது தந்தை “அவர் நிறைய பேருக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். உதவி என்று கேட்டு வரவேண்டும் என்பதில்லை. இவராகவே அவர்களுக்கு இப்போது உதவிகள் தேவைப்படும் என்று எண்ணி பலருக்கு உதவியிருக்கிறார். அது ஒரு சமூகத் தொண்டு போல. அவ்வாறு நாமும் செய்யவேண்டும்” என்றார். சமூகத்திற்கு சேவை செய்வதென்றால் எனக்கு அப்போது பிரபலமாக இருந்த சமூக நல ஆர்வலர்களின் பெயர்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் என் குடும்பத்திலேயே அவ்வாறு ஒருவர் இருந்திருக்கிறார் என்பது தெரியவந்தபோது என் ஆணவத்தை நினைத்து மிகவும் வெட்கப்பட்டேன். என் பெற்றோருமே பலருக்கு உதவியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களே பார்த்து வியக்கும் மனிதர் என் தாத்தா. நேற்றுகூட அந்த முகநூல் குறிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது என் தாய், அவரால் உதவிபெற்ற என் தலைமுறை உறவினர்களைப் பற்றிய ஒரு பெரிய பட்டியலைச் சொன்னார். என் தந்தை வழி உறவினரும் அதில் அடக்கம். அவ்வுறவினர்கள் என் தாத்தவைப் பற்றிப் பேசும்போது அவர்களின் கண்களில் தெரியும் அன்பை நினைத்துப் பார்க்கிறேன்.

என் தாத்தா மறைந்த சில வருடங்களுக்குப் பிறகு நடந்தது இச்சம்பவம். என் அக்கா மகன் கைக்குழந்தையாக இருந்தபோது ஒருமுறை அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தேன். அவன் அப்போது என்மீது சிறுநீர் கழித்துவிட்டான். சற்று அருவருப்புடன் அதை என் தாயிடம் சொல்லிவிட்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். என் தாயோ “ஏண்டா அது குழந்தைதானே? எதுக்கு அப்படி அருவருப்பா மூஞ்சிய வச்சுக்கிட்டு சொல்லுற?” என்றார். விவாதத்தில் மடக்குவதாக நினைத்துக்கொண்டு “குழந்தைன்னா? அதுக்காக இதெல்லாம் சகிச்சுக்க முடியுமா? சுத்தம்னு ஒண்ணு வேணும்னு நீங்கதானே சொல்லுவீங்க?” என்றேன். என் தாய் உடனே “நீ சிறு குழந்தையாக இருக்கும்போது மல்லாக்கப் படுத்துக்கொண்டு வட்டமாகத்தான் சிறுநீரை வெளியேற்றுவாய். சுற்றியுள்ளோர் மேலெல்லாம் பட்டுவிடும். ஒருமுறை தாத்தா உணவுண்டு கொண்டிருந்தபோது அவர் தட்டினுள்ளும் தெளித்துவிட்டது! நாங்களெல்லாம் பதற, அவரோ ‘குழந்தைதானே? விடு!’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்து உண்ண ஆரம்பித்துவிட்டார்” என்றார். ஆசிரியர் பணியில் இருந்தவர். எல்லோருக்கும் ஏதாவதொன்றை போதித்தே பழக்கப்பட்டிருப்பார். “அன்பு என்றால் என்ன?” என்பதை என்றும் மறக்காவண்ணம் எனக்கு போதிக்கவேண்டும் என்று விரும்பியிருப்பார் போல.

சென்னை புத்தகத் திருவிழா 2017

நேற்று சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்தோம். குழந்தைகளுக்கு சில புத்தகங்களையும், கவிஞர் சச்சினின் “ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார்” கவிதைத் தொகுப்பையும்,  என்.சொக்கனின் “நல்ல தமிழில் எழுதுவோம்” புத்தகத்தையும், விவேகனந்தரின் “சகோதர சகோதரிகளே” (ஞானதீபம் 11 சுடர்களின் திரட்டு) புத்தகத்தையும் வாங்கி வந்தேன். 

சொக்கனின் புத்தகத்தை ஒருவருக்கு பரிசளிக்கும் நோக்கில் வாங்கியுள்ளேன். அதை அளிக்கும்முன் விரைவாக படித்துவிடவேண்டும்.

உண்மையில் சச்சினினுடைய புத்தகத்தின் பதிப்பகப் பெயரை மறந்துவிட்டிருந்தேன். தூயனின் புத்தகத்தைத் தேடிப்போன இடத்தில் கிடைத்தது. நான் வாங்கியிருக்கும் முதல் கவிதைத் தொகுப்பு. ஆர்வத்துடனும் ஒருவித குறுகுறுப்புணர்வுடனும் இருக்கிறேன். 

தூயனும் சச்சினும் என் ஊர்க்காரர்கள். புதுக்கோட்டையை விட்டுவந்து பதினான்கு வருடங்களாகிவிட்டதால் நியாயமாக என்னைத்தான் அவர்களூர்க்காரன் என்று சொல்லவேண்டும். ஜெயமோகன் அவர்களின் வாசகர் சந்திப்பின்வழி அறிமுகமானோம். டிஸ்கவரி புக் பேலஸின் கண்காட்சிக்கடைக்கு சென்றபோது, அங்குள்ளோரிடம் கேட்காமல் நானே தூயனின் இருமுனை புத்தகத்தைத் தேடி எடுக்கவேண்டும் என்று கடை முழுக்க அலசினேன். மற்ற புத்தகங்களுக்கு நடுவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அப்புத்தகத்தை எடுப்பதை கற்பனையில் நிகழ்த்தியிருந்தேன்.  துரதிருஷ்டவசமாக  அப்புத்தகம் கண்காட்சிக்கடையில் கிடைக்கவில்லை. ஆனால் நான் கற்பனை செய்து வைத்திருந்த காட்சியைப்போல வீற்றிருந்த சச்சினின் புத்தகத்தைக் கிடைக்கப்பெற்றேன். கடைக்கு வந்தால் கிடைக்கும் என்றார்கள். இப்போது அங்கு சென்று அப்புத்தகத்தை எடுக்கும் கற்பனையில் ஈடுபட்டிருக்கிறேன். இவ்வாரத்தில் எப்படியும் வேட்டையாடிவிடவேண்டும்.

ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு செம்பதிப்பு வரிசையில் வெய்யோனை மட்டும் தவறவிட்டிருந்தேன். நேற்று கிட்டத்தட்ட வாங்கப்போய் பின்னர் ஒத்திப்போட்டு வந்தேன். 

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் வருடிப்பார்த்துவிட்டு மட்டும் வரும் புத்தகங்கள் என பல எனக்குண்டு. ஆரோக்கிய நிவேதனம், பருவம், அமர்சித்திர கதாவின் மஹாபாரதம் உள்ளிட்ட நூல்கள், உவேசாவின் என் சரித்திரம் இப்படி. இம்முறையும் அவ்வாறே எடுத்துப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டு வைத்துவிட்டு வந்தேன். ஒருநாள் இல்ல ஒருநாள் வாங்காமயா போயிடுவோம்?

சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல்

தனிப்பட்ட முறையில் நானும் ஃபேஸ்புக்கில் நெடுநாளாக நிறைய நேரத்தை செலவிட்டு வந்தவன். அதைக் குறைக்கவேண்டும் என்று நினைத்தாலும் முடிந்ததில்லை. இருமுறை எனது கணக்கை நானே சில நாட்களுக்கு முடக்கி வைத்திருந்துவிட்டு பின்னர் இயலாமல் மீண்டும் தொடங்கியிருக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் சில பதிவுகளைப் படித்துவிட்டு அவ்வப்போது கொள்ளும் உற்சாக மனநிலையில் “இனி ஃபேஸ்புக் பக்கம் வரக்கூடாது” என்று முடிவு செய்து, பின்னர் “அவ்வப்போது வரலாம், ஆனால் நிறைய நேரத்தை செலவழிக்க வேண்டாம்” என்ற முடிவுக்கு வந்து, மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிட்டேன் என்பதையே சிறிது காலம் கழித்தே உணர்ந்து வந்தேன்.

இது ஒருபுறமிருக்க, எனது நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று நிறைய பேர் ஃபேஸ்புக்கிலிருந்து விலகியும் பின் சிலர் மீண்டும் சேர்ந்தும் இருக்கிறார்கள். 99 நாட்களில் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுகிறேன் என்ற அறிவிப்பையும் அவ்வப்போது சிலரிடமிருந்து பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஞாநி விலகிவிட்டு திரும்பவும் வந்திருக்கிறார். ஆக இது எனக்கு மட்டுமான பிரச்சனையில்லை, பிரபலமானவர்கள் முதற்கொண்டு என்னைவிட நேர மேலாண்மையில் சிறந்தவர்கள் என்று நான் நினைத்த பலருக்கும் இப்பிரச்சனை உள்ளது என்பதை அறிந்தேன்.

மேலும், கடந்த வருட இறுதியிலிருந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், ஜல்லிக்கட்டு ஆகியவை ஃபேஸ்புக் பக்கம் வருவதையே வெறுக்கவைத்தன. வதந்திகள், கற்பனைக் கதைகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள், தொட்டு ஷேர் செய்யும் கடவுளரின் படங்கள் என எரிச்சலூட்டும் ஒன்றாக எனது ஃபேஸ்புக் பக்கம் மாறிப்போனது.

இதனிடையே, ஃபேஸ்புக் ஸீரோ என்ற ஒரு பதிவை ஃபேஸ்புக்கிலேயே பார்த்தேன். யாரோ ஒருவர், “எல்லா நண்பர்களையும் பின் தொடர்வதிலிருந்து விலக்கிவிட்டால், உங்கள் நியூஸ்ஃபீட் எப்படியிருக்கும்” என்ற யோசனையை தெரிவித்திருந்தார். அதைப் பின்பற்றி, நான் பின் தொடரும், ஆனால் எனக்கு எரிச்சலூட்டும் பதிவுகளை இடும் நபர்கள் ஒவ்வொருவரையாக அப்பட்டியலிலிருந்து நீக்க ஆரம்பித்தேன். இது தற்போது நல்ல பலனை அளித்து வருகிறது. எனது நியூஸ்ஃபீட் பக்கமானது மிகவும் சுருங்கிவிட்டது. அறிவு சார்ந்த பதிவுகளை மட்டுமே பார்க்கிறேன். அறிவுடையோரின் பதிவுகளை மட்டுமே பார்க்கிறேன். ஆகமொத்தம் மன அழுத்தமின்றி பொழுது நன்றாகப் போகிறது. என் நண்பர்கள் உட்பட நான் மதிக்கும் நிறைய பேரை இப்பட்டியலிலிருந்து விலக்க வேண்டியிருந்தது. அப்போதைக்கு அது சங்கடமளித்தாலும், எனது தனிப்பட்ட நேரம் அவர்களைவிட முக்கியமானது என்பதால் தயங்காமல் நீக்கிவிட்டேன். இப்போது அவர்கள் அனைவரும் என் நண்பர்களாகத் தொடர்கிறார்கள். ஆனால் அவர்கள் பகிரும் குப்பைகளை நான் பார்க்கவேண்டும் என்ற அவசியமுமில்லை. நானும் எந்தக் குப்பைகளையும் இப்போதெல்லாம் பகிர்வதில்லை என்பதால் “அவர்களின் நேரத்தைக் கெடுக்கிறோம்” என்ற சங்கடமும் எனக்கில்லை. நீங்களும் இதை முயன்று பாருங்கள்.

கருத்துக்களை எழுதத் தடை

இந்தத் தளத்தில் பதிவுகளுக்கு மறுமொழிகளை கருத்துக்களாக அந்தந்த பதிவுகளுக்குக் கீழேயே எழுதும் வசதி நீக்கப்பட்டுள்ளது. சில பயனுள்ள மறுமொழிகள் வந்தாலும் பெரும்பாலும் விளம்பர நோக்கில் பதியப்படும் கருத்துக்களே மறுமொழிகளாக இடப்படுகின்றன. ஆகவே இந்த ஏற்பாடு. இப்பதிவுகள் குறித்த உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர விரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளில் ஏதேனும் ஒன்றிற்கு அஞ்சலாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ganesh.periasamy@gmail.com

nallenthal@gmail.com

நன்றி!

இயற்கை – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 9

ஜெர்மனியில் இருக்கும்போது நண்பர் ஒருவரின் புண்ணியத்தில் சிறு சிறு உள்ளூர் பயணங்களை செய்துவந்தோம். அதில் ஒன்றுதான் முன்பு எழுதிய‌ அந்த திகிலூட்டும் பயணமாக அமைந்தது. மற்ற அனைத்துமே நன்றாக அமைந்தன. அதில் ஒன்று கார்மிஷ் பார்ட்டன்கிஷன் என்ற இடத்திற்கு சென்றது. அங்கு முன்பே சென்றிருந்த ஒரு நண்பரிடம் “குழந்தையோடு செல்வதற்கு ஏற்ற இடமா” என்று கேட்டபோது “அது ஏறத்தாழ இருபது கிலோமீட்டர் தூரம் நடக்க வசதியுள்ள பாதை. முதல் பதினாறு கிலோமீட்டர் தூரத்திற்கு நீங்கள் குழந்தையை வண்டியில் வைத்து தள்ளிச்செல்வதற்கு ஏதுவாக இருக்கும். கடைசி நான்கு கிலோமீட்டர் தூர பாதை சவாலான ஒன்று. பார்த்துக்கொள்ளுங்கள். வட்டமான பாதைதான். ஆகவே ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவீர்கள்” என்றார்.

நானும் அந்த நண்பரும் குடும்பத்துடன் செல்லவேண்டியது, என் மகளை வண்டியில் வைத்துக்கொண்டு நடக்கவேண்டியது. 16 கிலோமீட்டரில் எவ்வளவு தூரம் எங்களால் நடக்க முடிகிறதோ அவ்வளவு தூரம் நடந்துவிட்டு நானும் என் மனைவியும் குழந்தையுடன் திரும்பி விடுவது. என் நண்பரும் அவர் மனைவியும் முழுக்க சுற்றிவிட்டு வரவேண்டியது. ஆரம்பித்த இடத்தில் திரும்பவும் சந்தித்துக் கொள்ளவேண்டியது என்று திட்டமிட்டுக்கொண்டோம். எங்களுக்கேயான சொதப்பும் குணம் அங்கேயும் சிறிது தலைகாட்டிவிட்டது. அதாவது அந்த வட்டமான பாதையை இடப்புறம் ஆரம்பித்து சென்றால் மேற்கூறியவாறு சுற்றி வந்து வலப்புறம் உள்ள சாலை வழியாக ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேருவோம். ஆனால் நாங்கள் தவறுதலாக வலப்புறமாக அந்த வட்டத்தை சுற்ற ஆரம்பித்துவிட்டோம். ஒரு சிறிய ஆற்றின் கரையில் நடந்து சென்றோம். இரண்டு கிலோமீட்டர் நடந்தபிறகு ஓரிடத்தில் குகை போன்ற ஓரிடத்தில் பாதை முடிந்தது. குழந்தையை வைத்து தள்ளிக்கொண்டுவரும் வண்டிகளை ஓரிடத்தில் நிறுத்திவைத்துவிட்டு வரச் சொன்னார்கள். ஏதோ குழப்பமாகிவிட்டது என்று புரிந்தாலும் நாங்கள் செய்த தவறு எங்களுக்கு முழுக்க புரியவில்லை. சரி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று என் மகளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றால், மிகக் குறுகலான பாதை ஆரம்பித்தது. அதாவது எதிரில் ஒருவர் வந்தால் நான் சற்று நின்று அவருக்கு வழிவிட்டுத்தான் செல்லமுடியும். மேலும் குகை போன்று பாறையில் குடைந்த பாதை என்பதால் மிக மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்தது. கைபேசியில் உள்ள ஒளியின் உதவியுடன் நடக்க ஆரம்பித்தோம். சில மீட்டர் தூரத்தில் ஓவென தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரத்தில் எங்கள் வலப்பக்கம் பாறை முடிந்து வெளிச்சம் தெரிந்தது.

எங்களுக்கு சற்று கீழே கடும் வேகத்தில் அதே ஆறு இரைச்சலுடன் சீறிப் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. மலையின் இடுக்கில் பாய்ந்துவருவதான் இந்த வேகம், இரைச்சல். வேகமாக வரும் தண்ணீருக்கு மேலே சுமார் ஆறடிக்கும் குறைவான அகலமுள்ள பாதையில் எதிரில் வரும் ஆட்களை சமாளித்துக்கொண்டு நடக்க வேண்டும். தண்ணீர் துமிகள் தெளித்து காலடியில் பாதை வழுக்கியது. கையில் குழந்தை இடப்புறம் பாறை, வலப்புறம் இரு கனத்த கம்பியாலான தடுப்பு மட்டும். ஜெர்மனியில் நடப்பவர்கள் வலப்புறமாக செல்வார்கள் என்பதால் வருபவர்களுக்கு வழிவிட வேண்டி வரும்போது அந்த கம்பியை ஒட்டி குழந்தையுடன் நிற்கவேண்டும். முதலில் நான்தான் என் மகளை தூக்கிக்கொண்டு வந்தேன். ஆனால் நேரம் செல்ல செல்ல என்னால் இந்த சாதனையை அதிக நேரம் நிகழ்த்த முடியாது என்று தோன்றியது. நான் எப்போதுமே வியக்கும் பெண்களின் ஆற்றலை அப்போதும் அனுபவித்தேன்.

என் மனைவி தனது செருப்புகள் இரண்டையும் கழற்றினாள். நாங்கள் சென்றது கோடை காலமென்றாலும் செருப்புகளின்றி அந்த குளிர்ந்த நீர் தெளித்த ஈரமான பாதையில் நடப்பது கால்களை எளிதில் குளிரச் செய்துவிடும். ஆனால் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குழந்தையை என்னிடம் வாங்கிக்கொண்டு வெகு சாதாரணமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள். வருபவர்களுக்கு வழிவிட்டுக்கொண்டு, சீறியோடும் ஆற்றை ரசித்துக்கொண்டு, மகளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு என்று சென்றுகொண்டேயிருந்தாள். எப்படியும் ஒரு மூன்றுகிலோமீட்டர் இவ்வாறு நடந்து சென்றாள்.

சில இடங்களில் மேலிலிருந்தும் மெலிதாக நீர் நம்மீது விழுந்துகொண்டிருக்கும். நீரின் வேகம் பிரமிக்க வைத்தது. அவ்வளவு அருகில் அவ்வளவு வேகத்தில் நீரை பார்ப்பதே அசத்தலான அனுபவமாக இருந்தது. குறுகலான இருளான குகைப்பாதை இன்னமும் திகிலை கூட்டியது. ஒருவழியாக கடந்து சமவெளிக்கு வந்தோம். அங்கு அதே ஆறு மிக மெதுவாக ரம்மியமான ஒலி எழுப்பிக்கொண்டு அமைதியாக சென்றுகொண்டிருந்தது. நாங்கள் அதில் கால் நனைக்கவும், ஓரளவு நடுப்பகுதி வரைக்கும்கூட செல்லவும் முடிந்தது. கடுமையான கால் வலி எடுக்கும்போது குளிர்ந்த நீரில் பாதத்தை வைத்தால் சரியாகும் என்று ஆஸ்திரியாவில் கண்டுபிடித்திருந்தோம். அதையே இங்கும் செய்து புத்துணர்வு பெற்றோம். அந்த குகைப் பாதையில் தண்ணீர் அங்கங்கு சொட்டிக்கொண்டே இருந்ததால் என்னுடைய காமிராவில் எதுவும் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை. இந்த சமவெளியில் எடுக்க முடிந்தது. பின்னர் மறுபடியும் வந்தவழியே நடந்து ஆரம்பித்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

பின்னர் அந்த நண்பரிடம் பேசியபோதுதான் நாங்கள் தவறான பாதையை தேர்ந்தெடுத்தது தெரியவந்தது. மேலும் அந்த சீற்றம் மிகுந்த ஆறு பனிக்காலத்தில் முழுக்க உறைந்திருக்கும் என்றும் சொன்னார். “இடப்புறமாக ஆரம்பித்திருந்தால் நீங்கள் இயற்கையை இன்னமும் ரசித்திருக்கலாம். அமைதியான மலை, புல்வெளி, நடைபாதை என்று மிகவும் வசீகரமாக இருந்தது” என்றார். அங்கு இருந்த காலகட்டத்தில் அவ்வாறு இயற்கையின் அமைதியை ரசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு மாறுதலுக்கு இம்முறை அதன் ஆர்ப்பாட்டத்தை ரசித்துவிட்டு வந்தோம்.

முடிவுரை : ஏறத்தாழ அனைத்து முக்கிய அனுபவங்களையும் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆகவே இத்துடன் இத்தொடரை முடித்துக்கொள்கிறேன். படித்துவந்ததற்கு நன்றிகள்.

அசைவ உணவு அனுபவங்கள் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 8

ஜெர்மனியில் இருந்தபோது ஏற்பட்ட அசைவ உணவு சம்பந்தமான அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அங்குள்ள வழக்கப்படி அசைவ உணவுகளை meat என்றே குறிப்பிடுவார்கள். மற்றபடி vegetarian, non-vegetarian என்ற இரண்டு வார்த்தைகளையும் வித்தியாசமின்றி பயன்படுத்துவார்கள். இதனால் ஒரு சிக்கல் நேரும். மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகளை அவர்கள் வெஜிடேரியன் என்ற பிரிவில் சேர்த்துவிடுவார்கள். ஆனால் பால் பொருட்களை நான்-வெஜிடேரியன் என்று சொல்வார்கள். எதனால் என்று தெரியவில்லை. இதனால் நிறைய குழப்பங்கள் நடந்தன.

முதன்முறை சென்றபோது வாடிக்கையாளர்களுடனான இரவு உணவில் நான் அருகில் அமர்ந்திருந்த ஜெர்மானியரிடம் “நான் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. ஆகவே அசைவ உணவு பரிமாறப்பட்டால் எனக்கு முன்னரே சொல்லிவிடுங்கள்” என்று “உங்கள பார்த்தா ஸ்ரீரங்கத்துல படுத்திருக்கிற பெருமாளே எழுந்து வந்தமாதிரி இருக்கு” என்னும் ரீதியில் கெஞ்சி கோரிக்கை வைத்திருந்தேன். அவரும் “கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னார். தெம்பாக அமர்ந்திருந்தேன். தேங்காய் சட்டினி போன்ற ஒன்று இருந்தது. அவரிடம் கேட்டுவிட்டு எடுத்து விட்டுக்கொண்டேன். எனக்கு அந்தப் பக்கம் இருந்த என் குழுவில் வேலைபார்த்த தமிழர் “அதை சாப்பிடாதே. அதில் மீனின் ஊண் கலந்திருக்கிறது” என்றார். அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்று (நம்ம ஆள்தான் இது சைவம் என்று சொல்லிவிட்டாரே என்ற மிதப்பில்) உண்ண ஆரம்பித்தேன். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து எதற்கும் இருக்கட்டும் என்று இந்த ஜெர்மானியரிடம் “இதில் மீன் கலந்திருக்கிறதா” என்று கேட்க அவரும் சாதாரணமாக ஆமாம் என்றார். “ஐயோ நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொன்னேனே” என்று சொல்ல “ஆனால் இது மீன்தானே?” என்றார். நான் அவரை பரிதாபமாக பார்க்க “ஓ நீ meat எதையும் உட்கொள்ள மாட்டாயா?” என்றார். நானும் ஆமாம் என்று சொல்லி பரவாயில்லை என்று அதை எடுத்துவைத்துவிட்டு சாப்பாட்டை தொடர்ந்தேன். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பனீர் கட்டிகளை ஆவலாக எடுத்து போட்டுக்கொண்டேன். அக்காலங்களில் அவை எனக்கு கைகொடுக்க வந்த தெய்வமாக தோற்றமளிக்கும். சைவம் அதே சமயம் வயிற்றை அடைக்கும் அளவு கனமான உணவாயிற்றே? அவர் அவசரமாக என்னிடம் “அதை போட்டுக்கொள்ளாதே. அது மாட்டின் இறைச்சியாலானது” என்றார். சோத்துலயும் அடி வாங்கியாச்சு சேத்துலயும் அடிவாங்கியாச்சு என்ற கதையாக மீனைத் தின்றதோடல்லாமல் மாட்டையும் சுவைக்க பார்த்தோமே என்று கவலையாகிவிட்டேன். பின்னர் சுதாரித்துக்கொண்டு “இது மாட்டின் பாலினாலனதுதானே? இல்லை மாட்டிலிருந்து வெட்டியெடுத்தார்களா?” என்று கேட்க அவர் “இல்லை மாட்டின் பாலிலிருந்து எடுக்கப்படுவதுதான். ஆனால் இது அசைவத்தில் சேர்த்திதானே?” என்றார். நானோ “இல்லை. இதை நான் சாப்பிடலாம்” என்று சொல்ல அதன்பிறகு அவர் என்னிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அலுவலகத்திற்கு சென்ற முதல்நாள் மதிய உணவை எங்கள் ஜெர்மனி மேலாளருடன் உட்கொண்டோம். அவர் சாப்பிடும் இறைச்சி என்ன என்றறிய ஆர்வம் கொண்ட இந்திய நண்பர் ஒருவர் “அது என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்க, அந்த மேலாளரோ “இது இறைச்சியின் எந்த பாகம்?” என்று கேட்கிறார் என புரிந்துகொண்டு “இது இறைச்சியை வெட்டியெடுத்தபின் இந்த உறுப்பை சுத்தம் செய்து அதை இன்ன இன்ன மாதிரி சமைத்து இன்ன இன்ன பொருட்கள் சேர்த்து பரிமாறுகிறார்கள்” என்று ஒரு பெரிய விளக்கத்தையளித்தார். கேள்விகேட்ட நண்பரின் முகத்தில் இன்னமும் கேள்வி நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு பின்னர் கேள்வியை சரியாக புரிந்துகொண்டு “இது பன்றியாக இருந்தது” என்று முடித்தார். அவர் அதை ஆங்கிலத்தில் சொன்னபோது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. என்ன ஒன்று? கேட்டுகொண்டிருந்தவர்கள் அத்தனை அருகில் பன்றி மாமிசத்தை பார்த்து நெளிந்தோம்.

இன்னொருமுறை வாடிக்கையாளருடனான விருந்துக்கு சென்றபோது நல்ல பசி. அவர்களோ வெகுநேரம் கழித்து பீட்ரூட் உருளைக்கிழங்கு ஆகியவற்றாலான கட்லெட் போன்ற ஒன்றை கொண்டுவந்து வைத்தனர். அது அந்த உணவு விடுதியின் சிறப்பு உணவு என்றறிந்தோம். பசி மேலிட, சைவம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டோமே என்ற நம்பிக்கையில் பாய்ந்து அவற்றை எடுத்து உண்டுவிட்டேன். எனக்கு சற்று தள்ளியிருந்த எங்கள் குழுவை சேர்ந்தவர் அது எதனால் ஆகியிருக்கிறது என்று தோண்டி தோண்டி கேட்க அவர்கள் சொன்னது “அது ஆக்டோபஸிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை திரவத்தால் ஆனது”. அதாவது ஆக்டோபஸின் மாமிஸம் எதுவும் அதில் இல்லை. அந்த திரவத்தை எடுத்தபின்னும் அது உயிரோடுதான் இருக்கும். என்றாலும் மற்றவர்கள் உடனே வேண்டாம் வேண்டாம் என்று அலற  “ ஏன்? மாட்டின் பாலினால் ஆனது போன்றதுதானே இதுவும்?” என்று அந்த உணவை தயாரித்த அந்த விடுதியின் சமையல் கலைஞர் சொல்லிப்பார்த்தார். அதிலுள்ள தர்க்கம் அவர்கள் மூளைக்கு உறைத்தாலும் அந்த உணவு மனதிற்கு ஏற்புடையதாக இல்லையென்பதால் அனைவரும் வேண்டாம் என்று சொல்லி திருப்பிவிட்டனர். அந்த கலைஞர் சற்று வருத்தமாகிவிட்டார். ஆனால் அந்த உணவின் மூன்று துண்டுகளை முழுக்க சாப்பிட்ட ஒருவனைப் பற்றி பின்னர் அறிந்து சந்தோஷப்பட்டிருக்கக்கூடும்! ஆக்டோபஸின் கோமியத்தை சாப்பிட்டுவிட்டாயே என்று எல்லோரும் என்னை வெகுநாள் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

வாடிக்கையாளரின் அலுவலக்த்தில் உள்ள உணவு அறையில் பஃபே முறையில் உணவு அளிக்கப்படும். சில உணவுகளுக்கு மட்டும் பரிமாற பணியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் ஜெர்மன் மொழியை மட்டுமே அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் ஒவ்வொரு உணவையும் பற்றி விசாரித்து எடுத்துக்கொள்வதற்குள் பசியே சமயத்தில் மந்தித்துவிடும். ஒருமுறை அவ்வாறு ஒரு உணவைப் பற்றி நான் கேட்க, அவரும் விளக்க முற்பட்டார். கிடுகிடுவென்று ஜெர்மன் மொழியில் ஏதோ சொன்னார். நான் சிலைபோல அவரையே பார்த்தேன். கொஞ்சம் நிதானித்து வேறு வார்த்தைகளில் அதை கிடுகிடுவென மறுபடியும் சொன்னார். சிலை அசையவில்லை. உதிரியாக சில வார்த்தைகளைக் கூறி விளக்க முற்பட்டு என்னைப் பார்த்த்விட்டு நிறுத்திக் கொண்டார். சரி இவ்வளவு ஆபத்துக்கிடையில் இவ்வுணவை நான் உண்ணவேண்டாம் என்று நகர முற்பட அந்த பருத்த உயர்ந்த வெள்ளை மனிதர் சட்டென்று கைகள் இரண்டையும் விரித்து நெஞ்சில் படார் படாரென்று அடித்துக்கொண்டு “பாக், பாக், பாக்” என்றார். நான் உட்பட அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டோம். அவரும் சிரித்துவிட்டார். அவருடைய முயற்சியை மனதுக்குள் மெச்சி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த உணவை நோக்கி சென்றேன்.

பாரிஸுக்கு சென்றபோது அங்கிருந்த முனியாண்டி விலாஸ் உணவு விடுதிக்கு பரோட்டா சாப்பிடலாம் என்று ஆசைப்பட்டு சென்றிருந்தோம். பரோட்டாவும் ஒரு சைவ குருமாவையும் கொண்டு வர சொன்னோம். அங்கு இருந்த ஈழ பணியாளன் “அண்ணா, நீங்கள் இதற்கு பதிலாக இதை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு பரோட்டாவும் கோழியும் கிடைக்குமே” என்று சுத்தத் தமிழில் பதிலளித்தான். நாம் கோழியின் ஊணை சிக்கன் என்று சொல்லிதான் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? கோழி என்று தமிழில் இங்கு யாரும் சொல்வதில்லையே? ஆகவே கோழி என்றவுடன் உயிருள்ள கோழியை நினைத்துக்கொண்டுவிட்டோம். அதை வைத்து என்ன செய்வார்கள் என்று சில நொடிகள் யோசித்துவிட்டு அடக்கடவுளே சிக்கனை சொல்கிறான் என்று புரிந்து கொண்டோம். சிரித்துக் கொண்டே வேண்டாம் என்று சொல்லி சைவ குருமாவையே கொண்டுவா என்றோம்.

(தொடரும்)

சந்தித்த இந்தியர்கள் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 7

முன்னொரு பதிவில் அங்கு சந்தித்த வேறுநாட்டு மக்களைப் பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அங்கே சந்தித்த இந்தியர்களையும் அவர்களுடனான அனுபவங்களையும் இங்கே சுருக்கமாக எழுதுகிறேன். ம்யூனிக்கில் பொதுவாக இந்தியர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் தமிழர்கள் மிகவும் குறைவு. எப்போதாவதுதான் கண்ணில் தென்படுவார்கள். பொதுவாகவே நம் ஆட்கள் யாரும் எளிதாக மற்ற இந்தியர்களைப் பார்த்து பேசுவதில்லை. பார்ப்பதையே தவிர்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னிடம் பேசிய ஒரு ஜெர்மன் பெண்மணியும் இதை கவனித்து என்னிடம் “நாங்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டில் ஒரு ஜெர்மானியரை கண்டால் கட்டிப்பிடித்துக்கொள்ளாத குறையாக மகிழ்ந்து பேசிவிட்டு வருவோம். ஆனால் நீங்கள் இந்தியர்கள் அவ்வாறு செய்து நான் பார்த்ததில்லையே, ஏன்?” என்றூ கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. “ஆம் அவ்வாறுதான் இருக்கிறோம். விசேஷ காரணங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் அப்படித்தான் இருக்கிறோம்” என்று சமாளித்தேன். நம் ஆட்களின் இந்த குணத்தால் நடந்த சில நகைச்சுவைகளின் தொகுப்பே இந்தப் பதிவு.

முதன்முறை ஜெர்மனி சென்றபோது நானும், (என் தமையன் :)) சுனிலும் ஒருமுறை சுரங்கப்பாதை மின்தொடர்வண்டியில் வந்துகொண்டிருந்தோம். ஏறியவுடனேயே எங்களுக்கு எதிரில் ஒரு இந்தியன் நின்றுகொண்டிருப்பதை கவனித்தேன். அந்த சமயத்தில் இம்மாதிரி “பார்ப்பதைக் கூட விலக்கிவிட்டு செல்லும்” அனுபவங்களை ஓரளவு நான் பெற்றிருந்ததால், அலட்டிக்கொள்ளாமல் என்னுடைய கைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தேன். ஆனால் சுனில் அப்படியல்ல. யாரையும் விடமாட்டான். ஆகவே பேச ஆரம்பித்தான். ஆங்கிலத்தில் இருவரும் உரையாடிக்கொண்டே வந்தனர். அந்த பையன் ஏதோ படிப்பு விஷயமாக வந்தான் என்று சொன்னதாக நினைவு. சுனில் அவனிடம் பேசுவது எனக்கு எரிச்சலை அளித்துக்கொண்டிருந்தது. நாங்களிருவரும் இறங்கும் இடம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகவே இதை சாக்கிட்டு அவர்கள் பேச்சை கலைக்க முற்பட்டேன். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். அவர்கள் இன்னமும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு வந்தனர். சுனில் பொதுவாக மூன்றாவது வாக்கியத்தில் ஹிந்துக்கு போக முயற்சிப்பான். ஆனால் இன்னமும் இருவரும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. சரியாக அந்த நேரத்தில் சுனில் ஹிந்தியில் ஏதோ பேச ஆரம்பிக்க, அந்த பையன் சங்கடமாக “எனக்கு ஹிந்தி தெரியாது” என்று ஆங்கிலத்தில் சொன்னான். நானும் சுனிலும் சட்டென்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். நான் உடனே “இந்தியாவில் எங்கிருந்து வருகிறாய்” என்று ஆவலாக கேட்க “தமிழ்நாடு” என்கிறான்! நான் உடனே தமிழுக்குத் தாவி “அடப்பாவி, இவ்வலவு நேரம் தெரியாமல் போயிற்றே” என்று வருத்தப்பட்டேன். அவனும் “அடடா, நீங்களும் தமிழா? என்ன கொடுமை இது? இது தெரியாமல் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டேன்” என்றான். சரி கைபேசி எண்ணாவது வாங்கிக்கொள்ளலாம் என்றால் நாங்கள் இறங்குமிடம் வந்துவிட்டது. சிறிது வேதனையுடன் கையசைத்துவிட்டு பிரிந்தோம். வழக்கம்போல சுனிலிடமிருந்து எனக்கு திட்டு விழுந்தது. “ஏன் அவன் ஹிந்திக்காரனாகவே இருந்தால்தான் என்ன? அவனிடம் பேசுவதற்கு ஏன் உனக்கு இவ்வளவு வலிக்கிறது?” என்று திட்ட ஆரம்பித்துவிட்டான். “சரி சரி விடு” என்று சொல்லி பிரிந்தோம்.

அதன் பின்னர் மைய ரயில் நிலையத்திற்கு அடிக்கடி செல்லும் தேவை எங்களுக்கு இருந்தது. அப்போதெல்லாம் ஒரு தமிழ் குடும்பத்தை நாங்கள் பார்ப்போம். அதிலும் அந்த பையனின் அம்மா புடவை பொட்டு என்றுதான் வருவார். ஆனாலும் அவர்கள் யாரும் எங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றுவிடுவார்கள். ஆரம்பத்தில் நானும் அவ்வாறே கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக்கொண்டேன். அதாவது யாரேனும் இந்தியர்களை பார்க்க நேர்ந்தால், அவர்களின் கண்ணையே பார்த்துக்கொண்டிருப்பேன். அவர்களும் என்னை பார்த்தால் சிரிப்பது. இல்லையென்றால் அமைதியாக சென்றுவிடுவது, தானாக போய் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். சுனிலிடம் திட்டு வாங்குவதிலிருந்தும் தப்பிக்கவேண்டுமே? (பாத்தியா? நான் பாத்துக்கிட்டுதான் இருந்தேன், அவங்கதான் கண்டுக்கல… ஆமா நீ இப்படியே பேசிக்கிட்டு இரு) ஹிந்தி தெரிந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால் அவர்கள் தமிழர்களுடனோ அல்லது தமிழர்கள் தங்களுக்குள்ளேயோ பேசிக்கொள்வதில் ஏதோ பிரச்சனை இருந்துவந்தது. ஒருமுறை மின்தொடர்வண்டியில் ஒரு தம்பதியை நானும் என் மனைவியும் பார்த்தோம். மெல்லிய குரலில் தமிழில் பேசிக்கொண்டே வந்தார்கள். எங்களையும் பார்த்தார்கள். புன்னகையும் செய்தார்கள். ஆனால் பேச முன்வரவில்லை. சரிதான் என்று நாங்களும் விட்டுவிட்டோம். என் இன்னொரு நண்பர் பின்னர் சொல்லும்போது அங்கு ஒரு தமிழ் கூட்டம் இருப்பதாகவும் கிரிக்கெட் எல்லாம் விளையாடுவதாகவும் சொன்னார். எங்கள் கண்ணில்தான் அவர்கள் தென்படவில்லை.

ஆஸ்திரியா சென்றபோது இது நடந்தது. அங்கு ஒரு பேருந்து நிறுத்தத்தில் திடீரென ஒரு இந்திய தம்பதியை பார்க்க நேர்ந்தது. வடநாட்டினர். நாங்கள் பார்த்து புன்னகைத்ததும் அவர்களே நெருங்கி வந்தனர். “அப்பாடா அவர்களே வருகிறார்கள். அப்படியென்றால் பேசலாம்” என்று நாங்களும் மகிழ்ந்தோம். அவர்கள் வந்து பேச ஆரம்பித்தார்கள். ஆங்கிலத்தில்தான். எங்களுக்குள் நடந்த உரையாடல் பின்வருமாறு.

ஹலோ
ஹலோ
இங்கு சுற்றுலா பயணியாக வந்தீர்களா?
ஆமாம். நீங்கள்?
நாங்களும்தான். இங்கே என்னென்ன இடங்களைப் பார்த்தீர்கள்? (அதற்குள் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார்)
நாங்கள் அ, ஆ ஆகியவற்றை பார்த்தோம். இ-க்கு சென்றுகொண்டிருக்கிறோம்.
ஓ? நாங்கள் அ பார்த்தோம். ஆ வில் என்ன இருக்கிறது?
இன்ன இன்ன விஷயங்கள் இருக்கிறது.
ஓ அப்படியா? சரி நாங்களும் பார்க்க முயற்சிக்கிறோம். வேறு எங்கும் செல்வதாக இல்லையா?
இல்லை. குழந்தை இருப்பதால் ரொம்பவும் அலையமுடியவில்லை.
சரி சரி. சரி நாங்கள் வருகிறோம். பார்க்கலாம்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். இவ்வளவுதான் பேசினார்கள். பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று எந்த விசாரிப்பும் இல்லை. நாங்கள் ஒரு வாக்கியம் பேசி முடிப்பதற்குள் அடுத்த கேள்வியுடன் வந்து கொண்டிருந்தார்கள். வெறுத்துப்போய்விட்டோம். இனிமேல் தேவையில்லாமல் இந்தியர்களுடன் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டோம்.

பின்னர் ஒரு முறை ஒரு பேரங்காடியில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் தானாக வந்து “நீங்கள் தமிழா?” என்று தமிழிலேயே கேட்டு பேச ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நாங்கள் சிறிது தயங்கினாலும் கொஞ்ச நேரத்தில் சகஜமாக பேச ஆரம்பித்தோம். “எங்கங்க? நம்ம ஆளுங்கதான் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டா பேசவே மாட்டாங்க” என்று அலுத்துக்கொண்டார். அட நம்ம அனுபவம் இவருக்கும் இருக்கே என்று நெருக்கமானோம். நிறைய விஷயங்கள் சொன்னார். பின்னர் நாங்கள் சுவிட்சர்லாந்து பயணம் செய்ததற்கு இவரின் யோசனைகளும் ஒரு காரணம். கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு பிரிந்தோம். பின்னர் இருமுறை நாங்களே அழைத்துப் பேசினோம். மூன்றாவது முறையிலிருந்து அழைத்தால் அவர்கள் அழைப்பை கண்டுகொள்ளவேயில்லை. சரிதான் இன்னுமொரு ஆள் என்று விட்டுவிட்டோம். இப்படி கத்தரித்துக்கொண்டு போவதற்கு எதற்கு அன்றைக்கு அவ்வளவு அங்கலாய்த்துக்கொண்டார் என்று தெரியவில்லை.

ஜெர்மன் மொழி வகுப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் இரண்டு இந்திய மாணவர்கள் வகுப்பிற்கு வந்தார்கள். ஆசிரியருக்கோ ஆச்சரியம். ஏனென்றால் வகுப்பு ஆரம்பித்து சில நாட்கள் ஆகியிருந்தன. இந்த நேரத்தில் புதிய ஆட்களை சேர்த்துக்கொள்வது இயலாத ஒன்று. ஆனால் நிர்வாகம் அவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு  கூறி அவர்களை அவ்வாசிரியரிடம் அனுப்பியிருந்தது. அவர் பொறுமையாக அம்மாணவர்களிடம் “இதோ பாருங்கள். இதுதான் சிக்கல். உங்களை என்னால் இந்த வகுப்பில் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் சென்று நிர்வாகத்திடம் பேசுகிறேன். வேறு ஏற்பாடுகளை உங்களுக்கு செய்து தருகிறோம்” என்று சொல்லிவிட்டார். எங்களுக்கோ சிறிது ஏமாற்றம். ஏனென்றால் அதில் ஒருவன் பார்ப்பதற்கு தமிழன் போலவே இருந்தான். அந்தப் பையன் விடாமல் “அவ்வளவு விரைவாக என்ன நடத்தியிருக்கிறீர்கள்? இந்த எழுத்துக்களை எங்களுக்கு சொல்லித்தரமுடியுமா? இதை எப்படி உச்சரிப்பது?” என்று எங்கள் வகுப்பு நேரத்தை கெடுத்து அவரிடம் கேள்விமேல் கேள்வியாக கேட்டுக்கொண்டேயிருந்தனர். எங்களுக்கு மிகவும் சங்கடமாக ஆகிவிட்டது. கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லாமல் நடந்துகொண்டனர். மேலும் அதில் ஒருவன் என்னிடம் வந்து “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு என்னென்ன சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்?” என்று ஆரம்பித்தான். நான் உடனே பேச்சை கத்தரித்து அவனை அவ்வாசிரியரிடமே பேசிக்கொள்ளுமாறு அனுப்பிவிட்டேன். ஏறத்தாழ ஐந்து நிமிடங்களுக்கு மேல் இந்த கூத்து நடந்தது. பின்னர் ஒருவழியாக அவர்கள் வெளியேறினார்கள். அந்த ஆசிரியர் அதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு பாடத்தை தொடர்ந்தார். பாவம்.

பாரீஸ் சென்றபோது அங்கே ஈழத்தமிழர்கள் வேலைபார்க்கும் உணவு விடுதிக்கு சென்றிருந்தோம். அவர்கள் நிச்சயம் எங்களுடன் நன்றாகப் பேசுவார்கள் என்று நினைத்திருந்தோம். பணிச்சுமையால் என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்த அளவு எங்களிடம் அவர்கள் பேசவில்லை. ஆனால் எடுத்தவுடன் தமிழில் பேசியதும் அண்ணா என்று அழைத்ததும் மனதுக்கு நிறைவாக இருந்தது. இல்லையென்று சொல்லாமல் ஒரேயொரு நல்ல அனுபவம் ஜெர்மனியில் கிடைத்தது. ஒருமுறை ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது ஒரு மலையாளி தன் குடும்பத்துடன் அங்கே வந்தார். தானாகவே அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றாக பேச ஆரம்பித்தார். நிறைய ஆலோசனைகள் சொன்னார். எங்களைப் பற்றியும் நிறைய விசாரித்தார். ஒரேயொரு வருத்தம். அவரது மனைவிக்கு ஆங்கிலம் நன்கு பேசவரும் என்பது அவர் சொன்னதிலிருந்து தெரியவந்தது. ஆனால் அவரோ ஒரு வார்த்தைகூட எங்களிடம் பேசாமல் விலகியே நின்றார். எல்லாத்துலயும் ஒரு இம்சை 🙂

(தொடரும்)