சந்தித்த இந்தியர்கள் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 7

முன்னொரு பதிவில் அங்கு சந்தித்த வேறுநாட்டு மக்களைப் பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அங்கே சந்தித்த இந்தியர்களையும் அவர்களுடனான அனுபவங்களையும் இங்கே சுருக்கமாக எழுதுகிறேன். ம்யூனிக்கில் பொதுவாக இந்தியர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் தமிழர்கள் மிகவும் குறைவு. எப்போதாவதுதான் கண்ணில் தென்படுவார்கள். பொதுவாகவே நம் ஆட்கள் யாரும் எளிதாக மற்ற இந்தியர்களைப் பார்த்து பேசுவதில்லை. பார்ப்பதையே தவிர்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னிடம் பேசிய ஒரு ஜெர்மன் பெண்மணியும் இதை கவனித்து என்னிடம் “நாங்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டில் ஒரு ஜெர்மானியரை கண்டால் கட்டிப்பிடித்துக்கொள்ளாத குறையாக மகிழ்ந்து பேசிவிட்டு வருவோம். ஆனால் நீங்கள் இந்தியர்கள் அவ்வாறு செய்து நான் பார்த்ததில்லையே, ஏன்?” என்றூ கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. “ஆம் அவ்வாறுதான் இருக்கிறோம். விசேஷ காரணங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் அப்படித்தான் இருக்கிறோம்” என்று சமாளித்தேன். நம் ஆட்களின் இந்த குணத்தால் நடந்த சில நகைச்சுவைகளின் தொகுப்பே இந்தப் பதிவு.

முதன்முறை ஜெர்மனி சென்றபோது நானும், (என் தமையன் :)) சுனிலும் ஒருமுறை சுரங்கப்பாதை மின்தொடர்வண்டியில் வந்துகொண்டிருந்தோம். ஏறியவுடனேயே எங்களுக்கு எதிரில் ஒரு இந்தியன் நின்றுகொண்டிருப்பதை கவனித்தேன். அந்த சமயத்தில் இம்மாதிரி “பார்ப்பதைக் கூட விலக்கிவிட்டு செல்லும்” அனுபவங்களை ஓரளவு நான் பெற்றிருந்ததால், அலட்டிக்கொள்ளாமல் என்னுடைய கைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தேன். ஆனால் சுனில் அப்படியல்ல. யாரையும் விடமாட்டான். ஆகவே பேச ஆரம்பித்தான். ஆங்கிலத்தில் இருவரும் உரையாடிக்கொண்டே வந்தனர். அந்த பையன் ஏதோ படிப்பு விஷயமாக வந்தான் என்று சொன்னதாக நினைவு. சுனில் அவனிடம் பேசுவது எனக்கு எரிச்சலை அளித்துக்கொண்டிருந்தது. நாங்களிருவரும் இறங்கும் இடம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகவே இதை சாக்கிட்டு அவர்கள் பேச்சை கலைக்க முற்பட்டேன். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். அவர்கள் இன்னமும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு வந்தனர். சுனில் பொதுவாக மூன்றாவது வாக்கியத்தில் ஹிந்துக்கு போக முயற்சிப்பான். ஆனால் இன்னமும் இருவரும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. சரியாக அந்த நேரத்தில் சுனில் ஹிந்தியில் ஏதோ பேச ஆரம்பிக்க, அந்த பையன் சங்கடமாக “எனக்கு ஹிந்தி தெரியாது” என்று ஆங்கிலத்தில் சொன்னான். நானும் சுனிலும் சட்டென்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். நான் உடனே “இந்தியாவில் எங்கிருந்து வருகிறாய்” என்று ஆவலாக கேட்க “தமிழ்நாடு” என்கிறான்! நான் உடனே தமிழுக்குத் தாவி “அடப்பாவி, இவ்வலவு நேரம் தெரியாமல் போயிற்றே” என்று வருத்தப்பட்டேன். அவனும் “அடடா, நீங்களும் தமிழா? என்ன கொடுமை இது? இது தெரியாமல் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டேன்” என்றான். சரி கைபேசி எண்ணாவது வாங்கிக்கொள்ளலாம் என்றால் நாங்கள் இறங்குமிடம் வந்துவிட்டது. சிறிது வேதனையுடன் கையசைத்துவிட்டு பிரிந்தோம். வழக்கம்போல சுனிலிடமிருந்து எனக்கு திட்டு விழுந்தது. “ஏன் அவன் ஹிந்திக்காரனாகவே இருந்தால்தான் என்ன? அவனிடம் பேசுவதற்கு ஏன் உனக்கு இவ்வளவு வலிக்கிறது?” என்று திட்ட ஆரம்பித்துவிட்டான். “சரி சரி விடு” என்று சொல்லி பிரிந்தோம்.

அதன் பின்னர் மைய ரயில் நிலையத்திற்கு அடிக்கடி செல்லும் தேவை எங்களுக்கு இருந்தது. அப்போதெல்லாம் ஒரு தமிழ் குடும்பத்தை நாங்கள் பார்ப்போம். அதிலும் அந்த பையனின் அம்மா புடவை பொட்டு என்றுதான் வருவார். ஆனாலும் அவர்கள் யாரும் எங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றுவிடுவார்கள். ஆரம்பத்தில் நானும் அவ்வாறே கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக்கொண்டேன். அதாவது யாரேனும் இந்தியர்களை பார்க்க நேர்ந்தால், அவர்களின் கண்ணையே பார்த்துக்கொண்டிருப்பேன். அவர்களும் என்னை பார்த்தால் சிரிப்பது. இல்லையென்றால் அமைதியாக சென்றுவிடுவது, தானாக போய் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். சுனிலிடம் திட்டு வாங்குவதிலிருந்தும் தப்பிக்கவேண்டுமே? (பாத்தியா? நான் பாத்துக்கிட்டுதான் இருந்தேன், அவங்கதான் கண்டுக்கல… ஆமா நீ இப்படியே பேசிக்கிட்டு இரு) ஹிந்தி தெரிந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால் அவர்கள் தமிழர்களுடனோ அல்லது தமிழர்கள் தங்களுக்குள்ளேயோ பேசிக்கொள்வதில் ஏதோ பிரச்சனை இருந்துவந்தது. ஒருமுறை மின்தொடர்வண்டியில் ஒரு தம்பதியை நானும் என் மனைவியும் பார்த்தோம். மெல்லிய குரலில் தமிழில் பேசிக்கொண்டே வந்தார்கள். எங்களையும் பார்த்தார்கள். புன்னகையும் செய்தார்கள். ஆனால் பேச முன்வரவில்லை. சரிதான் என்று நாங்களும் விட்டுவிட்டோம். என் இன்னொரு நண்பர் பின்னர் சொல்லும்போது அங்கு ஒரு தமிழ் கூட்டம் இருப்பதாகவும் கிரிக்கெட் எல்லாம் விளையாடுவதாகவும் சொன்னார். எங்கள் கண்ணில்தான் அவர்கள் தென்படவில்லை.

ஆஸ்திரியா சென்றபோது இது நடந்தது. அங்கு ஒரு பேருந்து நிறுத்தத்தில் திடீரென ஒரு இந்திய தம்பதியை பார்க்க நேர்ந்தது. வடநாட்டினர். நாங்கள் பார்த்து புன்னகைத்ததும் அவர்களே நெருங்கி வந்தனர். “அப்பாடா அவர்களே வருகிறார்கள். அப்படியென்றால் பேசலாம்” என்று நாங்களும் மகிழ்ந்தோம். அவர்கள் வந்து பேச ஆரம்பித்தார்கள். ஆங்கிலத்தில்தான். எங்களுக்குள் நடந்த உரையாடல் பின்வருமாறு.

ஹலோ
ஹலோ
இங்கு சுற்றுலா பயணியாக வந்தீர்களா?
ஆமாம். நீங்கள்?
நாங்களும்தான். இங்கே என்னென்ன இடங்களைப் பார்த்தீர்கள்? (அதற்குள் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார்)
நாங்கள் அ, ஆ ஆகியவற்றை பார்த்தோம். இ-க்கு சென்றுகொண்டிருக்கிறோம்.
ஓ? நாங்கள் அ பார்த்தோம். ஆ வில் என்ன இருக்கிறது?
இன்ன இன்ன விஷயங்கள் இருக்கிறது.
ஓ அப்படியா? சரி நாங்களும் பார்க்க முயற்சிக்கிறோம். வேறு எங்கும் செல்வதாக இல்லையா?
இல்லை. குழந்தை இருப்பதால் ரொம்பவும் அலையமுடியவில்லை.
சரி சரி. சரி நாங்கள் வருகிறோம். பார்க்கலாம்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். இவ்வளவுதான் பேசினார்கள். பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று எந்த விசாரிப்பும் இல்லை. நாங்கள் ஒரு வாக்கியம் பேசி முடிப்பதற்குள் அடுத்த கேள்வியுடன் வந்து கொண்டிருந்தார்கள். வெறுத்துப்போய்விட்டோம். இனிமேல் தேவையில்லாமல் இந்தியர்களுடன் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டோம்.

பின்னர் ஒரு முறை ஒரு பேரங்காடியில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் தானாக வந்து “நீங்கள் தமிழா?” என்று தமிழிலேயே கேட்டு பேச ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நாங்கள் சிறிது தயங்கினாலும் கொஞ்ச நேரத்தில் சகஜமாக பேச ஆரம்பித்தோம். “எங்கங்க? நம்ம ஆளுங்கதான் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டா பேசவே மாட்டாங்க” என்று அலுத்துக்கொண்டார். அட நம்ம அனுபவம் இவருக்கும் இருக்கே என்று நெருக்கமானோம். நிறைய விஷயங்கள் சொன்னார். பின்னர் நாங்கள் சுவிட்சர்லாந்து பயணம் செய்ததற்கு இவரின் யோசனைகளும் ஒரு காரணம். கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு பிரிந்தோம். பின்னர் இருமுறை நாங்களே அழைத்துப் பேசினோம். மூன்றாவது முறையிலிருந்து அழைத்தால் அவர்கள் அழைப்பை கண்டுகொள்ளவேயில்லை. சரிதான் இன்னுமொரு ஆள் என்று விட்டுவிட்டோம். இப்படி கத்தரித்துக்கொண்டு போவதற்கு எதற்கு அன்றைக்கு அவ்வளவு அங்கலாய்த்துக்கொண்டார் என்று தெரியவில்லை.

ஜெர்மன் மொழி வகுப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் இரண்டு இந்திய மாணவர்கள் வகுப்பிற்கு வந்தார்கள். ஆசிரியருக்கோ ஆச்சரியம். ஏனென்றால் வகுப்பு ஆரம்பித்து சில நாட்கள் ஆகியிருந்தன. இந்த நேரத்தில் புதிய ஆட்களை சேர்த்துக்கொள்வது இயலாத ஒன்று. ஆனால் நிர்வாகம் அவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு  கூறி அவர்களை அவ்வாசிரியரிடம் அனுப்பியிருந்தது. அவர் பொறுமையாக அம்மாணவர்களிடம் “இதோ பாருங்கள். இதுதான் சிக்கல். உங்களை என்னால் இந்த வகுப்பில் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் சென்று நிர்வாகத்திடம் பேசுகிறேன். வேறு ஏற்பாடுகளை உங்களுக்கு செய்து தருகிறோம்” என்று சொல்லிவிட்டார். எங்களுக்கோ சிறிது ஏமாற்றம். ஏனென்றால் அதில் ஒருவன் பார்ப்பதற்கு தமிழன் போலவே இருந்தான். அந்தப் பையன் விடாமல் “அவ்வளவு விரைவாக என்ன நடத்தியிருக்கிறீர்கள்? இந்த எழுத்துக்களை எங்களுக்கு சொல்லித்தரமுடியுமா? இதை எப்படி உச்சரிப்பது?” என்று எங்கள் வகுப்பு நேரத்தை கெடுத்து அவரிடம் கேள்விமேல் கேள்வியாக கேட்டுக்கொண்டேயிருந்தனர். எங்களுக்கு மிகவும் சங்கடமாக ஆகிவிட்டது. கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லாமல் நடந்துகொண்டனர். மேலும் அதில் ஒருவன் என்னிடம் வந்து “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு என்னென்ன சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்?” என்று ஆரம்பித்தான். நான் உடனே பேச்சை கத்தரித்து அவனை அவ்வாசிரியரிடமே பேசிக்கொள்ளுமாறு அனுப்பிவிட்டேன். ஏறத்தாழ ஐந்து நிமிடங்களுக்கு மேல் இந்த கூத்து நடந்தது. பின்னர் ஒருவழியாக அவர்கள் வெளியேறினார்கள். அந்த ஆசிரியர் அதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு பாடத்தை தொடர்ந்தார். பாவம்.

பாரீஸ் சென்றபோது அங்கே ஈழத்தமிழர்கள் வேலைபார்க்கும் உணவு விடுதிக்கு சென்றிருந்தோம். அவர்கள் நிச்சயம் எங்களுடன் நன்றாகப் பேசுவார்கள் என்று நினைத்திருந்தோம். பணிச்சுமையால் என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்த அளவு எங்களிடம் அவர்கள் பேசவில்லை. ஆனால் எடுத்தவுடன் தமிழில் பேசியதும் அண்ணா என்று அழைத்ததும் மனதுக்கு நிறைவாக இருந்தது. இல்லையென்று சொல்லாமல் ஒரேயொரு நல்ல அனுபவம் ஜெர்மனியில் கிடைத்தது. ஒருமுறை ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது ஒரு மலையாளி தன் குடும்பத்துடன் அங்கே வந்தார். தானாகவே அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றாக பேச ஆரம்பித்தார். நிறைய ஆலோசனைகள் சொன்னார். எங்களைப் பற்றியும் நிறைய விசாரித்தார். ஒரேயொரு வருத்தம். அவரது மனைவிக்கு ஆங்கிலம் நன்கு பேசவரும் என்பது அவர் சொன்னதிலிருந்து தெரியவந்தது. ஆனால் அவரோ ஒரு வார்த்தைகூட எங்களிடம் பேசாமல் விலகியே நின்றார். எல்லாத்துலயும் ஒரு இம்சை 🙂

(தொடரும்)