அசைவ உணவு அனுபவங்கள் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 8

ஜெர்மனியில் இருந்தபோது ஏற்பட்ட அசைவ உணவு சம்பந்தமான அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அங்குள்ள வழக்கப்படி அசைவ உணவுகளை meat என்றே குறிப்பிடுவார்கள். மற்றபடி vegetarian, non-vegetarian என்ற இரண்டு வார்த்தைகளையும் வித்தியாசமின்றி பயன்படுத்துவார்கள். இதனால் ஒரு சிக்கல் நேரும். மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகளை அவர்கள் வெஜிடேரியன் என்ற பிரிவில் சேர்த்துவிடுவார்கள். ஆனால் பால் பொருட்களை நான்-வெஜிடேரியன் என்று சொல்வார்கள். எதனால் என்று தெரியவில்லை. இதனால் நிறைய குழப்பங்கள் நடந்தன.

முதன்முறை சென்றபோது வாடிக்கையாளர்களுடனான இரவு உணவில் நான் அருகில் அமர்ந்திருந்த ஜெர்மானியரிடம் “நான் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. ஆகவே அசைவ உணவு பரிமாறப்பட்டால் எனக்கு முன்னரே சொல்லிவிடுங்கள்” என்று “உங்கள பார்த்தா ஸ்ரீரங்கத்துல படுத்திருக்கிற பெருமாளே எழுந்து வந்தமாதிரி இருக்கு” என்னும் ரீதியில் கெஞ்சி கோரிக்கை வைத்திருந்தேன். அவரும் “கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னார். தெம்பாக அமர்ந்திருந்தேன். தேங்காய் சட்டினி போன்ற ஒன்று இருந்தது. அவரிடம் கேட்டுவிட்டு எடுத்து விட்டுக்கொண்டேன். எனக்கு அந்தப் பக்கம் இருந்த என் குழுவில் வேலைபார்த்த தமிழர் “அதை சாப்பிடாதே. அதில் மீனின் ஊண் கலந்திருக்கிறது” என்றார். அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்று (நம்ம ஆள்தான் இது சைவம் என்று சொல்லிவிட்டாரே என்ற மிதப்பில்) உண்ண ஆரம்பித்தேன். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து எதற்கும் இருக்கட்டும் என்று இந்த ஜெர்மானியரிடம் “இதில் மீன் கலந்திருக்கிறதா” என்று கேட்க அவரும் சாதாரணமாக ஆமாம் என்றார். “ஐயோ நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொன்னேனே” என்று சொல்ல “ஆனால் இது மீன்தானே?” என்றார். நான் அவரை பரிதாபமாக பார்க்க “ஓ நீ meat எதையும் உட்கொள்ள மாட்டாயா?” என்றார். நானும் ஆமாம் என்று சொல்லி பரவாயில்லை என்று அதை எடுத்துவைத்துவிட்டு சாப்பாட்டை தொடர்ந்தேன். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பனீர் கட்டிகளை ஆவலாக எடுத்து போட்டுக்கொண்டேன். அக்காலங்களில் அவை எனக்கு கைகொடுக்க வந்த தெய்வமாக தோற்றமளிக்கும். சைவம் அதே சமயம் வயிற்றை அடைக்கும் அளவு கனமான உணவாயிற்றே? அவர் அவசரமாக என்னிடம் “அதை போட்டுக்கொள்ளாதே. அது மாட்டின் இறைச்சியாலானது” என்றார். சோத்துலயும் அடி வாங்கியாச்சு சேத்துலயும் அடிவாங்கியாச்சு என்ற கதையாக மீனைத் தின்றதோடல்லாமல் மாட்டையும் சுவைக்க பார்த்தோமே என்று கவலையாகிவிட்டேன். பின்னர் சுதாரித்துக்கொண்டு “இது மாட்டின் பாலினாலனதுதானே? இல்லை மாட்டிலிருந்து வெட்டியெடுத்தார்களா?” என்று கேட்க அவர் “இல்லை மாட்டின் பாலிலிருந்து எடுக்கப்படுவதுதான். ஆனால் இது அசைவத்தில் சேர்த்திதானே?” என்றார். நானோ “இல்லை. இதை நான் சாப்பிடலாம்” என்று சொல்ல அதன்பிறகு அவர் என்னிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அலுவலகத்திற்கு சென்ற முதல்நாள் மதிய உணவை எங்கள் ஜெர்மனி மேலாளருடன் உட்கொண்டோம். அவர் சாப்பிடும் இறைச்சி என்ன என்றறிய ஆர்வம் கொண்ட இந்திய நண்பர் ஒருவர் “அது என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்க, அந்த மேலாளரோ “இது இறைச்சியின் எந்த பாகம்?” என்று கேட்கிறார் என புரிந்துகொண்டு “இது இறைச்சியை வெட்டியெடுத்தபின் இந்த உறுப்பை சுத்தம் செய்து அதை இன்ன இன்ன மாதிரி சமைத்து இன்ன இன்ன பொருட்கள் சேர்த்து பரிமாறுகிறார்கள்” என்று ஒரு பெரிய விளக்கத்தையளித்தார். கேள்விகேட்ட நண்பரின் முகத்தில் இன்னமும் கேள்வி நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு பின்னர் கேள்வியை சரியாக புரிந்துகொண்டு “இது பன்றியாக இருந்தது” என்று முடித்தார். அவர் அதை ஆங்கிலத்தில் சொன்னபோது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. என்ன ஒன்று? கேட்டுகொண்டிருந்தவர்கள் அத்தனை அருகில் பன்றி மாமிசத்தை பார்த்து நெளிந்தோம்.

இன்னொருமுறை வாடிக்கையாளருடனான விருந்துக்கு சென்றபோது நல்ல பசி. அவர்களோ வெகுநேரம் கழித்து பீட்ரூட் உருளைக்கிழங்கு ஆகியவற்றாலான கட்லெட் போன்ற ஒன்றை கொண்டுவந்து வைத்தனர். அது அந்த உணவு விடுதியின் சிறப்பு உணவு என்றறிந்தோம். பசி மேலிட, சைவம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டோமே என்ற நம்பிக்கையில் பாய்ந்து அவற்றை எடுத்து உண்டுவிட்டேன். எனக்கு சற்று தள்ளியிருந்த எங்கள் குழுவை சேர்ந்தவர் அது எதனால் ஆகியிருக்கிறது என்று தோண்டி தோண்டி கேட்க அவர்கள் சொன்னது “அது ஆக்டோபஸிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை திரவத்தால் ஆனது”. அதாவது ஆக்டோபஸின் மாமிஸம் எதுவும் அதில் இல்லை. அந்த திரவத்தை எடுத்தபின்னும் அது உயிரோடுதான் இருக்கும். என்றாலும் மற்றவர்கள் உடனே வேண்டாம் வேண்டாம் என்று அலற  “ ஏன்? மாட்டின் பாலினால் ஆனது போன்றதுதானே இதுவும்?” என்று அந்த உணவை தயாரித்த அந்த விடுதியின் சமையல் கலைஞர் சொல்லிப்பார்த்தார். அதிலுள்ள தர்க்கம் அவர்கள் மூளைக்கு உறைத்தாலும் அந்த உணவு மனதிற்கு ஏற்புடையதாக இல்லையென்பதால் அனைவரும் வேண்டாம் என்று சொல்லி திருப்பிவிட்டனர். அந்த கலைஞர் சற்று வருத்தமாகிவிட்டார். ஆனால் அந்த உணவின் மூன்று துண்டுகளை முழுக்க சாப்பிட்ட ஒருவனைப் பற்றி பின்னர் அறிந்து சந்தோஷப்பட்டிருக்கக்கூடும்! ஆக்டோபஸின் கோமியத்தை சாப்பிட்டுவிட்டாயே என்று எல்லோரும் என்னை வெகுநாள் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

வாடிக்கையாளரின் அலுவலக்த்தில் உள்ள உணவு அறையில் பஃபே முறையில் உணவு அளிக்கப்படும். சில உணவுகளுக்கு மட்டும் பரிமாற பணியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் ஜெர்மன் மொழியை மட்டுமே அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் ஒவ்வொரு உணவையும் பற்றி விசாரித்து எடுத்துக்கொள்வதற்குள் பசியே சமயத்தில் மந்தித்துவிடும். ஒருமுறை அவ்வாறு ஒரு உணவைப் பற்றி நான் கேட்க, அவரும் விளக்க முற்பட்டார். கிடுகிடுவென்று ஜெர்மன் மொழியில் ஏதோ சொன்னார். நான் சிலைபோல அவரையே பார்த்தேன். கொஞ்சம் நிதானித்து வேறு வார்த்தைகளில் அதை கிடுகிடுவென மறுபடியும் சொன்னார். சிலை அசையவில்லை. உதிரியாக சில வார்த்தைகளைக் கூறி விளக்க முற்பட்டு என்னைப் பார்த்த்விட்டு நிறுத்திக் கொண்டார். சரி இவ்வளவு ஆபத்துக்கிடையில் இவ்வுணவை நான் உண்ணவேண்டாம் என்று நகர முற்பட அந்த பருத்த உயர்ந்த வெள்ளை மனிதர் சட்டென்று கைகள் இரண்டையும் விரித்து நெஞ்சில் படார் படாரென்று அடித்துக்கொண்டு “பாக், பாக், பாக்” என்றார். நான் உட்பட அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டோம். அவரும் சிரித்துவிட்டார். அவருடைய முயற்சியை மனதுக்குள் மெச்சி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த உணவை நோக்கி சென்றேன்.

பாரிஸுக்கு சென்றபோது அங்கிருந்த முனியாண்டி விலாஸ் உணவு விடுதிக்கு பரோட்டா சாப்பிடலாம் என்று ஆசைப்பட்டு சென்றிருந்தோம். பரோட்டாவும் ஒரு சைவ குருமாவையும் கொண்டு வர சொன்னோம். அங்கு இருந்த ஈழ பணியாளன் “அண்ணா, நீங்கள் இதற்கு பதிலாக இதை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு பரோட்டாவும் கோழியும் கிடைக்குமே” என்று சுத்தத் தமிழில் பதிலளித்தான். நாம் கோழியின் ஊணை சிக்கன் என்று சொல்லிதான் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? கோழி என்று தமிழில் இங்கு யாரும் சொல்வதில்லையே? ஆகவே கோழி என்றவுடன் உயிருள்ள கோழியை நினைத்துக்கொண்டுவிட்டோம். அதை வைத்து என்ன செய்வார்கள் என்று சில நொடிகள் யோசித்துவிட்டு அடக்கடவுளே சிக்கனை சொல்கிறான் என்று புரிந்து கொண்டோம். சிரித்துக் கொண்டே வேண்டாம் என்று சொல்லி சைவ குருமாவையே கொண்டுவா என்றோம்.

(தொடரும்)