இயற்கை – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 9

ஜெர்மனியில் இருக்கும்போது நண்பர் ஒருவரின் புண்ணியத்தில் சிறு சிறு உள்ளூர் பயணங்களை செய்துவந்தோம். அதில் ஒன்றுதான் முன்பு எழுதிய‌ அந்த திகிலூட்டும் பயணமாக அமைந்தது. மற்ற அனைத்துமே நன்றாக அமைந்தன. அதில் ஒன்று கார்மிஷ் பார்ட்டன்கிஷன் என்ற இடத்திற்கு சென்றது. அங்கு முன்பே சென்றிருந்த ஒரு நண்பரிடம் “குழந்தையோடு செல்வதற்கு ஏற்ற இடமா” என்று கேட்டபோது “அது ஏறத்தாழ இருபது கிலோமீட்டர் தூரம் நடக்க வசதியுள்ள பாதை. முதல் பதினாறு கிலோமீட்டர் தூரத்திற்கு நீங்கள் குழந்தையை வண்டியில் வைத்து தள்ளிச்செல்வதற்கு ஏதுவாக இருக்கும். கடைசி நான்கு கிலோமீட்டர் தூர பாதை சவாலான ஒன்று. பார்த்துக்கொள்ளுங்கள். வட்டமான பாதைதான். ஆகவே ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவீர்கள்” என்றார்.

நானும் அந்த நண்பரும் குடும்பத்துடன் செல்லவேண்டியது, என் மகளை வண்டியில் வைத்துக்கொண்டு நடக்கவேண்டியது. 16 கிலோமீட்டரில் எவ்வளவு தூரம் எங்களால் நடக்க முடிகிறதோ அவ்வளவு தூரம் நடந்துவிட்டு நானும் என் மனைவியும் குழந்தையுடன் திரும்பி விடுவது. என் நண்பரும் அவர் மனைவியும் முழுக்க சுற்றிவிட்டு வரவேண்டியது. ஆரம்பித்த இடத்தில் திரும்பவும் சந்தித்துக் கொள்ளவேண்டியது என்று திட்டமிட்டுக்கொண்டோம். எங்களுக்கேயான சொதப்பும் குணம் அங்கேயும் சிறிது தலைகாட்டிவிட்டது. அதாவது அந்த வட்டமான பாதையை இடப்புறம் ஆரம்பித்து சென்றால் மேற்கூறியவாறு சுற்றி வந்து வலப்புறம் உள்ள சாலை வழியாக ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேருவோம். ஆனால் நாங்கள் தவறுதலாக வலப்புறமாக அந்த வட்டத்தை சுற்ற ஆரம்பித்துவிட்டோம். ஒரு சிறிய ஆற்றின் கரையில் நடந்து சென்றோம். இரண்டு கிலோமீட்டர் நடந்தபிறகு ஓரிடத்தில் குகை போன்ற ஓரிடத்தில் பாதை முடிந்தது. குழந்தையை வைத்து தள்ளிக்கொண்டுவரும் வண்டிகளை ஓரிடத்தில் நிறுத்திவைத்துவிட்டு வரச் சொன்னார்கள். ஏதோ குழப்பமாகிவிட்டது என்று புரிந்தாலும் நாங்கள் செய்த தவறு எங்களுக்கு முழுக்க புரியவில்லை. சரி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று என் மகளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றால், மிகக் குறுகலான பாதை ஆரம்பித்தது. அதாவது எதிரில் ஒருவர் வந்தால் நான் சற்று நின்று அவருக்கு வழிவிட்டுத்தான் செல்லமுடியும். மேலும் குகை போன்று பாறையில் குடைந்த பாதை என்பதால் மிக மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்தது. கைபேசியில் உள்ள ஒளியின் உதவியுடன் நடக்க ஆரம்பித்தோம். சில மீட்டர் தூரத்தில் ஓவென தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரத்தில் எங்கள் வலப்பக்கம் பாறை முடிந்து வெளிச்சம் தெரிந்தது.

எங்களுக்கு சற்று கீழே கடும் வேகத்தில் அதே ஆறு இரைச்சலுடன் சீறிப் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. மலையின் இடுக்கில் பாய்ந்துவருவதான் இந்த வேகம், இரைச்சல். வேகமாக வரும் தண்ணீருக்கு மேலே சுமார் ஆறடிக்கும் குறைவான அகலமுள்ள பாதையில் எதிரில் வரும் ஆட்களை சமாளித்துக்கொண்டு நடக்க வேண்டும். தண்ணீர் துமிகள் தெளித்து காலடியில் பாதை வழுக்கியது. கையில் குழந்தை இடப்புறம் பாறை, வலப்புறம் இரு கனத்த கம்பியாலான தடுப்பு மட்டும். ஜெர்மனியில் நடப்பவர்கள் வலப்புறமாக செல்வார்கள் என்பதால் வருபவர்களுக்கு வழிவிட வேண்டி வரும்போது அந்த கம்பியை ஒட்டி குழந்தையுடன் நிற்கவேண்டும். முதலில் நான்தான் என் மகளை தூக்கிக்கொண்டு வந்தேன். ஆனால் நேரம் செல்ல செல்ல என்னால் இந்த சாதனையை அதிக நேரம் நிகழ்த்த முடியாது என்று தோன்றியது. நான் எப்போதுமே வியக்கும் பெண்களின் ஆற்றலை அப்போதும் அனுபவித்தேன்.

என் மனைவி தனது செருப்புகள் இரண்டையும் கழற்றினாள். நாங்கள் சென்றது கோடை காலமென்றாலும் செருப்புகளின்றி அந்த குளிர்ந்த நீர் தெளித்த ஈரமான பாதையில் நடப்பது கால்களை எளிதில் குளிரச் செய்துவிடும். ஆனால் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குழந்தையை என்னிடம் வாங்கிக்கொண்டு வெகு சாதாரணமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள். வருபவர்களுக்கு வழிவிட்டுக்கொண்டு, சீறியோடும் ஆற்றை ரசித்துக்கொண்டு, மகளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு என்று சென்றுகொண்டேயிருந்தாள். எப்படியும் ஒரு மூன்றுகிலோமீட்டர் இவ்வாறு நடந்து சென்றாள்.

சில இடங்களில் மேலிலிருந்தும் மெலிதாக நீர் நம்மீது விழுந்துகொண்டிருக்கும். நீரின் வேகம் பிரமிக்க வைத்தது. அவ்வளவு அருகில் அவ்வளவு வேகத்தில் நீரை பார்ப்பதே அசத்தலான அனுபவமாக இருந்தது. குறுகலான இருளான குகைப்பாதை இன்னமும் திகிலை கூட்டியது. ஒருவழியாக கடந்து சமவெளிக்கு வந்தோம். அங்கு அதே ஆறு மிக மெதுவாக ரம்மியமான ஒலி எழுப்பிக்கொண்டு அமைதியாக சென்றுகொண்டிருந்தது. நாங்கள் அதில் கால் நனைக்கவும், ஓரளவு நடுப்பகுதி வரைக்கும்கூட செல்லவும் முடிந்தது. கடுமையான கால் வலி எடுக்கும்போது குளிர்ந்த நீரில் பாதத்தை வைத்தால் சரியாகும் என்று ஆஸ்திரியாவில் கண்டுபிடித்திருந்தோம். அதையே இங்கும் செய்து புத்துணர்வு பெற்றோம். அந்த குகைப் பாதையில் தண்ணீர் அங்கங்கு சொட்டிக்கொண்டே இருந்ததால் என்னுடைய காமிராவில் எதுவும் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை. இந்த சமவெளியில் எடுக்க முடிந்தது. பின்னர் மறுபடியும் வந்தவழியே நடந்து ஆரம்பித்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

பின்னர் அந்த நண்பரிடம் பேசியபோதுதான் நாங்கள் தவறான பாதையை தேர்ந்தெடுத்தது தெரியவந்தது. மேலும் அந்த சீற்றம் மிகுந்த ஆறு பனிக்காலத்தில் முழுக்க உறைந்திருக்கும் என்றும் சொன்னார். “இடப்புறமாக ஆரம்பித்திருந்தால் நீங்கள் இயற்கையை இன்னமும் ரசித்திருக்கலாம். அமைதியான மலை, புல்வெளி, நடைபாதை என்று மிகவும் வசீகரமாக இருந்தது” என்றார். அங்கு இருந்த காலகட்டத்தில் அவ்வாறு இயற்கையின் அமைதியை ரசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு மாறுதலுக்கு இம்முறை அதன் ஆர்ப்பாட்டத்தை ரசித்துவிட்டு வந்தோம்.

முடிவுரை : ஏறத்தாழ அனைத்து முக்கிய அனுபவங்களையும் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆகவே இத்துடன் இத்தொடரை முடித்துக்கொள்கிறேன். படித்துவந்ததற்கு நன்றிகள்.

அசைவ உணவு அனுபவங்கள் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 8

ஜெர்மனியில் இருந்தபோது ஏற்பட்ட அசைவ உணவு சம்பந்தமான அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அங்குள்ள வழக்கப்படி அசைவ உணவுகளை meat என்றே குறிப்பிடுவார்கள். மற்றபடி vegetarian, non-vegetarian என்ற இரண்டு வார்த்தைகளையும் வித்தியாசமின்றி பயன்படுத்துவார்கள். இதனால் ஒரு சிக்கல் நேரும். மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகளை அவர்கள் வெஜிடேரியன் என்ற பிரிவில் சேர்த்துவிடுவார்கள். ஆனால் பால் பொருட்களை நான்-வெஜிடேரியன் என்று சொல்வார்கள். எதனால் என்று தெரியவில்லை. இதனால் நிறைய குழப்பங்கள் நடந்தன.

முதன்முறை சென்றபோது வாடிக்கையாளர்களுடனான இரவு உணவில் நான் அருகில் அமர்ந்திருந்த ஜெர்மானியரிடம் “நான் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. ஆகவே அசைவ உணவு பரிமாறப்பட்டால் எனக்கு முன்னரே சொல்லிவிடுங்கள்” என்று “உங்கள பார்த்தா ஸ்ரீரங்கத்துல படுத்திருக்கிற பெருமாளே எழுந்து வந்தமாதிரி இருக்கு” என்னும் ரீதியில் கெஞ்சி கோரிக்கை வைத்திருந்தேன். அவரும் “கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னார். தெம்பாக அமர்ந்திருந்தேன். தேங்காய் சட்டினி போன்ற ஒன்று இருந்தது. அவரிடம் கேட்டுவிட்டு எடுத்து விட்டுக்கொண்டேன். எனக்கு அந்தப் பக்கம் இருந்த என் குழுவில் வேலைபார்த்த தமிழர் “அதை சாப்பிடாதே. அதில் மீனின் ஊண் கலந்திருக்கிறது” என்றார். அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்று (நம்ம ஆள்தான் இது சைவம் என்று சொல்லிவிட்டாரே என்ற மிதப்பில்) உண்ண ஆரம்பித்தேன். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து எதற்கும் இருக்கட்டும் என்று இந்த ஜெர்மானியரிடம் “இதில் மீன் கலந்திருக்கிறதா” என்று கேட்க அவரும் சாதாரணமாக ஆமாம் என்றார். “ஐயோ நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொன்னேனே” என்று சொல்ல “ஆனால் இது மீன்தானே?” என்றார். நான் அவரை பரிதாபமாக பார்க்க “ஓ நீ meat எதையும் உட்கொள்ள மாட்டாயா?” என்றார். நானும் ஆமாம் என்று சொல்லி பரவாயில்லை என்று அதை எடுத்துவைத்துவிட்டு சாப்பாட்டை தொடர்ந்தேன். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பனீர் கட்டிகளை ஆவலாக எடுத்து போட்டுக்கொண்டேன். அக்காலங்களில் அவை எனக்கு கைகொடுக்க வந்த தெய்வமாக தோற்றமளிக்கும். சைவம் அதே சமயம் வயிற்றை அடைக்கும் அளவு கனமான உணவாயிற்றே? அவர் அவசரமாக என்னிடம் “அதை போட்டுக்கொள்ளாதே. அது மாட்டின் இறைச்சியாலானது” என்றார். சோத்துலயும் அடி வாங்கியாச்சு சேத்துலயும் அடிவாங்கியாச்சு என்ற கதையாக மீனைத் தின்றதோடல்லாமல் மாட்டையும் சுவைக்க பார்த்தோமே என்று கவலையாகிவிட்டேன். பின்னர் சுதாரித்துக்கொண்டு “இது மாட்டின் பாலினாலனதுதானே? இல்லை மாட்டிலிருந்து வெட்டியெடுத்தார்களா?” என்று கேட்க அவர் “இல்லை மாட்டின் பாலிலிருந்து எடுக்கப்படுவதுதான். ஆனால் இது அசைவத்தில் சேர்த்திதானே?” என்றார். நானோ “இல்லை. இதை நான் சாப்பிடலாம்” என்று சொல்ல அதன்பிறகு அவர் என்னிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அலுவலகத்திற்கு சென்ற முதல்நாள் மதிய உணவை எங்கள் ஜெர்மனி மேலாளருடன் உட்கொண்டோம். அவர் சாப்பிடும் இறைச்சி என்ன என்றறிய ஆர்வம் கொண்ட இந்திய நண்பர் ஒருவர் “அது என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்க, அந்த மேலாளரோ “இது இறைச்சியின் எந்த பாகம்?” என்று கேட்கிறார் என புரிந்துகொண்டு “இது இறைச்சியை வெட்டியெடுத்தபின் இந்த உறுப்பை சுத்தம் செய்து அதை இன்ன இன்ன மாதிரி சமைத்து இன்ன இன்ன பொருட்கள் சேர்த்து பரிமாறுகிறார்கள்” என்று ஒரு பெரிய விளக்கத்தையளித்தார். கேள்விகேட்ட நண்பரின் முகத்தில் இன்னமும் கேள்வி நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு பின்னர் கேள்வியை சரியாக புரிந்துகொண்டு “இது பன்றியாக இருந்தது” என்று முடித்தார். அவர் அதை ஆங்கிலத்தில் சொன்னபோது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. என்ன ஒன்று? கேட்டுகொண்டிருந்தவர்கள் அத்தனை அருகில் பன்றி மாமிசத்தை பார்த்து நெளிந்தோம்.

இன்னொருமுறை வாடிக்கையாளருடனான விருந்துக்கு சென்றபோது நல்ல பசி. அவர்களோ வெகுநேரம் கழித்து பீட்ரூட் உருளைக்கிழங்கு ஆகியவற்றாலான கட்லெட் போன்ற ஒன்றை கொண்டுவந்து வைத்தனர். அது அந்த உணவு விடுதியின் சிறப்பு உணவு என்றறிந்தோம். பசி மேலிட, சைவம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டோமே என்ற நம்பிக்கையில் பாய்ந்து அவற்றை எடுத்து உண்டுவிட்டேன். எனக்கு சற்று தள்ளியிருந்த எங்கள் குழுவை சேர்ந்தவர் அது எதனால் ஆகியிருக்கிறது என்று தோண்டி தோண்டி கேட்க அவர்கள் சொன்னது “அது ஆக்டோபஸிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை திரவத்தால் ஆனது”. அதாவது ஆக்டோபஸின் மாமிஸம் எதுவும் அதில் இல்லை. அந்த திரவத்தை எடுத்தபின்னும் அது உயிரோடுதான் இருக்கும். என்றாலும் மற்றவர்கள் உடனே வேண்டாம் வேண்டாம் என்று அலற  “ ஏன்? மாட்டின் பாலினால் ஆனது போன்றதுதானே இதுவும்?” என்று அந்த உணவை தயாரித்த அந்த விடுதியின் சமையல் கலைஞர் சொல்லிப்பார்த்தார். அதிலுள்ள தர்க்கம் அவர்கள் மூளைக்கு உறைத்தாலும் அந்த உணவு மனதிற்கு ஏற்புடையதாக இல்லையென்பதால் அனைவரும் வேண்டாம் என்று சொல்லி திருப்பிவிட்டனர். அந்த கலைஞர் சற்று வருத்தமாகிவிட்டார். ஆனால் அந்த உணவின் மூன்று துண்டுகளை முழுக்க சாப்பிட்ட ஒருவனைப் பற்றி பின்னர் அறிந்து சந்தோஷப்பட்டிருக்கக்கூடும்! ஆக்டோபஸின் கோமியத்தை சாப்பிட்டுவிட்டாயே என்று எல்லோரும் என்னை வெகுநாள் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

வாடிக்கையாளரின் அலுவலக்த்தில் உள்ள உணவு அறையில் பஃபே முறையில் உணவு அளிக்கப்படும். சில உணவுகளுக்கு மட்டும் பரிமாற பணியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் ஜெர்மன் மொழியை மட்டுமே அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் ஒவ்வொரு உணவையும் பற்றி விசாரித்து எடுத்துக்கொள்வதற்குள் பசியே சமயத்தில் மந்தித்துவிடும். ஒருமுறை அவ்வாறு ஒரு உணவைப் பற்றி நான் கேட்க, அவரும் விளக்க முற்பட்டார். கிடுகிடுவென்று ஜெர்மன் மொழியில் ஏதோ சொன்னார். நான் சிலைபோல அவரையே பார்த்தேன். கொஞ்சம் நிதானித்து வேறு வார்த்தைகளில் அதை கிடுகிடுவென மறுபடியும் சொன்னார். சிலை அசையவில்லை. உதிரியாக சில வார்த்தைகளைக் கூறி விளக்க முற்பட்டு என்னைப் பார்த்த்விட்டு நிறுத்திக் கொண்டார். சரி இவ்வளவு ஆபத்துக்கிடையில் இவ்வுணவை நான் உண்ணவேண்டாம் என்று நகர முற்பட அந்த பருத்த உயர்ந்த வெள்ளை மனிதர் சட்டென்று கைகள் இரண்டையும் விரித்து நெஞ்சில் படார் படாரென்று அடித்துக்கொண்டு “பாக், பாக், பாக்” என்றார். நான் உட்பட அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டோம். அவரும் சிரித்துவிட்டார். அவருடைய முயற்சியை மனதுக்குள் மெச்சி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த உணவை நோக்கி சென்றேன்.

பாரிஸுக்கு சென்றபோது அங்கிருந்த முனியாண்டி விலாஸ் உணவு விடுதிக்கு பரோட்டா சாப்பிடலாம் என்று ஆசைப்பட்டு சென்றிருந்தோம். பரோட்டாவும் ஒரு சைவ குருமாவையும் கொண்டு வர சொன்னோம். அங்கு இருந்த ஈழ பணியாளன் “அண்ணா, நீங்கள் இதற்கு பதிலாக இதை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு பரோட்டாவும் கோழியும் கிடைக்குமே” என்று சுத்தத் தமிழில் பதிலளித்தான். நாம் கோழியின் ஊணை சிக்கன் என்று சொல்லிதான் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? கோழி என்று தமிழில் இங்கு யாரும் சொல்வதில்லையே? ஆகவே கோழி என்றவுடன் உயிருள்ள கோழியை நினைத்துக்கொண்டுவிட்டோம். அதை வைத்து என்ன செய்வார்கள் என்று சில நொடிகள் யோசித்துவிட்டு அடக்கடவுளே சிக்கனை சொல்கிறான் என்று புரிந்து கொண்டோம். சிரித்துக் கொண்டே வேண்டாம் என்று சொல்லி சைவ குருமாவையே கொண்டுவா என்றோம்.

(தொடரும்)

சந்தித்த இந்தியர்கள் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 7

முன்னொரு பதிவில் அங்கு சந்தித்த வேறுநாட்டு மக்களைப் பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அங்கே சந்தித்த இந்தியர்களையும் அவர்களுடனான அனுபவங்களையும் இங்கே சுருக்கமாக எழுதுகிறேன். ம்யூனிக்கில் பொதுவாக இந்தியர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் தமிழர்கள் மிகவும் குறைவு. எப்போதாவதுதான் கண்ணில் தென்படுவார்கள். பொதுவாகவே நம் ஆட்கள் யாரும் எளிதாக மற்ற இந்தியர்களைப் பார்த்து பேசுவதில்லை. பார்ப்பதையே தவிர்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னிடம் பேசிய ஒரு ஜெர்மன் பெண்மணியும் இதை கவனித்து என்னிடம் “நாங்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டில் ஒரு ஜெர்மானியரை கண்டால் கட்டிப்பிடித்துக்கொள்ளாத குறையாக மகிழ்ந்து பேசிவிட்டு வருவோம். ஆனால் நீங்கள் இந்தியர்கள் அவ்வாறு செய்து நான் பார்த்ததில்லையே, ஏன்?” என்றூ கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. “ஆம் அவ்வாறுதான் இருக்கிறோம். விசேஷ காரணங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் அப்படித்தான் இருக்கிறோம்” என்று சமாளித்தேன். நம் ஆட்களின் இந்த குணத்தால் நடந்த சில நகைச்சுவைகளின் தொகுப்பே இந்தப் பதிவு.

முதன்முறை ஜெர்மனி சென்றபோது நானும், (என் தமையன் :)) சுனிலும் ஒருமுறை சுரங்கப்பாதை மின்தொடர்வண்டியில் வந்துகொண்டிருந்தோம். ஏறியவுடனேயே எங்களுக்கு எதிரில் ஒரு இந்தியன் நின்றுகொண்டிருப்பதை கவனித்தேன். அந்த சமயத்தில் இம்மாதிரி “பார்ப்பதைக் கூட விலக்கிவிட்டு செல்லும்” அனுபவங்களை ஓரளவு நான் பெற்றிருந்ததால், அலட்டிக்கொள்ளாமல் என்னுடைய கைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தேன். ஆனால் சுனில் அப்படியல்ல. யாரையும் விடமாட்டான். ஆகவே பேச ஆரம்பித்தான். ஆங்கிலத்தில் இருவரும் உரையாடிக்கொண்டே வந்தனர். அந்த பையன் ஏதோ படிப்பு விஷயமாக வந்தான் என்று சொன்னதாக நினைவு. சுனில் அவனிடம் பேசுவது எனக்கு எரிச்சலை அளித்துக்கொண்டிருந்தது. நாங்களிருவரும் இறங்கும் இடம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகவே இதை சாக்கிட்டு அவர்கள் பேச்சை கலைக்க முற்பட்டேன். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். அவர்கள் இன்னமும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு வந்தனர். சுனில் பொதுவாக மூன்றாவது வாக்கியத்தில் ஹிந்துக்கு போக முயற்சிப்பான். ஆனால் இன்னமும் இருவரும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. சரியாக அந்த நேரத்தில் சுனில் ஹிந்தியில் ஏதோ பேச ஆரம்பிக்க, அந்த பையன் சங்கடமாக “எனக்கு ஹிந்தி தெரியாது” என்று ஆங்கிலத்தில் சொன்னான். நானும் சுனிலும் சட்டென்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். நான் உடனே “இந்தியாவில் எங்கிருந்து வருகிறாய்” என்று ஆவலாக கேட்க “தமிழ்நாடு” என்கிறான்! நான் உடனே தமிழுக்குத் தாவி “அடப்பாவி, இவ்வலவு நேரம் தெரியாமல் போயிற்றே” என்று வருத்தப்பட்டேன். அவனும் “அடடா, நீங்களும் தமிழா? என்ன கொடுமை இது? இது தெரியாமல் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டேன்” என்றான். சரி கைபேசி எண்ணாவது வாங்கிக்கொள்ளலாம் என்றால் நாங்கள் இறங்குமிடம் வந்துவிட்டது. சிறிது வேதனையுடன் கையசைத்துவிட்டு பிரிந்தோம். வழக்கம்போல சுனிலிடமிருந்து எனக்கு திட்டு விழுந்தது. “ஏன் அவன் ஹிந்திக்காரனாகவே இருந்தால்தான் என்ன? அவனிடம் பேசுவதற்கு ஏன் உனக்கு இவ்வளவு வலிக்கிறது?” என்று திட்ட ஆரம்பித்துவிட்டான். “சரி சரி விடு” என்று சொல்லி பிரிந்தோம்.

அதன் பின்னர் மைய ரயில் நிலையத்திற்கு அடிக்கடி செல்லும் தேவை எங்களுக்கு இருந்தது. அப்போதெல்லாம் ஒரு தமிழ் குடும்பத்தை நாங்கள் பார்ப்போம். அதிலும் அந்த பையனின் அம்மா புடவை பொட்டு என்றுதான் வருவார். ஆனாலும் அவர்கள் யாரும் எங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றுவிடுவார்கள். ஆரம்பத்தில் நானும் அவ்வாறே கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக்கொண்டேன். அதாவது யாரேனும் இந்தியர்களை பார்க்க நேர்ந்தால், அவர்களின் கண்ணையே பார்த்துக்கொண்டிருப்பேன். அவர்களும் என்னை பார்த்தால் சிரிப்பது. இல்லையென்றால் அமைதியாக சென்றுவிடுவது, தானாக போய் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். சுனிலிடம் திட்டு வாங்குவதிலிருந்தும் தப்பிக்கவேண்டுமே? (பாத்தியா? நான் பாத்துக்கிட்டுதான் இருந்தேன், அவங்கதான் கண்டுக்கல… ஆமா நீ இப்படியே பேசிக்கிட்டு இரு) ஹிந்தி தெரிந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால் அவர்கள் தமிழர்களுடனோ அல்லது தமிழர்கள் தங்களுக்குள்ளேயோ பேசிக்கொள்வதில் ஏதோ பிரச்சனை இருந்துவந்தது. ஒருமுறை மின்தொடர்வண்டியில் ஒரு தம்பதியை நானும் என் மனைவியும் பார்த்தோம். மெல்லிய குரலில் தமிழில் பேசிக்கொண்டே வந்தார்கள். எங்களையும் பார்த்தார்கள். புன்னகையும் செய்தார்கள். ஆனால் பேச முன்வரவில்லை. சரிதான் என்று நாங்களும் விட்டுவிட்டோம். என் இன்னொரு நண்பர் பின்னர் சொல்லும்போது அங்கு ஒரு தமிழ் கூட்டம் இருப்பதாகவும் கிரிக்கெட் எல்லாம் விளையாடுவதாகவும் சொன்னார். எங்கள் கண்ணில்தான் அவர்கள் தென்படவில்லை.

ஆஸ்திரியா சென்றபோது இது நடந்தது. அங்கு ஒரு பேருந்து நிறுத்தத்தில் திடீரென ஒரு இந்திய தம்பதியை பார்க்க நேர்ந்தது. வடநாட்டினர். நாங்கள் பார்த்து புன்னகைத்ததும் அவர்களே நெருங்கி வந்தனர். “அப்பாடா அவர்களே வருகிறார்கள். அப்படியென்றால் பேசலாம்” என்று நாங்களும் மகிழ்ந்தோம். அவர்கள் வந்து பேச ஆரம்பித்தார்கள். ஆங்கிலத்தில்தான். எங்களுக்குள் நடந்த உரையாடல் பின்வருமாறு.

ஹலோ
ஹலோ
இங்கு சுற்றுலா பயணியாக வந்தீர்களா?
ஆமாம். நீங்கள்?
நாங்களும்தான். இங்கே என்னென்ன இடங்களைப் பார்த்தீர்கள்? (அதற்குள் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார்)
நாங்கள் அ, ஆ ஆகியவற்றை பார்த்தோம். இ-க்கு சென்றுகொண்டிருக்கிறோம்.
ஓ? நாங்கள் அ பார்த்தோம். ஆ வில் என்ன இருக்கிறது?
இன்ன இன்ன விஷயங்கள் இருக்கிறது.
ஓ அப்படியா? சரி நாங்களும் பார்க்க முயற்சிக்கிறோம். வேறு எங்கும் செல்வதாக இல்லையா?
இல்லை. குழந்தை இருப்பதால் ரொம்பவும் அலையமுடியவில்லை.
சரி சரி. சரி நாங்கள் வருகிறோம். பார்க்கலாம்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். இவ்வளவுதான் பேசினார்கள். பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று எந்த விசாரிப்பும் இல்லை. நாங்கள் ஒரு வாக்கியம் பேசி முடிப்பதற்குள் அடுத்த கேள்வியுடன் வந்து கொண்டிருந்தார்கள். வெறுத்துப்போய்விட்டோம். இனிமேல் தேவையில்லாமல் இந்தியர்களுடன் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டோம்.

பின்னர் ஒரு முறை ஒரு பேரங்காடியில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் தானாக வந்து “நீங்கள் தமிழா?” என்று தமிழிலேயே கேட்டு பேச ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நாங்கள் சிறிது தயங்கினாலும் கொஞ்ச நேரத்தில் சகஜமாக பேச ஆரம்பித்தோம். “எங்கங்க? நம்ம ஆளுங்கதான் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டா பேசவே மாட்டாங்க” என்று அலுத்துக்கொண்டார். அட நம்ம அனுபவம் இவருக்கும் இருக்கே என்று நெருக்கமானோம். நிறைய விஷயங்கள் சொன்னார். பின்னர் நாங்கள் சுவிட்சர்லாந்து பயணம் செய்ததற்கு இவரின் யோசனைகளும் ஒரு காரணம். கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு பிரிந்தோம். பின்னர் இருமுறை நாங்களே அழைத்துப் பேசினோம். மூன்றாவது முறையிலிருந்து அழைத்தால் அவர்கள் அழைப்பை கண்டுகொள்ளவேயில்லை. சரிதான் இன்னுமொரு ஆள் என்று விட்டுவிட்டோம். இப்படி கத்தரித்துக்கொண்டு போவதற்கு எதற்கு அன்றைக்கு அவ்வளவு அங்கலாய்த்துக்கொண்டார் என்று தெரியவில்லை.

ஜெர்மன் மொழி வகுப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் இரண்டு இந்திய மாணவர்கள் வகுப்பிற்கு வந்தார்கள். ஆசிரியருக்கோ ஆச்சரியம். ஏனென்றால் வகுப்பு ஆரம்பித்து சில நாட்கள் ஆகியிருந்தன. இந்த நேரத்தில் புதிய ஆட்களை சேர்த்துக்கொள்வது இயலாத ஒன்று. ஆனால் நிர்வாகம் அவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு  கூறி அவர்களை அவ்வாசிரியரிடம் அனுப்பியிருந்தது. அவர் பொறுமையாக அம்மாணவர்களிடம் “இதோ பாருங்கள். இதுதான் சிக்கல். உங்களை என்னால் இந்த வகுப்பில் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் சென்று நிர்வாகத்திடம் பேசுகிறேன். வேறு ஏற்பாடுகளை உங்களுக்கு செய்து தருகிறோம்” என்று சொல்லிவிட்டார். எங்களுக்கோ சிறிது ஏமாற்றம். ஏனென்றால் அதில் ஒருவன் பார்ப்பதற்கு தமிழன் போலவே இருந்தான். அந்தப் பையன் விடாமல் “அவ்வளவு விரைவாக என்ன நடத்தியிருக்கிறீர்கள்? இந்த எழுத்துக்களை எங்களுக்கு சொல்லித்தரமுடியுமா? இதை எப்படி உச்சரிப்பது?” என்று எங்கள் வகுப்பு நேரத்தை கெடுத்து அவரிடம் கேள்விமேல் கேள்வியாக கேட்டுக்கொண்டேயிருந்தனர். எங்களுக்கு மிகவும் சங்கடமாக ஆகிவிட்டது. கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லாமல் நடந்துகொண்டனர். மேலும் அதில் ஒருவன் என்னிடம் வந்து “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு என்னென்ன சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்?” என்று ஆரம்பித்தான். நான் உடனே பேச்சை கத்தரித்து அவனை அவ்வாசிரியரிடமே பேசிக்கொள்ளுமாறு அனுப்பிவிட்டேன். ஏறத்தாழ ஐந்து நிமிடங்களுக்கு மேல் இந்த கூத்து நடந்தது. பின்னர் ஒருவழியாக அவர்கள் வெளியேறினார்கள். அந்த ஆசிரியர் அதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு பாடத்தை தொடர்ந்தார். பாவம்.

பாரீஸ் சென்றபோது அங்கே ஈழத்தமிழர்கள் வேலைபார்க்கும் உணவு விடுதிக்கு சென்றிருந்தோம். அவர்கள் நிச்சயம் எங்களுடன் நன்றாகப் பேசுவார்கள் என்று நினைத்திருந்தோம். பணிச்சுமையால் என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்த அளவு எங்களிடம் அவர்கள் பேசவில்லை. ஆனால் எடுத்தவுடன் தமிழில் பேசியதும் அண்ணா என்று அழைத்ததும் மனதுக்கு நிறைவாக இருந்தது. இல்லையென்று சொல்லாமல் ஒரேயொரு நல்ல அனுபவம் ஜெர்மனியில் கிடைத்தது. ஒருமுறை ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது ஒரு மலையாளி தன் குடும்பத்துடன் அங்கே வந்தார். தானாகவே அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றாக பேச ஆரம்பித்தார். நிறைய ஆலோசனைகள் சொன்னார். எங்களைப் பற்றியும் நிறைய விசாரித்தார். ஒரேயொரு வருத்தம். அவரது மனைவிக்கு ஆங்கிலம் நன்கு பேசவரும் என்பது அவர் சொன்னதிலிருந்து தெரியவந்தது. ஆனால் அவரோ ஒரு வார்த்தைகூட எங்களிடம் பேசாமல் விலகியே நின்றார். எல்லாத்துலயும் ஒரு இம்சை 🙂

(தொடரும்)

கலாச்சார அதிர்ச்சிகள் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 6

ஜெர்மன் கலாச்சாரத்தில் நமக்கு சங்கடம் தரும் ஒன்று ஓரினச்சேர்க்கை உறவுகள். உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஓரினச்சேர்க்கையாளர்கள் மென்மையான வண்ணங்களாலான சட்டைகளை அணிந்துவருவார்கள். ரோஸ், வெளிர் பச்சை போன்ற வண்ணங்கள். வெளிர் நீலம் சேர்த்தி கிடையாது. ஆகவே “அம்மாதிரி சட்டைகளை அணியவேண்டாம். தேவையற்ற அழைப்புகளுக்கு இடம் கொடுத்தாற்போல் ஆகிவிடும்! ஒரு வீட்டில் நீ ஒரு பெண்ணுடன் கூட தங்கிவிடலாம், ஆனால் ஒரு வீட்டை இரு ஆண்கள் பங்கிட்டுக்கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கு வேறுமாதிரிதான் அர்த்தப்படும்” என்றெல்லாம் இங்கிருந்து கிளம்பும்முன் அறிவுரைகள் கொடுக்கப்பட்டன.
நான் அங்கு சென்றபோது எனக்கு மிகவும் இம்சையாக இருந்தது பொது இடங்களில் ஜோடிகள் முத்தம் கொடுத்துக்கொள்வதுதான். அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் பிரச்சனையில்லை. ஆனால் எனக்கு தேவைப்படும் இடங்களில் இது நடக்கும், அதுதான் எரிச்சல் 🙂 உதாரணமாக ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து கால அட்டவணையை பார்க்க சென்றேன். அதற்கு முன்னால் நின்றுகொண்டு ஒரு ஜோடி ஆழ்ந்த முத்தத்தில் ஈடுபட்டிருந்தது. எனக்கோ பார்த்தேயாகவேண்டும் – அட்டவணையைத்தான். அவர்களோ நகர்வதாக இல்லை. பின்னர் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவர்கள் அருகில் சென்று சற்று குனிந்து நான் பாட்டுக்கு அட்டவணையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். என் நண்பர்கள் சிரித்துக்கொண்டேயிருந்தனர். அடப்போங்கடா எனக்குத் தெரியும் என் கஷ்டம் என்று வந்துவிட்டேன். அந்த ஜோடி இன்னமும் முத்தத்திலேயேதான் ஆழ்ந்திருந்தது.
இன்னொரு முறை ட்ரெயினில் வரும்போது பக்கத்தில் இருவர் நின்றுகொண்டு பேசிக்கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென்று ஆவேசமாகி அடுத்தவனை அணைத்து கன்னத்தில் கன்னம் வைத்து தேய்த்து அவன் உடலைத் தடவ ஆரம்பித்துவிட்டான். நாம் திரும்பிக்கொள்ளலாம், குழந்தையை என்ன செய்வது? அதோ பார் வெளியே ஜெர்மன் காக்கா போகிறது என்று காட்டவும் வாய்ப்பில்லாத சுரங்கப்பாதை ட்ரெயின் வேறு. கஷ்டப்பட்டு சமாளித்தோம். போன புதிதில் எல்லா பெண்களும் இடுப்பில் ஜீன்ஸ் துணியாலான ட்ரவுசர் போன்று போட்டுக்கொண்டு அங்கிருந்து கால் வரை கறுப்புத் துணியாலான லெக்கின்ஸ் போன்ற உடையை அணிந்திருப்பார்கள். நானெல்லாம் “பார், இவர்களே எப்படி கண்ணியமாக உடையணிந்து வருகிறார்கள். நம்மூரில் ஏன் இப்படி பொதுவிலும் திரைப்படங்களிலும் திரிகிறார்கள்?” என்று எண்ணி நொந்துகொண்டதுண்டு. நான் முதன்முறை போனபோது பனிக்காலம் அல்லவா? மார்ச் முடிந்து ஏப்ரலில் கோடை ஆரம்பித்தபோதுதான் அந்த லெக்கின்ஸ் ஆடை என்பது குளிருக்காக பனிக்காலத்தில் மட்டும் அவர்கள் போடுவது என்பது தெரிந்தது! அடப்பாவிகளா என்று சுற்றிக்கொண்டிருந்தேன். ஆனாலும் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். நம்மூரைப் போலில்லாமல் ஆண்களும் சரி பெண்களும் சரி, பெரும்பாலும் உடலை ஆரோக்கியமாக கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அதனாலோ என்னவோ இவ்வாறு அரைகுறை ஆடைகள் அணிந்தாலும் அழகாகத்தான் தோன்றுகிறதேயன்றி ஆபாசம் தெரிவதில்லை. அவ்வாறு தெரியும் சந்தர்ப்பங்களும் உண்டு என்பது வேறு விஷயம்.

நான் அங்கிருக்கும்போது ஒரு சிறுகாலத்திற்கு ஜெர்மன் மொழியை வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொண்டு வந்தேன். அங்கு ஒருமுறை “நிர்வாணம்” என்பதற்கான ஜெர்மன் வார்த்தையை எங்களுடைய ஆசிரியை எங்களுக்கு விளக்க முனைந்தார். எதையுமே ஆங்கிலத்திலோ வேறுமொழிகளிலோ சொல்லாமல், சைகைகளின் மூலமாக சொல்லிக்கொடுப்பதே அவர் பின்பற்றும் வழி. அதன் மூலமாகத்தான் மொழியை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடியும் என்பார். ஆகவே சைகை மூலம் ஆடையை அவிழ்த்துவிட்டு சூரியக்குளியல் எடுப்பதுபோல் விளக்கி வார்த்தையையும் சொன்னார். சிறு குழப்பத்திற்குப் பிறகு புரிந்துகொண்டோம். பிறகு எங்களிடம் ”நீங்கள் யாரேனும் அவ்வாறு செய்வதுண்டா?” என்று கேட்டார். கொஞ்சம் வெட்கமாகிவிட்டது. எல்லாருமே இல்லையென்றுதான் சொன்னோம். எங்கள் வகுப்பில் ஒரேயொரு பெண் மட்டும்தான். அவள் அன்று சிறிது தாமதமாக வந்தாள். நல்லவேளை இவர் கேட்கும்போது அவள் இல்லை என்று பார்த்தால், அந்த ஆசிரியை அவளிடமும் அந்த கேள்வியை கேட்டார். ரொம்ப வெட்கமாகி விட்டது, எனக்குத்தான். அவளோ சிறிய தர்மசங்கடத்துடன் “இல்லை” என்றார். சரி ஒருவழியாக அடுத்த வார்த்தைக்கு செல்லலாம் என்று பார்த்தால், மாணவர்களின் ஒருவன் அந்த ஆசிரியையிடம் “நீங்கள் அவ்வாறு செய்வதுண்டா?” என்று கேட்டுவிட்டான்! அடேய் குருநிந்தை செய்தவனே என்றெல்லாம் எனக்குள் எண்ணம் ஓட, அந்த ஆசிரியையும் அலட்டிக்கொள்ளாமல் “இல்லை” என்று சொல்லி மேற்கொண்டு பாடம் நடத்த ஆரம்பித்தார். இவ்வளவு வெளிப்படையாக இவ்வளவு சாதாரணமாக நம்மாலெல்லாம் பேசிக்கொள்ளமுடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஆசிரியை என்றால் அப்படித்தானே இருக்கவேண்டும்?
இது தொடர்பாக எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நடந்த இரு நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன. கல்லூரியில் இளம் அறிவியல் படித்துக்கொண்டிருந்தபோது தமிழ்ப்பாடத்தில் கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இணையத்திலும் இருக்கிறது.
பாஞ்சாலிக்குக் கேள்வி
————————————–
பாஞ்சாலியா?
வா மகளே வா!
துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்கும்போது
நீ மாதவிலக்கானதனால்
ஓராடைகட்டி உள்ளிருந்தாயாமே?
நான் வாழும் நாட்டில்
நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்
மாதமெல்லாம் அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?…
————-கவிப்பேரரசு வைரமுத்து—————–
எங்கள் தமிழ்ப் பேராசிரியை மிகவும் கண்டிப்பானவர், தொழில் பக்தி மிக்கவர், நல்லவரும் கூட. ஆனால் அவர் எப்படி அதுவும் இருபாலர் வகுப்பில் இந்தக் கவிதையை விளக்குவார் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த கவிதையை வகுப்பெடுக்க வேண்டிய அன்று “இந்தக் கவிதைக்குப் போவதற்கு முன்னால் சில வார்த்தைகள். நான் உங்களையெல்லாம் என் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதேபோல்தான் நீங்களும் எண்ணுவீர்கள்தானே? என்னதான் சகோதரனாக இருந்தாலும் அவர்களிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாத விஷயங்கள் உண்டு. அதில் இந்த கவிதையும் உண்டு. நான் இதை உங்களுக்கு கற்பிக்கமுடியாததற்கு வருந்துகிறேன். ஆனால் எந்நிலையிலும் இதை என்னால் உங்களுக்கு வகுப்பில் விளக்கமுடியாது. புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் ஏன் இப்படி கல்லூரிகளில் பாடமாக வைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நீங்களே படித்து புரிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்” என்று அந்தக் கவிதையைவிட ஒரு பெரிய உரை நிகழ்த்திவிட்டு அடுத்த பாடத்திற்கு சென்றுவிட்டார்.
அதேபோல் இன்னொரு சம்பவம். பத்தாவது வகுப்பில் La Belle Dame sans Merci என்று ஒரு பாட்டு வரும் (ஜான் கீட்ஸ் எழுதியதாம். இணையத்தில் சரிபார்த்துக்கொண்டேன்). அதில் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் முத்தங்கள் கொடுப்பதாக வரும். வகுப்பில் சும்மா உட்கார்ந்திருக்கும் வேளையில் முன்னதாகவே நானும் மற்ற சில படிக்கும்(!?) பசங்களும் அதைப் படித்துவிட்டு நண்பர்களிடம் சொல்ல, வகுப்பில் உள்ள ஒவ்வொருவரும் அப்பாட்டை எப்படி ஆசிரியர் எங்களுக்கு நடத்துவார் என்று கிளர்ச்சியுடன் காத்திருந்தோம். தூய மரியன்னை ஆண்கள் உயர்நிலைப்பள்ளிதான், ஆண் ஆசிரியர்தான், இருந்தாலும் கிளர்ச்சி கிளர்ச்சிதான். என்னை உள்ளிட்ட சிலருக்கு கூடுதல் கிளர்ச்சி, ஏனென்றால் நாங்களெல்லாம் ஆங்கிலத்திற்கு கூடுதலாக ட்யூஷனுக்கும் போய்க்கொண்டிருந்தோம். அங்கேதான் பெண்களும் வருவார்களே? 😉 (டேய்… உங்க ட்யூஷன்ல அத நடத்தியாச்சாடா?)
நமது ட்யூஷன் ஆசிரியர்களுக்கேயான “வகுப்பில் நடத்தும் பாடங்களை ட்யூஷனில் முந்தி சொல்லித்தந்துவிட வேண்டும்” என்ற அழுத்தம் காரணமாக பள்ளியில் அப்பாடலை சொல்லித்தருவதற்கு முன்னரே ட்யூஷனில் அப்பாட்டு வந்துவிட்டது. ட்யூஷன் ஆசிரியரும் கண்டிப்பான, தொழில் பக்தி மிக்க, நல்ல ஆசிரியர். தொழிலின் மீதான அவரது ஈடுபாட்டுக்கு இது ஒரு சவால் என்று எங்களுக்கு எக்காளம் வேறு. வகுப்பு ஆரம்பித்தது. ஆசிரியர் பொறுமையாக “இந்தப் பாட்டை மட்டும் என்னால் நடத்த முடியாது, நீங்களே படித்துக்கொள்ளுங்கள். மற்றதைப் பார்க்கலாம்” என்று சுருக்கமாக சொல்லிவிட்டு அடுத்த பாடத்திற்கு போய்விட்டார். எங்களுக்கு சப்பென்று ஆனது (சார் அந்த தலைப்புக்கு மட்டும் என்ன அர்த்தம்ன்னு சொல்லுங்க சார்?… கருணையில்லாத பெண் என்று அர்த்தம் … டேய் அப்படின்னா La Belle Dame sans cloth கிக்கிக்கிக்கிக்கீ… டேய் இங்க கவனிங்க எல்லாம்…டேய் எனக்கும் சொல்லுடா?… இல்லடா, அதுவந்து… டேய் கணேஷ் உன்னைத்தான்.., சரி சார்)
பின்னர் பள்ளி ஆசிரியரின் முறை வந்தது. வகுப்பெடுக்கவேண்டிய அன்று வந்து நின்றார். கைகள் இரண்டையும் வயிற்றின் அருகில் சேர்த்து வைத்துக்கொண்டு இருகைகளாலும் சாக்பீஸ் துண்டை உருட்டிக்கொண்டே நடத்துவது அவரது வழக்கம். அன்றும் அப்படியே நடத்தினார் என்றே என் நினைவில் உள்ளது. மிக சாதாரணமாக அதே சமயம் எந்தவித வேறுபாடுமின்றி அந்த முத்தமிடும் இடத்தை நடத்தி கடந்து சென்றார். நான் இறுக்கமிழந்து இலகுவானேன். அவரைப் பற்றிய மதிப்பு மிகவும் உயர்ந்துவிட்டது. ஏற்கனவே அவரிடம் மிகுந்த பிரியத்துடன் இருப்பேன்தான். ஆனால் அது ஒரு கிறிஸ்தவப் பள்ளியென்பதும், எங்களுக்கு வகுப்பெடுத்த அந்த ஆசிரியர், அப்பள்ளியின் தலைமையாசிரியரான ஃபாதர் என்பதும்தான் கூடுதல் பிரியத்திற்குக் காரணம்!

ஹிட்லரின் வதைமுகாம் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 5

நேர்மையாகச் சொல்வதென்றால், ஜெர்மனிக்கு செல்லும்வரை ஹிட்லர் பற்றி ஒரு உயர்வான மதிப்பீட்டையே நான் கொண்டிருந்தேன். அவர் யூதர்களை அழித்ததெல்லாம் தெரியும் என்றாலும், தன் நாட்டுக்காக அவர் செய்த நல்லவற்றை வைத்துக்கொண்டும், முதல் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனியை மற்ற நாடுகள் இம்சித்ததால் கடவுளாக பார்த்து ஜெர்மனிக்கு அனுப்பிய ஆள் ஹிட்லர் என்றும் நானாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு சராசரி இந்தியனுக்கு அல்லது தமிழனுக்கு இப்படி ஒரு நினைப்பு இருப்பது சகஜம்தான் இல்லையா?
முதன்முறை ஜெர்மனி சென்றபோது குடும்பமாக இல்லாமல் தனியாக சென்றதால், வார இறுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் எங்காவது செல்வது உண்டு. அவ்வாறு இவர்கள் செல்லும் இடங்களெல்லாம் ஒன்று ம்யூசியம் அல்லது ஏதேனும் அரண்மனை. நான் அங்கெல்லாம் செல்வதை தவிர்த்துவிடுவேன். ஒரு வார இறுதியில் “டக்காவ் என்று ஒரு இடம் இருக்கிறது. ஹிட்லர் அமைத்த வதை முகாம் அங்கே இருக்கிறது. அங்கு செல்வோமா” என்று கேட்டனர். ஆஹா உருப்படியான யோசனை என்று நானும் சேர்ந்துகொண்டேன்.
டக்காவ் (Dachau – தமிழில் டச்சாவூ என்று எழுதுவோரும் உண்டு. நான் இங்கு ஜெர்மனில் எப்படி சொல்வார்களோ அப்படியே எழுதியிருக்கிறேன்) என்பது ஹிட்லர் அல்லது அவரது அரசு அமைத்த வதை முகாம்களில் ஒன்று. ஹிட்லருக்கும் ம்யூனிக்கிற்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதால் (அவர் நாஸி கட்சியை ஆரம்பித்ததே இந்த ஊரில்தானாம்) அதுதான் முக்கியமான வதைமுகாம் என்று நினைத்திருந்தேன். பின்னர் அப்படியல்ல என்று தெரியவந்தது. இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான். இரண்டாம் உலகப்போரின் போதும் அதற்கு முன்னரும் ஹிட்லரின் கட்சிக்கு வேண்டாதவர்கள் என்று அவர்கள் எண்ணுவோரை அங்கு வந்து அடைத்துவிடுவர். உயிர்பிழைத்து, பைத்தியமாகாமல் வெளியே யாரேனும் வந்தார்களா என்று தெரியவில்லை. உலகப்போர் முடிந்த பின்னரே அமெரிக்கப் படைகள் அங்கு வந்து அவர்களை விடுவித்தனர் என்று போட்டிருந்தனர். சிறைக்கூடமாகவும் வதைக்கூடமாகவும் இருந்த அந்த பெரிய கட்டிடத்தை இன்று ஒரு பெரிய மியூசியமாக மாற்றியிருந்தனர். ஒருவேளை என் நண்பர்கள் இங்கு வர முடிவு செய்தது இதனால்தான் போல.
உள்ளே செல்லும்போது அங்கு நடந்த நிகழ்ச்சிகளையும், அங்குள்ள பகுதிகளை, பொருட்களைப் பற்றிய தகவல்களையும் ஆங்கிலத்தில் சொல்வதற்கு வாக்கி டாக்கி போன்ற ஒரு கருவியை வாடகைக்கு கொடுத்தனர். இது தவிர கைடையும் அமர்த்திக்கொள்ளலாம். இதெல்லாம் தாண்டி ஒவ்வொரு இடத்திலும் இத்தகவல்களை ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் எழுதியிருந்தனர். நாங்கள் அந்த கருவியை எடுத்துக்கொண்டோம். ஆனால் சீக்கிரத்தில் சலித்துவிட்டது. அங்கு எழுதியிருந்தவற்றை படிப்பதே எளிதாக இருந்தது. வெளியிலிருந்து உள்ளே செல்லும்போது ஒரு கைவிடப்பட்ட ரயில் தண்டவாளத்தை பார்த்தோம். பின்னர் கனமான இரும்புக்கதவுகள் வழியாக உள்ளே சென்றோம். பிரதானமான அலுவலக கட்டிடமாக இருந்த இடத்தில் அருங்காட்சியகத்தை அமைத்திருந்தார்கள். ஹிட்லரின் வாழ்க்கை, நாஸி கட்சியின் தோற்றம், அவர்கள் அடித்த கூத்து என்று விரிவாக படங்களுடன் விளக்கியிருந்தார்கள். பின்னர்தான் சங்கடங்கள் ஆரம்பித்தன. அங்கு கைதாகி வந்த அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோரைப் பற்றி எழுதியிருந்தார்கள். பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இளைஞர்கள், நடுத்தரவயதினர். அவர்களின் கருத்துக்களும் செயல்பாடுகளும் ஹிட்லருக்கும் அவர் கட்சியினருக்கும் பிடிக்கவில்லையாதலால் அவர்களைக் கொண்டுவந்து இங்கு அடைத்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் சித்தம் கலங்கி “தற்கொலை” செய்துகொண்டதாக அவர்களது வரலாறு முடிகிறது! ஒன்று இரண்டல்ல இவ்வாறு பலபேர்.
கடுமையான தண்டனைகள். ஒருவர் நிற்கும் நிலையில் இடுப்புவரை முன்புறம் சாய்த்து ஒரு பலகையில் கட்டிவைத்து புட்டத்தில் பிரம்பைக் கொண்டு அடிப்பது ஒரு தண்டனை. அந்த பலகையையும் பிரம்பையும் அங்கே பார்த்தேன்! இது என்றல்ல. அங்கு பயன்படுத்தப்பட்ட ஏறத்தாழ அனைத்து பொருட்களின் மாதிரியை அங்கு வைத்திருந்தனர். கைதிகள் போடும் உடைகள். அந்தக் குளிருக்கு மெல்லிய பருத்தியாலானது போன்ற உடை. இதில் காலை அங்குள்ள பெரிய மைதானத்தில் அனைவரையும் அந்த உடையுடன் நிற்கவைத்து அட்டெண்டென்ஸ் எடுப்பார்களாம். மைனஸ் ஐந்தோ மைனஸ் பத்தோ உடை அதுதான். அட்டெண்டென்ஸ் எடுப்பது எடுப்பதுதான். அந்தக்குளிர் தாங்காமல் இறந்து விழுந்தோரும் உண்டு.
மருந்தை சோதிப்பதற்கு சோதனை எலிகளாக இக்கைதிகளை பயன்படுத்தினர் என்று ஓரிடத்தில் எழுதியிருந்தது (அல்லது நான் அவ்வாறு புரிந்துகொண்டேன்) – புகைப்படங்களுடன். முதல் படத்தில் நல்ல நிலையில் இருக்கும் ஒருவர். இரண்டாவதில் அவர்மேல் புகை பாய்ச்சப்படுகிறது. மூன்றாவது அவர் இறந்ததுபோல் சரிந்து நினைவிழந்து இருக்கிறார். முடிந்தது சோதனை! இப்படிப்பட்ட வதைகள் தவிர பொருளில்லாத வேலைகளை கைதிகளைக் கொண்டு செய்விப்பது. உதாரணமாக ஒரு மரத்தரையை வழுவழுப்பாக தோற்றமளிக்கும் வரை சுத்தம் செய்யவிடுவது. உணவுக்காக கொடுக்கப்பட்ட அலுமினியத்தட்டை பளபளப்பாக ஆகும்வரை தேய்க்கவிடுவது இப்படி. உணவும் சத்துக்குறைந்ததாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்களாம்.
பின்னர் அந்த வதை முகாமைப் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒன்றைக் காட்டினார்கள். அதற்கென்று ஒரு தியேட்டர் போன்ற அமைப்பு. பதிமூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது  என்று இரண்டாம் முறை ஹரிணியுடன் சென்றபோது தெரிந்துகொண்டேன்! உக்கிரமான காட்சிகள். வரிசையில் நிற்கும் கைதிகள். அவர்களது படுக்கையறைகள். அவற்றில் அவர்களால் படுக்கமுடியாது, தன்னை சொருகிக்கொண்டுதான் தூங்கமுடியும். புகைப்படங்களில் கைதிகளின் முகத்தில் தெரிந்த வெறுமை. பசியாலும், உழைப்பாலும் மெலிந்த உடல்கள். இறந்தவர்களின் உடல்களை அப்பகுதியில் ஒரு ஓரத்தில் போட்டிருப்பதை ஓரிடத்தில் காட்டினார்கள். எலும்பின்மேல் தோல்மட்டுமே இருக்கும் உடல்கள் குவியல் குவியலாக! அப்பிணங்களை அள்ளிச்செல்ல ட்ரெயின் ஒன்றை அமைத்திருந்திருக்கிறார்கள். சுமார் இரண்டு லட்சம் பேர் கைதிகளாக இருந்திருக்கிறார்கள். ஆவணங்களின்படி இறந்தவர்கள் மட்டுமே நாற்பதாயிரத்திற்கு மேல்! மனம் கனத்துப்போனது.
பின்னர் தொடர்ந்து அருங்காட்சியகத்தை சுற்றி வந்தோம். வெளியில் அந்த கைதிகளுக்கு அட்டெண்டென்ஸ் எடுக்கும் மைதானத்திற்கு வந்தபோது கொஞ்சம் சகஜமாகி ஏதோ நகைச்சுவை சொல்லி சிரிக்க ஆரம்பித்தோம். அப்போது எங்களில் ஒருவன் சுட்டிக்காட்டியபின்தான் அங்கு வரும் அனைவருமே பெரும்பாலும் அமைதியாக அல்லது மெலிதாக பேசிச் செல்கின்றனர் என்பதை கண்டுகொண்டோம். உள்ளூர எங்களை நாங்களே திட்டிக்கொண்டு அதன்பின் வெளியில் வருவது வரை அமைதியாக இருந்தோம். முன்னர் அந்த மைதானத்தின் அந்தப் பக்கம் ஏறத்தாழ இருபது சிறைக் கொட்டடிகள் இருந்திருக்கின்றன என்பது புகைப்படங்கள் மூலம் தெரிந்தது. அவற்றில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் இடித்துவிட்டனர். அந்த ஒன்றை மட்டும் காட்சிக்காக வைத்திருந்தனர். அக்கைதிகள் படுத்திருந்த படுக்கைகளை நேரில் கண்டபோது அச்சம் ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை. நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை ஒன்றையும் காட்சிக்கு வைத்திருந்தனர். தடுப்புகளோ மறைப்புகளோ ஏதுமின்றி வரிசையாக அமைக்கப்பட்டிருந்த மேற்கத்திய கழிப்பறைகள். அதுதவிர அங்கே ஒரு தேவாலயம் போன்ற கட்டிடம் ஒன்றும் இருந்தது. அங்கு செல்ல மனமே வரவில்லை. அந்த சிறைக்கொட்டடி வாசலிலேயே அமர்ந்து கொண்டிருந்தோம். திரும்ப அந்த இரும்புக்கதவுகளைத் தாண்டி வெளியில் வரும்போது ஒரு சிறிய நிம்மதி. அந்தக் கைவிடப்பட்ட வளைந்து சென்று சற்று தூரத்தில் முடிந்திருந்த தண்டவாளத்தை மறுபடியும் பார்த்துவிட்டு வந்தேன். ஹிட்லரைப் பற்றி புகழ்ந்து பேசும் ஒவ்வொருவரும் அவசியம் சென்று பார்த்து உணர்ந்து வரவேண்டிய ஒரு இடம்.

ஜெர்மனிக்கு செல்வதற்கு முன்னர், என்னுடைய மேலாளர் எங்களிடம் “ஹிட்லரைப் பற்றி நல்லதாகவோ ஏன், கெட்டதாகவோக்கூட எந்த ஒரு வார்த்தையையும் அங்கே பேசிவிடவேண்டாம். ஹிட்லர் என்ற ஒரு பெயர் இருப்பதாகக் கூட காட்டிக்கொள்ளவேண்டாம். இரண்டாம் உலகப்போரைப் பற்றிக்கூட பேசுவதை தவிர்த்துவிடுங்கள்” என்றெல்லாம் சொல்லி அனுப்பினார். அவர் அவ்வாறு சொன்னது எனக்கு ரொம்பவும் மிகையாகப் பட்டது. ஆனால் அங்கு சென்றபின்னர் அது உண்மைதான் என்று தெரிந்தது. எந்த இடத்திலும் அவரது பெயரே இல்லை. இதற்கு முன்னர் சொன்ன அந்த வதைக்கூட அருங்காட்சியகத்தில்தான் அவரது பெயரை முதலில் பார்த்தேன். என்னுடைய நண்பர் “ஜெர்மானியர்களில் ஹிட்லரை விரும்பும் மக்கள் இன்னமும் கூட இருப்பார்கள். நாம் அவர்களிடம் நன்கு ஆழ்ந்து பேசிப் பழகினால் ஒருவேளை அதை அவர்கள் வெளியிடக்கூடும்” என்றார். எதற்கு விஷப்பரிட்சை என்று நான் அதை செய்ய முயலவேயில்லை.

இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு கண்டுபிடிக்கப்பட்டு வெடிக்கப்பட்டதைக் குறித்து முன்பு என் வலைப்பக்கத்தில் எழுதியிருந்தேன். அப்போது கூட வேலை பார்த்த ஒருவர் ஹிட்லரைப் பற்றி “ஹிட்லர் செய்தது தவறுதான், ஆனால் அதற்கு ஜெர்மனி மக்களுக்கு இப்படி ஒரு தண்டனையா?” என்று என்னிடம் நொந்துகொண்டார். இந்த சம்பவத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ஹிட்லரைப் பற்றி கேள்விப்படவில்லை. ஒருமுறை ஒரு பெரிய வணிகவளாகத்தின் கழிப்பறையை உபயோகிக்க நேர்ந்தபோது உள்ளே, ஹிட்லரைத் திட்டி ஒரு கிறுக்கலும், அதற்கு பதிலளிக்கும் விதமாக நாஸிக் கட்சியை ஆதரித்து ஒரு கிறுக்கலும் என்று இருந்ததைப் பார்த்தேன். அடப்பாவிகளா என்னடா ஃபேஸ்புக் மாதிரி இதைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று எண்ணிக்கொண்டேன்.
வாடிக்கையாளர்களுடனான ஒரு விருந்தில் ஜெர்மானியர் ஒருவரிடம் பொதுவாக “எங்களுக்கு தேசப்பிதா என்று சொல்ல காந்தி இருப்பது போல் ஜெர்மனியை கட்டியெழுப்பியவர் என்று யாரையாவது சொல்லமுடியுமா?” என்று கேட்டேன். அவர் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு “அப்படியெல்லாம் யாரையும் சொல்லமுடியாது” என்று முடித்துக்கொண்டார். மழுப்புகிறாரோ என்று தோன்றியது. சமீபத்தில் ஜெர்மனியின் நிறம் என்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்த பதிவைப் படித்ததும் ஹிட்லரைப் போற்றுபவர்கள் இன்னமும் ஜெர்மனியில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று தெரியவந்தது.

(தொடரும்)

ஒரு சாகசப் பயணம் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 4

ஜெர்மனியில் இருந்தபோது நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து குடும்பத்தோடு சிறு சிறு பயணங்கள் செய்திருக்கிறோம். அதில் முக்கியமானது கோனிக்ஸீ என்னும் இடத்திற்கு சென்றது. ராஜாக்கடல் என்று தமிழில் பொருள் வரும் 🙂 ம்யூனிக்கிலிருந்து ஒரு ட்ரெயினில் சென்று ஒரு குறிப்பிட்ட ரயில்நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு பேருந்தில் ஐந்து கிலோமீட்டர் பயணித்து ஒரு மலையருகே சென்று  சேரவேண்டும். மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் ஏரியில் படகு சவாரி. நடுவில் இருக்கும் குட்டித் தீவுகள் போன்ற நிலப்பகுதிகளில் நடை என்று நன்றாகவே இருந்தது. ஒரு நாள் பயணம் என்பதால், அதிக நேரம் அங்கே செலவழிக்கும்பொருட்டு, காலையில் சீக்கிரமே கிளம்பி, திரும்பும்போது கடைசி ட்ரெயினை பிடித்து வருவதாக திட்டம். கடைசி ட்ரெயின் இரவு 8.20க்கு என்று தெரிந்து வைத்திருந்தோம். சொதப்பியது எங்கே என்றால் ஏரியிலிருந்து அந்த ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் கடைசிப் பேருந்து 7.35 அளவில் கிளம்பிவிடும் என்பதை கவனிக்காததே. படகு சவாரி முடிந்து எல்லோருக்கும் நல்ல பசியாக இருந்ததால், பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவிலிருந்த மெக்டோனால்டிற்கு சாப்பிட சென்றோம். நன்றாக மொக்கிவிட்டு, கிளம்பி பேருந்து நிலையம் வரும்போது ஒரு பேருந்தை எதிரில் பார்த்தோம். அதுதான் கடைசிப் பேருந்து என்று அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. பேருந்து நிலையத்தில் கால அட்டவணையை பார்த்தபோதுதான் தவறு நடந்துவிட்டது எங்களுக்கு புரிந்தது. மணி 7.40ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. 8.20க்குள் ஐந்து கிலோமீட்டர் நடந்து ட்ரெயினை பிடிக்கவேண்டும். தள்ளுவண்டியில் என் குழந்தை வேறு.

அருகிலிருந்த ஒரு பெட்ரோல் பங்க்கை ஒட்டிய கடையில் விசாரித்தபோது வாடகைக்கார் போன்ற வேறு எந்த வசதியும் இல்லை, நடக்கத்தான் வேண்டும் என்றனர். அவரிடமே ஒரு கார் இருந்தது. அதில் லிஃப்ட் கேட்கலாமா என்று என் நண்பர் என்னிடம் கேட்டார். லிஃப்ட் கொடுக்கும் எண்ணமே அக்கடைக்காரரின் முகத்தில் தெரியாததால், வழியை மட்டும் கேட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். முழுவதும் இருட்டிய, நெடுஞ்சாலையை ஒட்டிய சிறு சாலை. கைபேசியில் உள்ள டார்ச் மட்டுமே துணை. இரு பெண்களும் ஒரு குழந்தையும். சரி என்று துணிந்து நடக்க ஆரம்பித்தோம். நான் ஜிபிஎஸ்ஸை முடுக்கிவிட்டு எவ்வளவு தூரம் மீதி இருக்கிறது என்பதை கவனித்துக்கொண்டே வந்தேன். 7.50 ஆனபோது ஒன்றரை கிலோமீட்டர் தூரமே கடந்திருந்தோம். சரி இது ஒத்துவராது என்றெண்ணி ஓட ஆரம்பித்தோம். வெகுதூரத்திற்கு அந்த சாதனையை எங்களால் செய்யமுடியவில்லை. அதுவும் என் குழந்தையை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு. நண்பரும் அவர் மனைவியும் ஓடிவிடமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். நானோ “எக்குத்தப்பாக எங்காவது மாட்டிக்கொண்டு, கடுமையாக முயற்சி செய்தால்தான் மரணத்திலிருந்து தப்பிக்க முடியும்” என்ற நிலை வந்தால்கூட “எதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டு? பேசாமல் அமைதியாக இறந்துவிடலாமே” என்று எண்ணுபவன். என்னைப் போய் ஓடு ஓடு என்றால் எங்கே போவது? மனம் அதற்குள் நூற்றியெட்டு கணக்குகளை போட ஆரம்பித்தது.

எங்காவது ஹோட்டலில் தங்கிக்கொள்ளலாம் என்பது முதல் எண்ணம். அதுவோ சிறிய ஊர். ஹோட்டல் என்று எதையும் பார்த்ததாக நினைவிலில்லை. சரி வாடகைக்கார் ரயில் நிலையத்தில் கிடைத்தால் சென்றுவிடலாம் என்றால் அதையும் அங்கு பார்த்த நினைவில்லை. சரி யாராவது போலீஸை பார்த்தால் உதவி கேட்டு வாடகைக்காரை ம்யூனிக்கிலிருந்துகூட வரவழைத்து சென்றுவிடலாம் என்று நம்பிக்கை வந்தது. ஆகவே நண்பரிடம் “நீங்களிருவரும் ஓடுவதை தொடருங்கள். எங்களால் முடியுமென்று தோன்றவில்லை. வெறும் அரை மணி நேரத்தில் என்ன முக்கினாலும் 3.5 கிலோமீட்டர் சாத்தியம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை” என்றேன். அவர்களுக்கோ எங்களை விட்டுவிட்டு – அதுவும் குழந்தையோடு – செல்வதில் விருப்பமில்லை. அதே சமயம் பைசா செலவழிக்கவும் தயாராக இல்லை 😉 “சரி முடிந்தவரை செல்வோம், பார்க்கலாம்” என்று அவர்கள் ஓட்டமும் நடையுமாக செல்ல நாங்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தோம். 8.05ம் ஆகியது. ட்ரெயினைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையெல்லாம் போய்விட்டது. சோர்ந்து நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் சென்றுகொண்டிருந்த பக்கத்திலேயே ஒரு தீயணைப்பு நிலையத்தை பார்த்தோம். என் நண்பர் உடனே “இங்கே நிச்சயம் நமக்கு உதவி செய்வார்கள். நான் போய் கேட்கிறேன்” என்றார். அமெரிக்காவில் இதுமாதிரி அவர்கள் உதவி செய்வது சகஜம் என்று பின்னால் சொன்னார். எனக்கோ “போலீஸ் என்றாலாவது உதவி செய்யும். தீயணைப்புத் துறையினர் எவ்வாறு உதவிசெய்வர்” என்று குழப்பம். ஆனால் அவர் விடாமல் சென்று அவர்களிடம் நிலமையை விளக்கினார். முதலில் வந்தவருக்கு ஜெர்மன் மொழி மட்டுமே தெரியும் போல. இவர் சொன்னது எதுவும் அவருக்கு புரியவில்லை. அவரது மேலாளருக்கு நல்லவேளையாக ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தது. அவர் சரளமாக பேசி எங்களுக்கு உதவுவதாக சொல்லி ஒரு சிறிய காரை அனுப்ப முன்வந்தார். பின்னர் என்னையும், என் வசம் இருந்த தள்ளுவண்டியையும் பார்த்தபின் பின்னால் சென்று ஏதோ சொல்ல, பெரிய வேன் ஒன்று வந்தது!

இவையெல்லாம் நடந்து அனைவரும் அந்த வேனில் ஏறி அமர்ந்த போது மணி 8.12. இன்னும் எட்டு நிமிடங்களுக்குள் ட்ரெயினை பிடிக்கவேண்டும். நடுவிலோ மூன்றரை கிலோமீட்டர்கள். அந்த ஓட்டுநர் பறப்பதுபோல் வண்டியை ஓட்டினார். சைரன் போடவில்லையென்றாலும், அந்த ஊர்திக்கு அனைவருமே வழிவிட்டனர். சாலைகளில் பாய்ந்து சென்று ரயில் நிலையத்தை அடைந்தபோது மணி 8.16 மட்டுமே ஆகியிருந்தது. நிலையத்தின் முதன்மைக் கதவு மூடியிருந்ததால் பக்கவாட்டில் இருந்த சிறு கதவு வழியாக பாய்ந்து சென்று ட்ரெயினில் ஏறி அமர்ந்தோம். நண்பர் அந்த ஓட்டுநருக்கு இருபது யூரோ சன்மானம் கொடுத்து நன்றி சொல்லிவிட்டு வந்து ஏறிய அரை நிமிடத்தில் வண்டி கிளம்பியது. பெருமூச்சுக்களை விட்டு சரியாகிக்கொள்ள சிறிது நேரமானது. வெட்கம் காரணமாக சிறிது நாட்கள் இதை யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பின்னர் இதிலிருந்த அந்த சாகசத்தன்மை காரணமாக சொல்ல ஆரம்பித்தோம். மறக்க முடியாத நிகழ்வு. அந்த தீயணைப்பு நிலையம் எதிர்சாரியில் இருந்திருந்தால்கூட எங்களுக்குத் தெரிந்திருக்காது. நாங்கள் செல்லும் வழியிலேயே இருந்தது, எப்போதும் என் நண்பரிடம் ஒட்டாத என் குழந்தை அன்று சுமார் பத்து நிமிடங்கள் அந்த இருட்டில் அவர் வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு ஓட பேசாமல் அமர்ந்திருந்தது, அந்த ஆங்கிலம் தெரிந்த மேலாளர், வண்டியை சீறி ஓட்டிச்சென்ற ஓட்டுநர் என்று எல்லாம் தற்செயல்களின் சங்கமம்.

சுனில் என்னும் தமையன் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 2

சுனில் எனும் தமையன்

ஜெர்மனி போவதற்கு முன்பு இங்கு இந்த குழுவில் சேர்ந்தபோது எனக்கு சில நாட்கள் கழித்து சுனில் என்ற ஒரு ஒரிஸ்ஸா இளைஞன் வந்து சேர்ந்தான். என்னைவிட மூன்று நான்கு வயது மூத்தவன். கடுமையான ஒரிஸ்ஸா மொழி வாடையடிக்கும் பேச்சு. ஆனால் என்னவோ தெரியவில்லை. வந்தவுடனே எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிவிட்டான். என்னைவிட கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு பெருத்த உடலை உடையவன். ஒருமுறை அவன் தோள்களை பிடித்துவிட முயன்றபோது என் கைகளில் அவன் தோள் அடங்கவே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கிருக்கும்போதே நிறைய பேசுவோம். இதற்கிடையில் நான் முதலில் ம்யூனிக்கிற்கு சென்றேன். சில நாட்கள் கழித்து அவனும் வந்தான். அவனுக்கு அந்த வகையில் நிறைய உதவிகள் செய்தேன் என்று நெகிழ்ந்து போவான். ஆனால் கொஞ்சம் நன்றாகவே உதவிகள் செய்தேன் என்றுதான் சொல்லவேண்டும். சென்னை விமான நிலையத்திற்கு நுழைவதிலிருந்து துபாய் வழியாக ம்யூனிக்கிற்கு வந்து சேருவது வரை செய்யவேண்டியவற்றை விளக்கமாக வரைபடங்கள் வரைந்து அனுப்பியிருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த விடுதியில் அவன் தங்கலாம் என்று யோசனை கூறுதல், வந்தவுடன் அவனுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிவைத்தல் என்று நிறைய வேலைகளைச் செய்திருக்கிறேன். அவன் வாங்கிவந்த கம்பளியினாலான கையுறைகள் அவனுக்கு குளிரைத் தடுக்கவில்லை என்பதால் தோலாலான என்னுடைய கையுறைகளை கொடுத்தேன். அதை சொல்லி சொல்லி கூடுதலாக நெகிழ்வான். கூடுதல் நெகிழ்ச்சிக்கு காரணம் பின்பு அதை அவன் தொலைத்துவிட்டான் 🙂

எனக்கு பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. தமிழர்களும், தெலுங்கர்களும் மட்டுமே அரிசி சாப்பிடுவர், மற்றவரெல்லாம் கோதுமை மட்டுமே எடுத்துக் கொள்வர் என்று எண்ணியிருந்தேன். ஆச்சரியமாக சுனில் வந்தவுடன் அரிசிக்காக ஏங்கிப் போயிருந்தான். “எனக்கு இந்திய உணவு சாப்பிடவேண்டும் போலிருக்கிறது” என்று அவன் சொன்னபோது, “எனக்கு சாதம்தான் செய்யத் தெரியும், சப்பாத்தி செய்யவராதே” என்றேன். அவன் கடுப்பாகி “சாதம்தான் எனக்கு வேண்டும், முடிந்தால் சமைத்துக் கொடு” என்றான். சரியென்று அந்த வார இறுதியில் அவனை வீட்டுக்கழைத்து சாதம், சாம்பார், முட்டைப் பொரியல் என்று ஏதேதோ சமைத்துக் கொடுக்க வழக்கம்போல் நெகிழ்ந்துவிட்டான் 🙂 அதிலிருந்து அவனை முடிந்தவரை நெகிழவைத்து பார்ப்பது எனக்கு ஒரு விளையாட்டாகவே போய்விட்டது. நிறைய மாநிலங்களில் வேலை பார்த்தவன். நிறைய துறைகளிலும் வேலை பார்த்தவன். அந்த அனுபவங்களை சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டேயிருப்பேன். ஒரு கட்டத்தில் பிற நண்பர்கள் என்னையும் அவனையும் மட்டும் கழற்றிவிட்டு வார இறுதிகளில் எங்காவது சென்றுவிடுவர். அவன் சனிக்கிழமையானால் காலை பத்துமணிக்கு என் வீட்டிற்கு வந்துவிடுவான். ஒரு மணிநேரம் அரட்டை. பின்னரும் அரட்டையை தொடர்ந்துகொண்டே இருவரும் சேர்ந்து சமைக்க ஆரம்பிப்போம். சமையலும் அவனுக்கு நன்றாக வரும். பலவருடங்களுக்கு முன்பு ஒரு ரொட்டி ஹோட்டல் வைத்து நடத்தியிருக்கிறான். எனக்கும் சமையல் சொல்லிக்கொடுப்பான்.  குடும்பத் தலைவிகளுக்கு நிகராக வம்புகளை பேசிக்கொண்டே செய்வோம். பின்னர் சமைத்ததை நாங்களே தீரும்வரை சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்போம். இணையம் வழியாக அவன் தன் மனைவியுடன் பேசச் செல்ல, நான் இன்னொரு அறையில் படம் பார்த்துக்கொண்டோ இல்லை தூங்கிக்கொண்டோ இருப்பேன். பின்னர் மாலை காஃபி, வம்பு, பேச்சுக்கள். இப்படியே நிறைய வார இறுதிகள் செல்லும். சமீபத்தில் எங்களிருவருக்கும் பொதுவான ஒருவர் கேட்டார் “நீங்கள் இருவரும் படம் பார்ப்பீர்கள்தானே?” என்று. ஆச்சரியமாக, இல்லை! நானும் அவனும் இருக்கும்போது ஒரு படம் கூட பார்த்ததில்லை. அபூர்வமாகத்தான் சினிமா பற்றியே பேசிக்கொள்வோம். வருங்காலக் கனவுகள் (அவனுக்கு ஐடியை விட்டுவிட்டு கட்டிடம் கட்டும் தொழிலுக்கு செல்ல ஆசை), குடும்ப நிலவரங்கள், இருவருடைய கலாச்சாரம் பற்றி இப்படியேதான் பேச்சுக்கள் செல்லும். மொடாக்குடிகாரனாக இருந்தபோதும், என்னுடன் தனியாக இருக்கும்போது அவன் குடித்ததேயில்லை. ஒருமுறை அவனும் இன்னொரு இளைஞனும் என் வீட்டில் ஓரிரவு தங்கினார்கள். அப்போது ஐடி துறையைப் பற்றி முழுபோதையில் அவன் ஆற்றிய உரை சிரிக்கவும் சிந்திக்கவும் தக்கது.

“ஐடி துறையில் நீ இளைஞனாக உள்ளே வருகிறாய். எல்லா கம்பெனிகளும் உன்னை வேலைக்கு எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும். நீயும் நன்கு வேலை பார்ப்பாய். அவர்களும் உன்னை விதவிதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இதெல்லாம் சிலகாலம்தான். அதன்பின் அவர்களுக்கு நீ அலுத்துவிடுவாய். உன்னைப் பற்றி உன் குறைபாடுகளைப் பற்றி தெரிந்ததால் அவர்கள் பெரிதாக உன்னை மதிக்க மாட்டார்கள். பின்னர் நீ வேறு கம்பெனிக்கு செல்வாய். அங்கு மற்றவர்களை விட நீ புதிது என்பதால் அனைவரும் உன்னிடம் ஆர்வம் காட்டுவார்கள். இப்படியே சிலகாலம் செல்லும். ஒரு கட்டத்திற்குப் பிறகு நீ எவ்வகையிலும் எவருக்கும் பயன்படமாட்டாய் என்பது உனக்கே தெரிந்ததும், உன்னைவிட இளையவர்களை மேய்க்கும் தொழிலுக்கு சென்றுவிடுவாய். இதானே எங்கும் நடக்கிறது?” என்ற ரீதியில் உரையாற்றினான்.

அதுவும் அவனது சொந்தமொழியின் வாடை அடிக்கும் அந்த ஆங்கிலத்தில் சாராய வாடையோடு அதை அந்த இரவில் கேட்டது மிகவும் வினோதமான ஒன்று. ஒருமுறை நானும் அவனும் மற்ற இரு நண்பர்களுடன் ஆஸ்திரியாவுக்கு சென்றோம். ஒரு உயரமான மலையில் 1800 மீட்டருக்கு ரோப் காரில் சென்று, அங்கிருந்து 200 மீட்டர் ஏறிச்செல்லவேண்டும். அந்த உச்சியில் அமருவதற்கென்று இருக்கைகள் இருக்கும். அங்கிருந்து பார்ப்பது பேருவகையாக இருந்தது. நான் என் வாழ்க்கையில் சென்ற ஒரே மலையுச்சி அதுவே. மற்ற இருவரும், பத்து நிமிடங்கள் அமர்ந்தபின் “கிளம்பலாமா?” என்று ஆரம்பித்தனர். நான் சற்று எரிச்சலாகி இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே வந்திருக்கிறோம் நீங்கள் என்னடாவென்றால் உடனே கிளம்பலாம் என்கிறீர்களே? இந்த இயற்கையுடன் ஒரு அரை மணி நேரமாவது இருக்கவேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா என்று சொல்ல சுனிலும் என்னுடன் சேர்ந்துகொண்டான். ஆனால் எப்போதெல்லாம் இம்மாதிரி வெளியில் செல்கிறோமோ அல்லது அங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி பேசுகிறோமோ அப்போதெல்லாம் சுனில் சொல்வது இதுதான் “நீ இந்தியாவை பார்த்ததில்லை. அங்கு கடும் வெப்பமுள்ள இடங்களும், இதைவிட குளிர்ந்த இடங்களும் இருக்கின்றன. இங்கு என்ன இருக்கிறது? எப்போது பார்த்தாலும் இந்த அரண்மனைக்கு செல்லலாம், அந்த மியூசியத்திற்கு செல்லலாம் என்றே சொல்கிறீர்கள்” என்பான். எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தை நான் படிக்க ஆரம்பிக்காத அந்த காலத்தில் இந்தியா மீது மதிப்பு வர அவன் ஓரளவு காரணமாக இருந்தான். அதையொட்டி அவனிடம் அவன் சென்ற இடங்களைப் பற்றி சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டேயிருப்பேன். இந்தியா வந்ததும் நிச்சயம் ஒரிஸ்ஸா பக்கம் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தான் (செய்யவும் செய்தான்). அந்தப் பயணத்தில் மற்ற இருவரும் அங்கேயே ஒரு நண்பனின் வீட்டில் தங்க முடிவெடுக்க நானும் சுனிலும் ஊர் திரும்ப தீர்மானித்தோம். தவறுதலாக நாங்கள் ஏறவேண்டிய ரயிலை விட்டுவிட்டு வேறு ஒரு ரயிலில் ஏறிவிட்டோம். அந்த ரயிலின் டிக்கெட் பரிசோதகர் எங்களை ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அடுத்த நாற்பது நிமிடங்கள் கழித்து அங்கு வந்து நிற்கும் ரயிலில் ஏறிக்கொள்ளச் சொன்னார். அது அவ்வளவாக ரயில்கள் வராத ஒரு நிலையம். காட்டுக்குள்ளிலிருந்து ரயில்பாதை வந்து ரயில் நிலையம் வழியாக சென்று காட்டுப்பாதைக்குள்ளேயெ சென்று மறைந்துவிடும் அளவுக்கு காடு சூழ்ந்த தனிமையான ரயில் நிலையம். நல்ல அமைதி. அங்கு நானும் அவனும் உட்கார்ந்து வழக்கம்போல் பேசிக்கொண்டிருந்தோம். “நீ உன் மனைவியுடனோ, அல்லது நான் என் மனைவியுடனோ இருக்க வேண்டிய இந்த அழகான இடத்தில் நாம் இருவரும் உட்கார்ந்து பேசும்படி ஆகிவிட்டது” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். அந்த தனிமை எனக்கு கொஞ்சம் அச்சமூட்டினாலும், இவன் இருக்கையில் ஒரு பயமும் இல்லை என்று தோன்றியது.

சிலமாதங்கள் கழித்து இருவரும் அடுத்தடுத்து இந்தியாவிற்கு வந்தோம். எப்போதும் அவன் என்மீது ஒரு அண்ணனுக்கு உண்டான அதிகாரத்தை தானாக எடுத்துக்கொள்வான். அவன் என்ன சொன்னாலும் நான் கட்டுப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பான். “எனக்கு உடல் வலிக்கிறது. பிடித்துவிடு” என்று அதிகாரமாக சொல்வான் 🙂 இப்போது எங்கள் நிறுவனத்தை விட்டு சென்றுவிட்டான். இருப்பினும் அவ்வப்போது கூகிளில் சாட் செய்யும்போதெல்லாம் “எங்கு வேலை பார்க்கிறாய? என்ன சம்பளம் வாங்குகிறாய்? இந்த வருடம் சம்பள உயர்வு வந்ததா” என்று அதட்டலான கேள்விகளுடன்தான் ஆரம்பிப்பான். ஒருமுறை அவன் இங்கிருக்கும் வீட்டிற்கு என்னை அழைத்திருந்தான். என்னை பார்த்தவுடன் தெருவிலேயே இறுக்க அணைத்துக் கொண்டான். நான் நெகிழ்ந்துபோய் அவன் இறுக்கத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்தாலும் அவன் அளவுக்கு சகஜமாக என்னால் அவனை அணைத்துக்கொள்ள முடியவில்லை. வளர்ந்துவிட்டோம் இல்லையா? என் மனைவியை அவர்கள் வழக்கப்படி அண்ணி என்று அழைத்தாலும் நான் அவனுக்கு தம்பிதான். அண்ணனில்லாத குறையை தீர்க்க வந்தவன். வேறு என்ன சொல்ல?

(தொடரும்)

மைனஸ் ஐந்து டிகிரி குளிரில் வாக்கிங் – வெளிநாடுவாழ் அனுபவங்கள் – 1

முன்னுரை : கடந்த 2011, 12ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியிலும் அங்கிருந்து சுற்றுலாவாக சென்ற மற்ற நாடுகளிலும் ஏற்பட்ட சில விசித்திரமான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று உத்தேசித்தேன். படித்து அனுபவியுங்கள்.

முதன்முதலில் ஜெர்மனிக்கு சென்றபோது நடந்தது இது. சென்னையிலிருந்து ம்யூனிக்கிற்கான பயணத்தை கொஞ்சம் விவரித்துவிட்டு சம்பவத்திற்கு செல்கிறேன். என்னுடன் சேர்ந்து மொத்தம் ஐந்துபேர் என் குழுவிலிருந்து பயணம் செய்தார்கள். அதில் ஒருவர் குடும்பத்துடன். ஆகவே மற்ற நால்வரும் பயணம் ஆரம்பித்ததிலிருந்து கொஞ்ச நாட்களுக்கு ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருந்தோம். அனைவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்து, ஒரே வாடகைக்காரில் விடுதிக்கு சென்று, ஒரே விடுதியில் வெவ்வேறு அறைகள் எடுத்து என்று. சென்னையிலிருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து இன்னொரு விமானத்தில் ம்யூனிக் செல்வதாக திட்டம். சென்னையில் விடிகாலை மூன்று மணிக்கு விமானம். அதற்குமுன் அவ்வளவு நேரம் இரவில் நான் விழித்திருந்ததில்லை என்பது ஒரு புறம். விமானத்தை அருகில் பார்த்ததுகூட இல்லை என்பது இன்னொருபுறம். ஆகவே களைப்பு சோகம் கிளர்ச்சி என்று உணர்ச்சிக்கலவையுடன் காத்துக்கொண்டிருந்தேன். குழுவிலுள்ள மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததால் தூங்காமல் பிழைத்தேன். விமானத்தில் ஏறி அமர்ந்ததும் (இந்த நம்பர் இந்த சீட்டுதானே?) பல்லைக் கடித்துக்கொண்டு விமானம் புறப்படும்வரை காத்திருந்து அது மேலெழுவதை ஒருமாதிரி யூகித்து (ஜன்னலோர இருக்கை கிடைக்கவில்லை) எட்டி எட்டி பார்த்துவிட்டு உடனே தூக்கத்தில் ஆழ்ந்தேன். விமான பணிப்பெண் ஏதோ கேட்க, “கேட்டதற்கு நன்றி. எதுவும் வேண்டாம்” என்று தூக்கத்திலேயே சொல்லிவிட்டேன். துபாயில் தரையிறங்கியபோது உண்மையில் அசந்துபோனேன். வெறும் ஆறு கேட்டுகள் மட்டும் இருக்கும் சென்னை விமான நிலையத்திற்கும், இருநூற்றுக்கும் அதிகமான கேட்டுகள் உள்ள துபாய் விமான நிலையத்திற்கும் உள்ள வேறுபாடு மலைப்பூட்டியது. பின்னர் 2012ல் ஜெர்மனியிலிருந்து கிளம்பும்போது துபாய் விமான நிலையத்தில் டெர்மினல்களுக்கு நடுவில் பயணிக்க ட்ரெயின் அமைத்திருந்தார்கள்! கடும் பசி. “விமானத்தில் எதுவும் சாப்பிடவில்லையா” என்று மற்றவர்கள் கேட்டபோதுதான், நான் அரைத்தூக்கத்திலிருக்கும்போது, விமான பணிப்பெண் என்னிடம் கேட்டது “சாப்பாடு வேண்டுமா” என்பது புரிந்தது. துபாயிலிருந்து ம்யூனிக்கிற்கான பயணத்தின்போதுதான் ஒரு விமானத்தை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரன்வே பகுதிக்கு அருகில் பேருந்தில் பயணம் செய்து, விமானத்தை அடைந்து, படிகளில் ஏறி (கைகாட்டலாம் என்றுகூட பார்த்தேன்) இருக்கையில் அமர்ந்தது போது ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். பெரும்பாலும் வெள்ளையர்கள். துபாய்க்கு வரும் வழியில் அந்த உடனடி தூக்கத்திற்கு முன்னர், நம்மூர் மக்களைத்தான் நிறைய பார்த்தேன். வெள்ளையர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தெரிந்தார்கள். இதில் தொன்னூறு சதவிகிதம் வெள்ளையர்கள்தான். சரி இனிமேல் சில மாதங்களுக்கு இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டேன். ஏற்கனவே பசியில் இருந்ததால், வந்த உணவை ஆவலாக வாங்கி உண்ண ஆரம்பித்தேன். மேற்கத்திய பாணி உணவு அது. கொஞ்சம் நேரத்திலேயே வெறுத்துவிட்டது. காரத்திற்காகவும், மசாலா சுவைக்காகவும் நாக்கு ஏங்க ஆரம்பித்தது. உணவை முடித்தபின் எதிரிலிருந்த டிவி திரையை நோண்ட ஆரம்பித்தேன். சில படங்களை பார்த்தும், தூங்கியும் ஏழுமணி நேரத்தை ஓட்டினேன். ம்யூனிக் வந்தது. மேலிருந்து பார்க்கும்போது பனி பெய்து பெரும்பாலும் வெள்ளையாக காட்சியளித்தது.

சென்று இறங்கிய முதல் நாள் வெப்பநிலை மைனஸ் ஐந்தாக இருந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போதே குளிருக்கான ஆடைகளை அணிந்துகொண்டு விட்டதாலும், வெளியில் வந்தவுடன் ஒரு வாடகைக் காரில் ஏறி அமர்ந்துவிட்டதாலும் குளிர் அவ்வளவு தெரியவில்லை. நாங்கள் விடுதிக்கு சென்றிறங்கியபோது மதியம் மூன்று மணி. விடுதிக்கு சென்று புத்துணர்வூட்டிக்கொண்டு ம்யூனிக்கில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள இரு மேலாளர்களை சந்திப்பதாக திட்டம். அனைவரும் தயாராகி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விடுதியின் வரவேற்பறையில் சந்தித்துக் கொள்வதாக முடிவு செய்துகொண்டு பிரிந்தோம். நான் உள்ளே தெர்மல்வியர் (வெப்பத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் உடை) மேலுக்கும் காலுக்கும், அதற்கு மேல் சட்டை,  பேண்ட், டை, மேலே கோட், அதற்கு மேல் தோலினால் ஆன கனத்த குளிர்தாங்கும் உடை, தலைக்கு தொப்பி என்று அணிந்து கொண்டு கீழே வந்தேன். ஐந்து பேரில் ஒருவர் எல்லாவற்றையும் எல்லாவிதமாக சொதப்புபவர். மீதி நாங்கள் நான்குபேரும் தயாராகி வரவேற்பறைக்கு வந்தும், அவர் வந்துசேரவில்லை. மற்றவர்கள் “அவன் எப்போதும் இப்படித்தான் தாமதமாக்குவான்” என்றார்கள்.  விடுதியிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு செல்லும் வழியை தெரிந்து கொண்டோம். அவர்களிடமே ஒரு காரை அமர்த்திக்கொண்டு தயாராக இருந்தோம். ஆனாலும் அவர் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை அழைத்து வரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு அவர் அறைக்கு சென்றேன். மற்றவர்கள் முகத்தில் ஒரு நமுட்டு சிரிப்பு இருந்ததா என்று இப்போது நினைத்துப் பார்த்தாலும் உறுதியாக சொல்லமுடியவில்லை. அங்கே சென்று பார்த்தால், அவர் தயாராகமலேயே சுற்றிக்கொண்டிருந்தார். எந்த உடை போடுவது என்று குழப்பாமாம். ஒருவழியாக உடையணிந்தபின் கீழே வந்து வரவேற்பறையில் பார்த்தால் வரவேற்பாளிணி தவிர அங்கு யாரும் இல்லை. அந்த காரையும் காணவில்லை. வரவேற்பாளிணியிடம் கேட்டபோது அது அப்போதே சென்றுவிட்டது என்று சொன்னாள். நான் இவரை அழைத்துவர செல்லும்போது, சிரமமாக இருக்கிறதே என்று தொப்பியையும், கையுறைகளையும் அந்த தோலாடையையும் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு சென்றிருந்தேன். அதையும் அங்கு காணோம். நடந்தது இதுதான். நாங்கள் அந்த மேலாளர்களை சந்திக்க செல்வதாக இருந்த நேரத்தில், நேரமாகிறது என்று அவர்களில் ஒரு மேலாளர் எங்கள் குழுவிலிருந்த ஏற்கனவே அங்கு சென்றிருந்த ஒரு இந்தியருடன் சேர்ந்து எங்கள் விடுதிக்கே வந்துவிட்டார். எங்களிருவரைத் தவிர மற்ற மூவரிடமும் பேசிவிட்டு அவர்களின் ஒருவரது அறைக்கு அனைவரும் சென்றுவிட்டார்கள். செல்லும்போது என்னுடைய மேலாடை, தொப்பி ஆகியவற்றையும் கொண்டுசென்றுவிட்டார்கள். அலுவலகத்திற்கு செல்லும் தேவையில்லை என்பதால் அமர்த்தியிருந்த காரையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வரவேற்பாளிணியிடமும் எதுவும் சொல்லவில்லை. நாங்களிருவரும் அங்கு சென்று பார்த்துவிட்டு பின்னர் மற்றவர்களின் அறைக்கு வந்து பார்த்துவிட்டுதான் மேற்கொண்டு முடிவெடுப்போம் என்று அவர்களாக நினைத்துவிட்டார்கள். இங்குதான் திருப்பம் நடந்தது. நாங்களிருவரும் “சரி அவர்கள் ஏற்கனவே நம்மை விட்டுவிட்டு அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்கள், இப்போது நாம் போகவில்லையென்றால் பிரச்சனை வரலாம், முதல் வெளிநாட்டு பயணம் வேறு, திருப்பியனுப்பிவிட்டால் கடினம்” என்று தீர்க்கமாக யோசித்து மறுபடியும் விடுதியின் காரை கேட்டோம். அதற்குள் அது வேறொரு பயணத்திற்கு சென்றுவிட்டது. அதைத்தான் அந்த வரவேற்பாளிணி “ஏற்கனவே சென்றுவிட்டது” என்று எங்களிடம் கூறியிருக்கிறார். சரி வழிதான் தெரியுமே என்று அந்த வரைபடத்தை கையில் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம். ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்லவேண்டும். நடப்பதில் பிரச்சனையில்லை. ஆனால் நான் வெறுமனே கோட்டும் பாண்ட்டும் மட்டுமே அணிந்திருந்ததால் மிகவும் தயங்கினேன். சரி திருப்பியனுப்பிவிட்டால் கஷ்டம் என்று துணிந்து இறங்கினேன். நடக்க ஆரம்பித்தோம்.

ஏறத்தாழ மாலை ஐந்து மணி. நல்ல குளிர். மிக மெலிதாக அங்கங்கே சிறு சிறு பனித்திவலைகள் தூறிக்கொண்டிருந்தது. சாலையில் வாகனங்களைத் தவிர யாருமே இல்லை. நாங்களிருவர் மட்டுமே நடந்து கொண்டிருந்தோம். அவர் என்னிடம் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டுக்கொண்டே வந்தார். “என்னால்தாண்டா உனக்கு இப்படி ஆகிவிட்டது” என்று புலம்பிக்கொண்டே வந்தார். எனக்கு குளிர்தான் பிரச்சனை. மெதுவாக பற்கள் கிட்டிக்க ஆரம்பித்தன. விரைவில் மூக்கும் சில்லிட்டு விட்டது. உள்ளே செல்லும் குளிர்காற்று உடலின் வெப்பநிலையை குறைத்துக் கொண்டே செல்வதுபோல் பிரமை. வந்த முதல் நாளே இறந்துவிடுவேனோ என்று தோன்றியது. வாயை மூடிக்கொண்டு நடப்பதில் பிரச்சனையில்லை. ஆனால் வரைபடத்தை பார்த்து முடிவுகள் எடுக்க அடிக்கடி பேச வேண்டியிருந்தது. உடனே பற்கள் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிடும். அப்போதெல்லாம் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்துவிடுவார். இப்படி கூத்தடித்துக்கொண்டு சென்றோம். கையுறைகள் இல்லாததால் கைகள் விறைக்க ஆரம்பித்தன. கையை தொடர்ந்து திறந்தும் மூடியும் சமாளித்தேன். உள்ளங்கை நன்றாகவே வெளுத்துவிட்டது. ஒருவழியாக அலுவலகத்தை சென்றடைந்தோம். அலுவலகத்தை நெருங்கியவுடன் அவரை விட்டுவிட்டு ஓடிச் சென்று கதவைத் திறந்து அங்கிருந்த ஹீட்டரின் அருகில் நின்றுகொண்டேன். உடல் மெதுவாக வெம்மை கொண்டு மீண்டது. பின்னர் அங்கிருந்த வரவேற்பாளிணியிடம் விசாரித்தபோது, அந்த இரு மேலாளர்களும் கிளம்பிவிட்டனர் என்று சொல்லி, அவர்களில் ஒருவருக்கு போன் செய்து கொடுத்தாள். அந்த மேலாளர்,எங்கள் விடுதிக்கு வந்தவரைத் தவிர மற்றவர். அவர்
எங்களிடம் தகவலை சொல்ல நானோ பதட்டத்தில் “நான் என்னுடைய விடுதிக்கு சென்றுவிட்டேன். நாளை பார்க்கலாம்” என்று அவர் சொன்னதாக புரிந்துகொண்டேன். சரி எப்படியும் ஆள் இங்கு இல்லை. நாளை பார்த்து மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று போனை வைத்துவிட்டேன். இப்போது மறுபடியும் நடக்கவேண்டும். ஆரம்பித்தோம்.

மறுபடியும் குளிர். மறுபடியும் மூக்கு சில்லிடல், நுரையீரல் குளிர்தல், பற்கள் கிட்டித்தல். ஆனால் இந்தமுறை பாண்ட் பைகளுக்குள் கையை வைத்துக்கொண்டால் கொஞ்சம் இதமாக இருப்பதை உணர்ந்தேன். உடலை குறுக்க குறுக்க அது சூடை உண்டுபண்ணும் என்று முன்பொருமுறை படித்தது நினைவுக்கு வந்தது. ஆகவே பாண்ட் பைகளுக்கு கைவிட்டுக்கொண்டு உடலை நன்றாக குறுக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கால்களை எடுத்து வைக்கும்போதும் முடிந்தவரை உரசி உரசி நடந்து சென்றேன். உள்ளே குளிர் தாங்கும் தெர்மல்வியர் அணிந்திருந்ததால், உடல் ஓரளவு சூட்டை உற்பத்தி செய்தது. திரும்பும் வழி தெரியுமாதலால் பேசவேண்டிய நிர்பந்தமும் இல்லை. புலம்பிக்கொண்டே வந்தவரிடம் “இதோ பார். நீ கேட்கும் எதற்கும் நான் பதில் சொல்லும் நிலையில் இல்லை. எதுவாக இருந்தாலும் விடுதிக்கு சென்று பேசிக்கொள்ளலாம்” என்று கடுப்படித்துவிட்டு நடந்தேன். இம்முறை நன்றாகவே சமாளித்துவிட்டேன். மூக்கை அவ்வப்போது புஜப்பகுதியில் உடையில் தேய்த்துக்கொண்டு வந்தேன். விடுதிக்கு வந்தவுடன் மறுபடியும் ஹீட்டரின் அருகே நின்று மீட்டுக்கொண்டேன். காத்திருந்த நண்பர்கள் நடந்ததனைத்தையும் கேட்டு, அங்கே நடந்தவற்றையும் சொல்ல,  ஒரே சிரிப்பு. அதன்பின்னர் அந்த தோல் மேலாடை என் உடலின் அங்கமாகவே ஆகிவிட்டது. அது இல்லாமல் அறையை விட்டு வெளியே வருவதேயில்லை என்று உறுதி செய்து கறாராக பின்பற்றி வந்தேன்.

(தொடரும்)

Munich-ல் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது

இந்த வலைப்பூவின் தொடக்கப் பதிவாக இது அமைந்தது துரதிருஷ்டம்தான். இருப்பினும் செய்தியின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இச்செய்தி பதியப்படுகிறது.

நான் வேலை நிமித்தமாக ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இங்கு சென்ற திங்கட்கிழமை (28/08/2012), இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்டு, வெடிக்காமல் பூமியில் அமிழ்ந்து போன ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப் பட்டது!

அந்த குண்டு…
நன்றி : www.dailymail.co.uk

நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், தற்போது ஒரு கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்போது இந்த வெடிகுண்டு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சுமார் 2500 மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினிருந்து, வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். எனினும், வெடிகுண்டை செயலிழக்க வைப்பது மிகக் கடினம் என்று ஆனதால், பாதுகாப்பான முறையில் 29/08/2012 இரவு 9.54 மணியளவில், வெடிக்க வைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை இங்கு காணலாம்.

இருப்பினும் அருகில் இருந்த கட்டடங்களுக்கு சிறிய அளவில் சேதங்கள் இருந்தன. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருப்பதை இந்த வீடியோவில் காணலாம். இது தொடர்பாக இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவல்கள்.

 • 250 கிலோ எடையுள்ளது இந்த வெடிகுண்டு.
 • எந்த நாட்டால் இது வீசப்பட்டது என்று தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் ப்ரிட்டன் ஆகிய இருநாடுகளும் இவ்வகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளன.
 • ஒவ்வொரு வருடமும் ஜெர்மனியில் 600 டன் எடையுள்ள இம்மாதிரி வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டெடுக்கப் படுகின்றன.
 • இருப்பினும் பொதுவாக இம்மாதிரி குண்டுகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கண்டெடுக்கப் பட்டதில்லை.
 • 2010 வருடம், இது போன்ற ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்த முயற்சியில் 3 வெடிகுண்டு நிபுணர்கள் உயிரிழந்தனர்.
 • இந்த வெடிகுண்டு ரசாயனப் பொருட்களை கொண்டிருந்ததால் இதை செயலிழக்கச் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
 • இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வீசப்பட்ட குண்டுகளில் 8ல் ஒன்று இம்மாதிரி வெடிக்காமல் பூமியில் அமிழ்ந்து போயுள்ளது.
 • ம்யூனிக் நகரின்மீது மட்டும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சுமார் 50,000 குண்டுகள் வீசப்பட்டுள்ளன!
 • இன்னமும் 2500 வெடிகுண்டுகள் (மொத்த எடை 2,85,000 டன்), இது போன்று வெடிக்காமல் பூமியில் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 • மேலும் இவை கண்டெடுக்கப் படும் முன்னரே வெடிக்கும் அபாயமும் உள்ளது!
 • கடந்த 2006ம் ஆண்டு ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி இப்படிப்பட்ட விபத்தால் உயிரிழந்துள்ளார். அவர் பயன்படுத்திய புல்டோசர் இவ்விபத்தில் சுமார் 60 அடி உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டுள்ளது!

நேற்று (29/08/2012) நான், இந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்தேன். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இது குறித்து என்னிடம் பேசிய ஒருவர் “ஜெர்மனி செய்தது மன்னிக்க முடியாத ஒரு தவறுதான். அதற்காக இவ்வளவு பெரிய பழிதீர்த்தலா?” என்று நொந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை சாதாரணமாக தாண்டிப் போனவர்களையும் காண முடிந்தது. போர் முடிந்து 60+ ஆண்டுகள் கழிந்தும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட அனைவரது துயரங்களும் மீண்டும் மீண்டும் கிளரப்படுகின்றன என்றே தோன்றுகிறது.

வெடிகுண்டை வீசியவர்களும் இல்லை. வெடிகுண்டை வீச ஆணையிட்டவர்களும் இல்லை. வீசப்படுவதற்குக் காரணமானவர்களும் இல்லை. வெடிகுண்டுகள் மட்டும் இருக்கின்றன. 60க்கும் மேற்பட்ட வருடங்கள் கழிந்தும் பழிதீர்க்கின்றன. என்னிடம் பேசிய அந்த நபர் கூறியது போல் “மீண்டும் இது போல் ஒரு கொடுமை உலகத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும்”.

நன்றி:

http://www.dailymail.co.uk
http://media.brisbanetimes.com.au